ஜம்முனு வாழ காம்கேரின் OTP-214: உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்!

பதிவு எண்: 945 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 214
ஆகஸ்ட் 2, 2021

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்…’ என்று இழுத்துக்கொண்டே செல்பவர்களிடம் கவனமாக இருங்கள்.

நீங்கள் செய்கின்ற வேலைகளை,
உங்கள் திறமைகளை,
உங்கள் புத்திசாலித்தனத்தை,
உங்கள் ஆளுமையை
மற்றவர்கள் உதாசினப்படுத்தவும்
ஏளனப்படுத்தவும் செய்கின்ற
போலி பாராட்டு வார்த்தைகள்தான் இவை!

காரணம், அவர்களால் உங்களை நேரடியாக தாக்க முடியாத சூழலில் அவர்கள் எடுக்கும் ஆயுதமே உங்கள் தன்மானத்தை சீண்டிப் பார்ப்பதுதான்.

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்…’ என்று சொல்வதைக் கேட்கும்போது உண்மையிலேயே நல்ல திறமைசாலியாக இருப்பவர்களுக்கு எப்பேற்பட்ட அவமானமாக இருக்கும் என்பதை அவர்களால் வார்த்தைகளால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கூனிக் குறுகுவார்கள். வாழ்க்கையில் நமக்கு என்ன நடந்தால் நாம் அவமானத்தின் உச்சத்தில் இருப்போமோ அந்த அவமானத்தின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தும் வார்த்தைகள் அவை.

உண்மையில் உங்கள் மீது நட்பு கொண்டிருக்கும் ஒருசிலரை தவிர அல்லது உங்கள் மீது உயிர் பாசம் கொண்டிருக்கும் பெற்றோர் தவிர அல்லது நல்ல புரிதல் உள்ள இணையைத் தவிர  மற்றவர்களுக்கு நீங்கள் எங்கே இருந்தால் என்னவாகிவிடப் போகிறது. கீழிருந்தால்தான் என்ன, மேலிருந்தால்தான் என்ன, இரண்டும்கெட்டானாக நடுவில் நின்று கொண்டிருந்தால்தான் என்ன?

ஆகவே, ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்…’ என்று யாரேனும் சொன்னால் அதற்காக சுயபச்சாதாபம் கொண்டுவிட வேண்டாம்.

நாம் சரியாக பயணித்துக்கொண்டிருக்கிறோம், நல்லபடியாக எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என எண்ணும் வேளையில் இப்படித்தான் யாரேனும் நடுவில் புகுந்து ‘‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்…’ என சொல்லி நம் தன்மானத்தை சீண்டிப்பார்ப்பார்கள்.

‘நான் எனக்கான இடத்தில் சரியாகத்தான் இருக்கிறேன்’ என தலை நிமிர்த்தி குரல் உயர்த்தி கம்பீரமாகச் சொல்லுங்கள். அந்த தைரியத்தில் அவர்கள் சொன்ன ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்…’ என்ற வார்த்தைகளை அவர்களே திரும்ப உள்வாங்கிக் கொண்டுவிடும் அளவுக்கு உங்கள் தன்னம்பிக்கையின் வீச்சு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வளவு ஏன், என் மீதுகூட இதுபோன்ற ஆயுதங்கள் எய்யப்பட்டிருக்கின்றன.

நமக்கு எதுபோன்ற பாராட்டுகள் கிடைக்க வேண்டும்,
எதுபோன்ற விருதுகள் வந்தடைய வேண்டும்,
எந்தெந்த மீடியாக்கள் கொண்டாட வேண்டும்,
எந்த கோணத்தில் நம் திறமைகளை
வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்
என்பதையெல்லாம் நாம் ‘மட்டுமே’
முடிவெடுக்கும் திறன்
இருந்துவிட்டால்
நம்மை யாராலும் எந்த சக்தியாலும்
எந்த ஒரு ஆயுதத்தாலும் வீழ்த்தவே முடியாது.

ஆம். நான் அப்படித்தான் இருக்கிறேன்.

அதனால்தான் உங்களுக்கும் எடுத்துச் சொல்கிறேன்.

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்…’ இப்படி ஆதங்கப்படும் பலர் நல்ல பதவியில் இருப்பார்கள். அதனால் நமக்கு பத்து பைசாவுக்கு எந்த ஆதாயமும் இருக்காது. உதவி செய்யும் நிலையில் இருந்தாலும் செய்யமாட்டார்கள். ஆனால் நம்மை சீண்டிப் பார்த்து நாம் கொஞ்சம் பலவீனமாக நம்மைக் காட்டிக்கொண்டால் அதையே ஆதாயமாக எடுத்துக்கொண்டு நம்மை வீழ்த்த பயன்படுத்துவார்கள்.

ஆகவே, எந்த ஒரு சூழலிலும்
நாம் எங்கிருக்க வேண்டும் என்பதை
நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர
மற்றவர்களை முடிவெடுக்க விடக் கூடாது.

‘அப்படியா, என்ன செய்வது என் விதி அப்படி, எனக்கு சாமர்த்தியமே இல்லை’ என்பதுபோல உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தினால் போச்சு. நீங்களே வலைவீசும் எதிராளியின் வலைக்குள் சென்று மாட்டிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, கவனம்.

ஆம்.
நான்
எந்த உயரத்தில் இருக்கிறேன்,
இனி எங்கிருக்க வேண்டும்,
என்ன செய்ய வேண்டும்,
என்ன செய்யக் கூடாது
என்பதையெல்லாம் நான்தான்
முடிவெடுக்கிறேன்.

இன்னும் நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், என்னை நானே வடிவமைக்கிறேன். நானே சிற்பி. எனை நானே செதுக்குவதால் மற்றவர்கள் மீதோ அல்லது என் மீதோகூட எந்த வருத்தமும் என்றுமே உண்டானதில்லை.

ஆகவே, என் பாதை தெளிவாக இருக்கிறது. உங்கள் பாதையும் தெளிவாக வேண்டும் என்றால் ‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருக்க வேண்டும்’ என யாரேனும் சொன்னால் ‘நீங்கள் உங்களுக்கான உயரத்தில் இருக்கிறீர்களா?’ என தலை நிமிர்த்தி கண்களை நேருக்கு நேர் பார்த்து கேளுங்கள். நீங்கள் இருக்கும் பக்கமே தலை திருப்பிப் பார்க்க மாட்டார்கள்.  ஓடிப் போவார்கள்.

வாழ்க்கையில் எது எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியுள்ளது, எதில் எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது பாருங்களேன். கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 894 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon