ஜம்முனு வாழ காம்கேரின் OTP-213: ’ப்ரேக்’ எனும் நோயாளியாக்கும் வார்த்தை!


பதிவு எண்: 944 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 213
ஆகஸ்ட் 1, 2021

‘ப்ரேக்’ எனும் நோயாளியாக்கும் வார்த்தை!

நமக்கு ஏதேனும் சிறு உடல் உபாதைகள் என்றால் கொஞ்சம் ‘ப்ரேக்’ எடுத்துக்கொள்ளுங்கள். ஜாலியாக உங்களுக்கு விருப்பமானதை செய்து ஓய்வில் இருந்து தெம்பாக திரும்பவும் வேலையை தொடருங்கள் என்பதுபோன்ற ஆலோசனைகள் எல்லா திசையில் இருந்தும் வருவதை நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருப்போம்.

உண்மையில் ‘ப்ரேக்’ என்ற வார்த்தையே நம்மை மேலும் மேலும் நோயாளியாக்கும் தன்மை கொண்டது.

நாம் செய்துகொண்டிருக்கும் வேலை, அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே, அது நமக்கு ஆத்மார்த்தமாக இருக்கும்போது அது எப்படி நம்மை வருத்தும். நம்மை ஊக்குவிக்கத்தான் செய்யும். அது தெரியாமல் ‘ப்ரேக்’ எடுத்துக்கொள்ளுங்கள் என்று நமக்கு ஆலோசனை சொல்வதைப் போல நம்மை நோயாளியாக்குபவர்களை விட்டு தள்ளி இருப்பது உத்தமம்.

உதாரணத்துக்கு நான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன். நான் இயங்கும் களமும் தளமும் முழுக்க முழக்க தொழில்நுட்பம். அது கால மாற்றத்துக்கு ஏற்ப என் கல்வி, வேலைக்கு, அனுபவம் இவற்றுக்கு ஏற்ப பல பரிமாணங்களில் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை எடுத்துள்ளது. என் அடிப்படை திறமை கற்பனை. அதன் தாக்கத்தில் என் திறமை எழுத்து, திரைக்கதை, பேச்சு, ஓவியம், அனிமேஷன், ஆவணப்படம் என வெவ்வேறு வடிவங்களில் உருவமெடுத்து பரிமளிக்கிறது.

நான் எழுதுவதை சுவாசம் போல் செய்து வருகிறேன். யாரேனும் என்னிடம் ‘கொஞ்ச நாளைக்கு எழுதுவதற்கெல்லாம் ப்ரேக் எடுத்துக்கொண்டு, ஓய்வெடுங்கள்… உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால் எனக்கு வியப்பாக இருக்கும்.

சுவாசத்துக்கு கொஞ்ச நாள் எப்படி ‘ப்ரேக்’ கொடுப்பது? என்ற கேள்விக்குறியோடு அவர்களை நோக்குவேன்.

ஆமாம். ஒரு விஷயத்தில் ‘ப்ரேக்’ கொடுத்தால் நம் ஆற்றல் அதுபோல மற்றொரு விஷயத்தின் மீதுதான் செல்லுமே தவிர ஓய்வெடுக்க தோன்றாது. உண்மையில் ஓய்வு என்பது உடலுக்கு தானே தவிர மனதுக்கு அல்ல. நாம் தினமும் விரும்பி செய்கின்ற பணிகளை செய்யாமல் விட்டால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சோர்வு படர்ந்துகொள்ளும். தலைவலி, உடல்வலி என தேவையில்லாத வலிகள் அழையா விருந்தாளியாக நம்மை தஞ்சமடைவது உறுதி.

சாப்பிட்டு சாப்பிட்டு அக்கடா என்று எந்த வேலையும் செய்யாமல் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என சொல்பவர்களை கொடைக்கானல், ஊட்டிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துப் பாருங்கள். அவர்களில் எத்தனை பேரால் அங்கு அவர்கள் நினைத்ததைப் போல் சாப்பிட்டு சாப்பிட்டு ஓய்வெடுக்க முடியும் என்பது தெரியும். ஆர்டர் செய்தால் சாப்பாடு, ஏன் என்று கேள்வி கேட்க ஆட்கள் இல்லை என்றாலும் அவர்கள் நினைத்ததைப் போல சாப்பிட்டு சாப்பிட்டு படுக்கையில் படுத்திருக்க முடியவே முடியாது.

இரண்டு நாட்கள் என்ன, ஒரே ஒரு மணி நேரம் கூட ஓய்வில் இருக்க முடியாது. காரணம் எத்தனை செலவழித்து வந்திருக்கிறோம், எவ்வளவு இடங்கள் சுற்றிப் பார்ப்பதற்கு இருக்கிறது, எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள் நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கின்றன என ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவர்களை அறையில் அடைந்து கிடக்க விடாது. சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு நாட்களும் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுதான் ஊர் திரும்புவார்கள். பயணக் களைப்பையும், உடல் அசதியையும், வலியையும் கூடவே அழைத்து வந்திருப்பார்கள். ஆனால் மனம் உற்சாகமாக இருக்கும்.

ஆனால் அவர்கள் அந்த ஊரில் ஒரே அறையில் அடைந்து கிடந்து சாப்பிட்டு சாப்பிட்டு உறங்கி ஓய்வெடுத்து வந்திருந்தால் உடல் வலியுடன் மனச் சோர்வையும் சேர்த்து அழைத்து வந்திருப்பார்கள்.

நமக்குப் பிடித்த விஷயங்களை விடாமல் தொடர்ச்சியாக செய்வதுதான் உண்மையில் நமக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உண்மையில் ‘ப்ரேக்’ என்ற விஷயமே நம் இயக்கத்துக்கு கிடையவே கிடையாது. ஒரு பரபரப்பில் இருந்து மற்றொரு பரபரப்பிற்குள் தஞ்சமடைவதுதான் இயற்கை. இதை ‘டேக் டைவர்ஷன்’ எனலாம். ஒரு பாதை முட்டுக்கட்டைப் போட்டால் மாற்றுப் பாதையில் சென்றாவது நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றடையும் யுக்திதான் அது.

அதைவிட்டு நம் இயக்கத்துக்கு ‘மியூட்’ போட்டு நிறுத்திக்கொள்வது ‘ப்ரேக்’ அல்ல. மரணம். உயிருடன் இருக்கும்போதே மரணிக்கச் செய்யும் அவலம் அது.

‘ப்ரேக் எடுத்து ஓய்வெடுத்து உடலை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்பது அக்கறை அல்ல, மேலும் மேலும் நோயாளியாக்கும் அறிவுரை!

எனவே நீங்களும் உங்களுக்கேகூட  ‘ப்ரேக்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள். யாருக்கும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனையும் கொடுக்காதீர்கள்.

‘ப்ரேக் எடுத்து ஓய்வெடுங்கள்’ எனும் நோயாளியாக்கும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்ப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 2,110 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon