ஜம்முனு வாழ காம்கேரின் OTP-208: உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்!

பதிவு எண்: 939 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 208
ஜூலை 27, 2021

உங்கள் கதையின் கருவை சொல்லுங்கள் கம்ப்யூட்டர் கதை எழுதித்தரும்!

இன்றைய பதிவில் இணைத்துள்ள இரண்டு படங்களையும் பாருங்கள்.

ஒன்று பிட்டு பிட்டாக எழுதிய தகவல்களை கம்ப்யூட்டர் கோர்வையான தகவலாக மாற்றியுள்ளது.

என்ன கம்ப்யூட்டர் எழுதியதா என அதிசயிக்கிறீர்களா?

மற்றொன்று ஒரு படம். அதை வரைந்தது ஏதோ ஒரு பள்ளி சிறுவனோ அல்லது சிறுமியோ என நினைத்துவிடாதீர்கள். ஒரு கம்ப்யூட்டர் வரைந்ததுதான் அது.

என்ன கம்ப்யூட்டர் வரைந்ததா என அதிசயிக்கிறீர்களா?

ஆமாம். ‘கோடு போட்டால் ரோடு போடுவார்கள்’ என்று அதீத புத்திசாலிகளை உருவகப்படுத்துவார்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதைத்தான் இன்றைய தொழில்நுட்பம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் ஆங்கிலத்தில் Artificial Intelligence (‘ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’). தமிழில் செயற்கை நுண்ணறிவு.

நமக்கு படம் வரையத் தெரிய வேண்டியதில்லை. மீன் போல ஒரு மாதிரி கோடு போட்டு கிறுக்கினாலே ‘நீங்கள் வரைய விரும்புவது மீனா அல்லது திமிங்கிலமா அல்லது டால்ஃபினா என கேட்டு அந்த உருவத்தை உங்கள் கண்முன் காட்டும். அதில் இருந்து நீங்கள் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்தால் அது தானாகவே நீங்கள் நினைத்த மீனையோ அல்லது திமிங்கிலத்தையோ அல்லது டால்ஃபினையோ வரைந்துவிடும். பின்னர் என்ன கலர் வேண்டுமோ அதை நிரப்பிக்கொள்ளலாம்.

அதுபோல கதைகளையும் கவிதைகளையும் கூட தொழில்நுட்ப உதவியுடன் கம்ப்யூட்டரே எழுத ஆரம்பிக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது. ஏற்கெனவே சிறிய அளவில் இது இயக்கதில் உள்ளது. இது வருங்காலத்தில் விஸ்வரூபமெடுக்கும்.

எல்லோருக்கும் எழுதத் தெரியாது. ஆனால் நிறைய விஷயங்கள் தெரியும். அவர்கள் அதை தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பிட்டு பிட்டாக எழுதினால் கூட அது தானாகவே கதையாக மாறிவிடும் அல்லது கவிதையாக மாறிவிடும். நாம் எப்படி நம் படைப்பைக் கொண்டுவர விரும்புகிறோமோ அப்படி மாற்றிவிடும். உங்களுக்குத் தெரிந்ததை நேர்த்தியாகவோ அல்லது கோர்வையாகவோ இல்லை என்றால்கூட பரவாயில்லை, அதை அப்படியே டைப் செய்துகொண்டு, சாஃப்ட்வேரில் ஏற்கெனவே உள்ள கதை அல்லது கவிதை டெம்ப்ளேட்டில் இருந்து ஒரு மாதிரியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் அந்த மாதிரியில் உள்ள டெம்ப்ளேட்டுக்கு ஏற்றவாறு நீங்கள் டைப் செய்த விவரம் கதையாகவோ அல்லது கவிதையாகவோ மாறிவிடும்.

இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே பல விஷயங்களில் நிறுவப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனையகங்களில் நமக்கு விருப்பமான பொருளை தேடும்போது அது தானாகவே அதற்குத் தொடர்பான புது ட்ரெண்டிங்கில் வந்திருக்கும் பொருட்களை நமக்கு எடுத்துக் காட்டி ‘இதெல்லாம் புதுசு’ என சொல்லுவதை கவனித்திருப்பீர்கள். இது செயற்கை நுண்ணறிவுதான்.

நமக்கு வந்திருக்கும் இமெயிலுக்கு பதில் அனுப்புவதற்காக டைப் செய்யும்போது நாம் டைப் செய்யத் தொடங்கும்போதே அது சில வார்த்தைகளை எடுத்துச் சொல்லி நமக்கு ஆலோசனைக் கொடுக்கும். அதில் இருந்தே அந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுவும் செயற்கை நுண்ணறிவுதான்.

போலவே, மொபைல் கீபோர்டில் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் அனுப்புவதற்காக டைப் செய்யும்போதோ அல்லது எம்.எஸ்.வேர்டில் டைப் செய்யும்போதோ நாம் பிழையாக டைப் செய்வதை தானாகவே சரி செய்யும் நுட்பமும் (Autocorrect) செயற்கை நுண்ணறிவின் கீழ்தான் வரும்.

கூகுளில் நாம் எதையோ தேடுவதற்காக டைப் செய்யும்போது அது தானாகவே சில விஷயங்களை பட்டியலிடும். அதில் இருந்து நாம் தேடுவதற்கான விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவும் செயற்கை நுண்ணறிவுதான்.

ஃபேஸ்புக்கில் நாம் புகைப்படங்களை இணைக்கும்போது அது தானாகவே அந்த புகைப்படத்தில் உள்ள நபரின் பெயரை கண்டுபிடித்து Face Recognition செய்து சம்மந்தப்பட்ட அந்த நபரை Tag செய்யட்டுமா என கேட்கும் கவனித்திருப்பீர்கள். அதுவும் செயற்கை நுண்ணறிவே.

கூகுள் மேப் நாம் சென்றடையும் இடத்துக்கு வழிகாட்டுவதும் செயற்கை நுண்ணறிவுதான்.

நாம் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் Siri போன்ற டிஜிட்டல் அஸிஸ்டென்ஸ்கள் கூட செயற்கை நுண்ணறிவே. உதாரணத்துக்கு கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது வீட்டில் அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அல்லது வேறு யாருக்கோ போன் செய்து டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறேன், வரத் தாமதமாகும் என்ற தகவலை சொல்ல வேண்டும் என்றால் போனை கைகளால் எடுத்து டயல் செய்ய வேண்டியதில்லை. ஐபோனில் Siri வசதியின் மூலம் உங்கள் போனில் உள்ள தொடர்பு எண்களில் இருந்து நீங்கள் விரும்பும் நபரின் பெயரைத் தேர்ந்தெடுத்து வாயால் பேசி அழைத்து போனில் பேசலாம்.

இப்படி எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு மனிதனின் மூளையின் திறனை பெருமளவு குறைப்பதற்கும் வாய்ப்புண்டு.

இன்றே இண்டர்நெட் இணைப்பும், கூகுளும் இல்லை என்றால் நம்மில் முக்கால்வாசி பேருக்கு எந்த விஷயம் குறித்தும் நான்கு வார்த்தைகள் தொடர்ச்சியாக பேச முடிவதில்லை. சாதாரணமாக 7-ஐ, 8-ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும் என்று கேட்டால் கூட கூகுளில் 7 * 8 டைப் செய்து 56 என்று அது காட்டினால் மட்டுமே நமக்கு நம்பிக்கை வருகிறது. மனப்பாடமாக வாய்ப்பாடெல்லாம் படித்த காலங்கள் மலை ஏறிவிட்டன.

எதையுமே மனதுக்குள் வைத்திருக்க வேண்டியதில்லை. நம் எல்லா தேவைகளையுமே இயந்திரம் செய்கிறது. நமக்காக சிந்திக்கவும் செய்கிறது. நம் மூளையை நாம் செயல்படுத்தாமல் முழுக்க முழுக்க இயந்திரம் இயக்கி வைக்கும் காலத்தில் வாழ்கிறோம். இதன் உச்ச கட்டம் நம்மை எங்கோ அழைத்துச் செல்ல இருக்கிறது.

இந்த வளர்ச்சி நல்லதுக்கா, கெட்டதுக்கா?

என் அடுத்த தொழில்நுட்ப புத்தகம்: செயற்கை நுண்ணறிவும், மனித மூளையும். மிக விரைவில்! அதற்காக ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது அதன் தாக்கத்தில் இன்றைய பதிவு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon