ஜம்முனு வாழ காம்கேரின் OTP-210: நீங்களும் கேட்கலாம்!

பதிவு எண்: 941 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 210
ஜூலை 29, 2021

நீங்களும் கேட்கலாம்!

அவ்வப்பொழுது வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்து வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மீண்டும் அந்த வாய்ப்பு. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பின்னூட்டமிடுங்கள்.  கேள்வி கேட்ட உங்கள் பெயரை குறிப்பிட்டு தனிப்பதிவாகவோ அல்லது இங்கு பின்னூட்டத்திலேயே பதிலாகவோ பதிவிடுகிறேன். கேள்விகள் கல்வி, வேலைவாய்ப்பு, உளவியல், வாழ்வியல், தொழில்நுட்பம் இப்படி பொதுவாக இருந்தால் அவை உங்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் பயனுள்ளதாக அமையப்பெறும். #ask_CKB

நீங்கள் சிறு வயதில் எதற்காக அதிகம் அழுதிருக்கிறீர்கள்?

நான் காரணத்தைச் சொன்னால் உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். என் பத்து வயதில் இருந்து எழுத ஆரம்பித்துவிட்டேன் என சொல்லி இருக்கிறேன் அல்லவா? எல்லா நாட்களும் எழுதுவதற்கு கான்செப்ட் கிடைக்காது. எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தும் கான்செப்ட் கிடைக்காத நாட்களில் அழுகை அழுகையாக வரும். அதற்காக அழுதிருக்கிறேன்.

கல்லூரி நாட்களில் உங்களுக்குள் இருந்த விநோதமான ஒரு பழக்கத்தை சொல்ல முடியுமா?

கல்லூரி நாட்களில் நான் வகுப்பில் நடக்கும் பாடங்களை வீட்டிற்கு வந்ததும் எனக்குப் புரிவதைப் போல நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். கிட்டத்தட்ட ஒரு புத்தகம் எழுதுவதைப் போல்தான் அந்த வேலையும். அப்படி எழுதும்போது பெரும்பாலும் அடித்தல் திருத்தல்களே இருக்காது. அப்படியே தப்பித் தவறி அடித்தல் திருத்தல்கள் வந்துவிட்டால் அந்த பக்கத்தை அப்படியே கிழித்துப் போட்டுவிட்டு புதிதாக எழுதுவேன். பேப்பரை வீண் செய்வது தவறுதான் என்றாலும், என்னால் ஒரு அடித்தல் திருத்தல் வந்துவிட்டாலே அடுத்த ஒரு வரியைக் கூட எழுத முடிந்ததில்லை.  ஆனால் ஒன்று, நான் வீணடித்த காகிதங்களின் எண்ணிக்கை குறைவுதான்.

நிறுவனம் தொடங்கிய பிறகு மற்றவர்கள் உங்களை வியப்பாக பார்த்த தருணங்களில் நீங்கள் மிகவும் ரசித்தது?

காம்கேர் நிறுவனம் தொடங்கியபோது என் வயது 22. அந்த நாட்களில் முதல் தலைமுறை பிசினஸ் பெண் என்பதால், என் திறமைகளையும் எங்கள் காம்கேரின் தயாரிப்புகளையும் தொலைக்காட்சி, பத்திரிகைகள் என அனைத்து மீடியாக்களும் கொண்டாடின. நேர்காணல்கள் வராத பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு என் உழைப்புக்கான அங்கீகாரத்தை மீடியாக்கள் கொடுத்தன. இன்றும் அப்படியே.

அப்படி தொலைக்காட்சி நேர்காணல்களுக்கு செல்லும் நாட்களில் அங்குள்ளவர்கள் என்னை வியப்பாக பார்த்திருக்கிறார்கள். ஏன் மேலும் கீழும் ஏற இறங்கக் கூட பார்த்திருக்கிறார்கள்.

என்னவாக இருக்கும் சொல்லுங்கள். கணிக்க முடிகிறதா?

‘நேர்காணலுக்கு வேறு உடை மாற்றப் போகிறீர்களா’ என கேட்பார்கள்.

‘ஏன் இந்த உடைக்கு என்ன?’ என்று கேட்பேன்.

‘இல்லை, மிகவும் சிம்ப்பிளாக இருக்கிறதே?’ என சொல்வார்கள்.

‘எளிமையான உடையில்தான் என்னால் இயல்பாக செயல்பட முடியும். எளிமைதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது…’ என்று பதில் சொல்வேன்.

என் அலுவலகத்தில் பணியாற்றும் பொறியாளர்கள்கூட ‘மேடம் பட்டுப் புடவை கட்டிச் செல்லலாமே… டிவி பேட்டியாச்சே…’ என சொல்லி இருக்கிறார்கள். அந்த நாட்களில் பெண்களுக்கு பட்டுப் புடவைதான் அதிகபட்ச பகட்டான உடை. நான் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கே பட்டுப் புடவை எல்லாம் அணிந்துகொள்ள மாட்டேன் என்பது அவர்களுக்கு தெரியாதல்லவா?

நாட்கள் செல்ல செல்ல எனக்கான Dress Code – ஐ நான் வடிவமைத்துக்கொண்டேன். என் எளிமையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் நான் அணிந்துகொள்ளும் எளிமையான உடைக்கு மேல் ஒரு ‘கோட்’ அணியத்தொடங்கினேன். பெரும்பாலும் அடர் நீல கலர் அல்லது கருப்பு கலர். எளிமைக்கு மேலும் மகுடம் சூட்டுவதைப் போல தோன்றும். அலுவலகம், மீட்டிங், ஷீட்டிங், பேட்டிகள், அலுவலக நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் இப்படித்தான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 799 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon