பதிவு எண்: 942 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 211
ஜூலை 30, 2021
சினிமா எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது? ஏன் அத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்?
இதெல்லாம் ஒரு விஷயமா? இதற்கெல்லாம் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விட முடியும் தானே என நினைக்காதீர்கள். பொத்தாம் பொதுவாக அந்தப் படம் அரசியல் குறியீடுகள் உள்ளன, அந்தப் படத்தில் சாதி குறித்து பேசியிருக்கிறார்கள், அந்தப் படத்தில் ஆபாசம் அதிகம் இருக்கிறது இதனால்தான் அந்த சினிமாக்கள் மக்களால் அதிகம் விரும்பப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் நம் அனுமானங்கள் மட்டுமே. உண்மையான காரணத்தை துல்லியமாக அறிய தொழில்நுட்பமே கைகொடுக்கிறது.
இதற்கெல்லாம் கூட தொழில்நுட்பமா?
ஒரு கைதிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், வெறும் சிறை தண்டனையா, ஆயுள் தண்டனையா, மரண தண்டனையா என்பதை எல்லாம்கூட தொழில்நுட்பம் முடிவு செய்யும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.
அப்படி இருக்கும்போது ஒரு திரைப்படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது, ஏன் அத்தனை பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியாதா என்ன?
இதற்கு பிக் டேட்டா (Big Data), திக் டேட்டா (Thick Data) என்ற இரண்டு தொழில்நுட்ப விவரங்கள் உதவுகின்றன.
பிக் டேட்டா என்பது என்ன எங்கே எப்போது நடந்தது என்பதை சொல்லும் குவாண்டிடேட்டிவ் (quantitative information) தகவலைக் கொடுக்கும். திக் டேட்டா என்பது அது நடந்ததற்கான காரணத்தைச் சொல்லும் குவாலிடேட்டிவ் (qualitative information) தகவலைக் கொடுக்கும்.
ஒரு நிகழ்வு எங்கே, எப்போது நடந்தது என்பதை பிக் டேட்டாவும், ஏன் எப்படி எதற்காக நடந்தது என்பதை திக் டேட்டாவும் சொல்லும்.
இரண்டுமே அனலிடிக் எனப்படும் ஆராய்ந்தறியும் ஆய்வைத்தான் செய்கிறது. பிக்டேட்டா என்பது ஒரு விஷயத்தை, சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிகமான தகவல்களில் பல கோணங்களில் ஆராய்கிறது. திக்டேட்டா என்பது அதே விஷயத்தை என்னென்ன வாய்ப்புகளில் அது நடந்திருக்கும் என ஆராய்கிறது. இதுதான் இரண்டுக்குமான வித்தியாசம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு திரைப்படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை பிக் டேட்டா கொடுக்கும். ஏன் அத்தனை பேரால் பார்க்கப்பட்டது என்பதையும் அப்படி என்ன சிறப்பம்சம் அந்தத் திரைப்படத்தில் என்பதையும் திக் டேட்டா சொல்லும்.
பிக் டேட்டா பரவலாகவும் (Broad), திக் டேட்டா ஆழமாகவும் (In-Depth) தகவல்களை ஆய்வு செய்கிறது.
பிக் டேட்டாவோ, திக் டேட்டாவோ எந்த டேட்டாவாக இருந்தாலும் அவை எத்தனைக்கு எத்தனை தொழில்நுட்பத்துக்கு உதவுகின்றனவோ, அத்தனைக்கு அத்தனை மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
நம் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் CCTV காமிரா மூலம் நாம் அனைவருமே படம்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நாம் எண்ணுவதைக்கூட படம்பிடித்துக்காட்டும் தொழில்நுட்பம் வரும்காலம் தொலைவில் இல்லை.
தொழில்நுட்பத்தை நாம் பொழுதுபோக்கு அம்சத்துக்கு மட்டும் பயன்படுத்தாமல் நம் பாதுகாப்புக்கும் பயன்படுத்த கற்றுக்கொள்ளல் அவசியம்.
சமீபத்தில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு. புதுக்கோட்டையில் வசிக்கும் ஒருவர் தன் மொபைல் போனை (ஸ்மார்ட் போன் அல்ல, சாதாரண மாடல் மொபைல் போன்) தொலைத்துவிட்டார். அந்த சிம்மை பிளாக் செய்து வேறு சிம் வாங்கும் இடைவெளியில் அவர் குடும்பத்துப் பெண்களுக்கு தொடர்ச்சியாக வெவ்வேறு மொபைல் எண்களில் இருந்து ஆபாச போன் அழைப்புகள். தொலைந்த மொபைலில் உள்ள எண்களில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களுக்கு மட்டும் போனை திருடிய நபர் போன் செய்து டார்ச்சர் கொடுத்துள்ளான். அதுவும் வெவ்வேறு சிம் கார்ட் வாங்கி அந்த எண்கள் மூலம்.
ஸ்மார்ட் போனாக இருந்தால் போனை திருடிய நபர் ஆப் மூலம் தொடர்பு எண்களை டிஜிட்டல் வடிவில் வேறு சாதனத்தில் இறக்கிவிட எத்தனை நேரமாகிவிடப் போகிறது?
போனை தொலைத்தவர் குடும்பம் தங்களுக்கென வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் குட் மார்னிங் மெசேஜ், குட் நைட் மெசேஜ் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள், நண்பர்களின் புகைப்படங்கள் இவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அவர்கள் ‘போன் தொலைந்துவிட்டது. இந்தெந்த எண்களில் இருந்து அழைப்பு வருகிறது… எனவே கவனமாக இருங்கள்’ என்ற எச்சரிக்கைத் தகவலை அதில் கடைசிவரை போடவே இல்லை.
இதன் காரணமாய் அவர் மனைவி, பெண் குழந்தைகள் மட்டுமல்ல அவர் குடும்பத்து அக்கா, தங்கை, மாமி, பாட்டி, மாமியார், மச்சினி என அத்தனை பெண் உறுப்பினர்களுக்கும் ஆபாச போன் அழைப்புகள். காது கொடுத்து கேட்க முடியாத அளவு வசவு வார்த்தைகள். தீராத மன உளைச்சல்.
அவர்கள் குடும்பத்தில் ஏற்கெனவே தகறாரில் இருந்த ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கை இதே போன் அழைப்பை காரணம் காட்டி விவாகரத்துவரை சென்றுவிட்டது.
வாட்ஸ் அப் குரூப் அல்லது ஃபேஸ்புக் குரூப் மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போன் தொலைந்த விவரத்தைத் தெரிவித்திருந்தாலும், எந்தெந்த போன் எண்களில் இருந்து ஆபாச அழைப்புகள் வருகின்றன என்பதை எச்சரிக்கை தகவலாகப் பகிர்ந்துகொண்டிருந்தாலும் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க முடிவதோடு, போனை திருடியவனை கண்டு பிடிப்பதும் சுலபமாகியிருக்கும்.
தொலைத்த போன் என்னவோ 2000 ரூபாய் பெருமானம் கொண்டதுதான். ஆனால் அதுகொடுத்த மன உளைச்சலும், கசப்பான அனுபவங்களும், தொடர்ச்சியான சம்பவங்களும் விலைமதிப்பற்றவை.
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வசதியோ அந்த அளவுக்கு நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். புரிந்துகொள்வோம். பாதுகாப்புடன் பயணிப்போம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP