ஜம்முனு வாழ காம்கேரின் OTP-212: போதை (?!) ஏற்றிக்கொள்ளுங்கள், நினைத்து நடக்கும்!

பதிவு எண்: 943 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 212
ஜூலை 31, 2021

போதை (?!) ஏற்றிக்கொள்ளுங்கள், நினைத்து நடக்கும்!

1.உங்கள் உடம்பு நீங்கள் சொல்வதை கேட்க வேண்டுமா?

நம் உடம்பும் மனதும் நாம் சொல்வதை கேட்க வேண்டும் என்றால் சூரிய உதயத்துக்கு முன் எழுந்துகொள்ள வேண்டும்.

2.என்னால் எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு தூக்கம் வருகிறதே?

தினமும் நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.

3.அப்போதும் எழுந்துகொள்ள முடிவதில்லையே?

ஒரு விஷயத்தைச் செய்ய கமிட்மெண்ட் ஏதேனும் இருக்க வேண்டும் அல்லது அந்த நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய பழக வேண்டும்.

4.புரியவில்லையே?

குழந்தைப் பெற்றெடுத்த அம்மாக்களை கவனித்திருக்கிறீர்களா? பிறந்த குழந்தை எப்போது தூங்கும், எப்போது விழித்துக்கொள்ளும், எப்போது சிணுங்கும், எப்போது பெருங்குரல் எடுத்து அழும் என்றெல்லாம் தெரியவே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற தயார் நிலையிலேயே மனது இருக்கும் அந்த தாய்க்கு. குழந்தையின் சிறு அசைவில்கூட அந்த தாய் கண் விழித்துக்கொண்டுவிடுவாள். குழந்தைக்கு பால் வேண்டுமானால் கொடுக்க வேண்டும், தாயின் தோள் அணைப்புக்கு ஏங்கி அதற்கு அழத் தொடங்கினால் தோளில் சாய்த்து அது தூங்கும்வரை கை அசைக்காமல் மரத்துப் போகும் கைவலியுடன் தட்டிக்கொடுக்க வேண்டும், இயற்கை கடன்களுக்கு உடையை நனைத்துக்கொண்டால் அதையும் உடனுக்குடன் மாற்ற வேண்டும். இதெல்லாம் இரவு ஒரு மணியாக இருந்தாலும் செய்ய வேண்டும், இரண்டு மணியாக இருந்தாலும் செய்ய வேண்டும். நேரம் காலம் எல்லாம் அவளுக்குக் கிடையவே கிடையாது. என்னதான் வீட்டில் மற்றவர்கள் உதவினாலும் அவள் மட்டுமே நூறு சதவிகித விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இருக்கவும் செய்வாள். அதுதான் இயற்கையும்கூட. அவளால் மட்டும் எப்படி முடிகிறது. அதற்குப் பெயர்தான் கமிட்மெண்ட்.

இதே கமிட்மெண்ட்டை சிங்கிள் பேரண்டாக இருந்து குழந்தையை வளர்க்கும் தாய்களிடமும் காண முடியும். தந்தைகளும் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஒப்பீட்டுக்காக தாயைக் குறிப்பிட்டுள்ளேன்.

காலையில் வீடுவீடாக சென்று பேப்பர் / பால் போடும் ஏஜெண்ட்டுகளும் நாள் தவறாமல் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இதுபோன்ற கமிட்மெண்ட் இருப்பவர்களுக்கு எதுவும் சாத்தியமே.

உங்கள் உடம்பு நீங்கள் சொல்வதைக் கேட்க மற்றொரு வழி உள்ளது. அதாவது காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்ததும் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்துகொள்ளலாம். காலைக்கடன்களை முடித்துவிட்டு நேராக சமையல் அறை சென்று தினப்படி வேலைகளை ஆரம்பித்துவிடாமல் அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உங்களுக்கான நேரமாக வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் உங்களுக்கே உங்களுக்கான பிடித்தமான வேலையை செய்யப் பழகினால் நிச்சயமாக காலையில் அந்த நேரத்தை அனுபவிக்க தூக்கமே உங்களை எழுப்பிவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

வீட்டுப் பாடத்தை முடித்தால் மொபைலில் கேம்ஸ் விளையாடலாம் அல்லது பிடித்த தின்பண்டம் சாப்பிடலாம் அல்லது டிவியில் கார்ட்டூன் ஷோ பார்க்கலாம் என்பதுபோன்ற நிபந்தனையுடன் குழந்தைகள் வீட்டுப்பாடத்தை விரைவாக முடிக்கும் யுக்திதான் இது.

ஒரு விஷயத்தில் அதீத ஆர்வத்தைத் தூண்டி, மற்றொரு விஷயத்தை முடித்துக்கொள்ளும் சூட்சுமம்தான் இது.

5.எனக்கு என்ன அதீதமாக பிடிக்கும் என எனக்குத் தெரியவில்லையே?

யோசியுங்கள். உங்கள் சிறு வயதுக்கு உங்கள் மனதை ‘ரீவைண்ட்’ செய்து உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்னென்ன இருந்திருந்தன, சூழலினாலோ அல்லது காலமாற்றத்தினாலோ அந்த விஷயங்களை நீங்கள் தொடர முடியாமல் போனதற்கான காரணங்களை யோசியுங்கள். அதில் ஒன்று உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையாக இருந்திருக்கலாம். அதை கண்டுபிடியுங்கள்.

6.பல வருடங்களாக காலை ஏழு மணிக்கு எழுந்தே பழக்கப்பட்ட எனக்கு இதெல்லாம் சாத்தியமா?

நிச்சயம் சாத்தியமே. எல்லாமே பழக்கம்தான். நான் பழக்கம் என்பதை போதை என்று சொல்லும் அளவுக்கு அதன் வீரியத்தை வைத்துக்கொள்வேன். காலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்துகொள்வது என் சிறுவயது பழக்கம். என் கனவுகளைத் துரத்த ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். ஏற்படுத்திக்கொண்ட பழக்கம் என்று சொல்வதைவிட தானாகவே ஏற்பட்ட பழக்கம் என்றுகூட சொல்லலாம். பள்ளி / கல்லூரி நாட்களில் என் ஒட்டுமொத்த நேரமும் படிப்பதற்காக செலவழிய என் திறமைகளை வளர்த்தெடுக்க நேரம் கிடைக்காமல் போக, நான் தேர்ந்தெடுத்தது பிரம்ம முகூர்த்த நேரம். என் சக மாணவ மாணவிகள் எல்லோரும் பரிட்சைக்கு இரவு 11 மணி, 12 மணி வரை படிப்பார்கள். நான் 10 மணிக்கு தூங்கிவிடுவேன். விடியற்காலை 3 மணிக்கு எழுந்துதான் படிப்பேன். அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

அதன் நீட்சியாக இப்போதெல்லாம் வேலை நிமித்தம் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் விழிப்பு என்னவோ ‘ டான்’ என மணி அடித்தாற்போல காலை 3 மணிக்கு.

இதை நான் மாற்றிக்கொள்ள நினைத்தாலும் முடியவே முடியாது. உடம்பு சரியில்லாமல் இருந்தால்கூட விழிப்பு அந்த நேரத்துக்கு வந்துவிடும். படுக்கையில் படுத்திருக்கவே மனம் வராது. எழுந்து வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு மனதை செலுத்தினால் மட்டுமே உடலும் ஒரு நிலைக்கு வரும்.

இதனால்தான் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் என்பதைவிட போதையாக்கிக்கொள்ளுங்கள் என்கிறேன்.

நல்ல விஷயங்களின் மீதான போதை உங்கள் நல்வழிப்படுத்தும். தீய விஷயங்கள் மீதான போதை உங்கள் சீரழிக்கும்.

போதையின் தீவிரத்தை நல்ல விஷயங்களில் செலுத்தி அதை பெருக்கிக்கொள்ள பயன்படுத்த வேண்டும். தீய விஷயங்கள் மீதான உங்கள் போதையை அதைவிட தீவிரமான ஆதிக்கம் உள்ள போதையினால் அடியோடு வேரறுக்க வேண்டும்.

போதை என்பது தவறான வார்த்தை அல்ல. தீவிரம் என்பதன் பிரமாண்ட வெளிப்பாடே போதை.

7.ஓரளவுக்குப் புரிகிறது. ஆனால் முடியுமா என தெரியவில்லையே?

முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமலேயே முடியுமா என்ற சந்தேகம் வேண்டாம்.

இந்த கேள்வி பதில்கள் என்ன என்று பார்க்கிறீர்களா?

எங்கள் அலுவலகத்தில், என் கிளையிண்ட்டுகளுடன், என்னிடம் உளவியல் ஆலோசனைக்காக வருகின்றவர்களிடம் அடிக்கடி நடக்கின்ற உரையாடல்கள் இவை. உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தால் முயற்சியுங்கள். வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 894 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon