பதிவு எண்: 946 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 215
ஆகஸ்ட் 3, 2021 | காலை: 6 மணி
‘ரிப்ளை!’ எனும் அன்பின் மழை!
இந்த கவிதையில் வரும்
நான் என்பது நான் இல்லை,
நீங்கள் என்பதும் நீங்களும் அல்ல.
நான் என்பதும் நீங்கள் என்பதும்
பொதுவெளியில் இயங்கும்
ஒவ்வொரு ‘நானும்’, ஒவ்வொரு ‘நீங்களும்’!
வாங்க கவிதைக்குப் போகலாம்…
‘ரிப்ளை’
அது பணிக்காக
இருந்தாலும் சரி,
பர்சனல் விஷயங்களுக்காக
இருந்தாலும் சரி!
நாம் அனுப்பும்
வாட்ஸ் அப் தகவல்களுக்கோ அல்லது
இமெயில்களுக்கோ,
நாம் தகவல் அனுப்பும் நபரிடம் இருந்து
பதில் வரவில்லை என்றால்…
சின்ன ஸ்மைலி மூலமாவது
‘ரிப்ளை’ வரவில்லை என்றால்…
‘வேலையில் இருக்கிறேன்,
விரைவில் பதில் அளிக்கிறேன்’ என்ற
கர்டிசி தகவல் எட்டிப் பார்க்கவில்லை என்றால்…
அவர் பிசியாக இருந்திருப்பார்,
அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கலாம்,
அவர் வீட்டில் என்ன பிரச்சனையோ,
அவர் எப்போதோ ஒருநாள் சொன்னாரே
ஒரு பர்சனல் பிரச்சனை
அது விஸ்வரூபமெடுத்திருக்கலாம்,
அவரை நாம் ஏதாவது காயப்படுத்தி இருக்கிறோமா,
அவர் நமக்கு எப்போதேனும் அனுப்பிய தகவலுக்கு
நாம் பதில் அனுப்பாமல் இருந்திருப்போமோ
அதன் எதிரொளியாக இருக்குமோ,
யாரேனும் நம்மைப் பற்றி தவறாக
அவரிடம் எடுத்துச் சொல்லி
நல்மதிப்பை குறைத்திருப்பார்களோ…
அப்படி இப்படி என
நூறு
யோசனைகள்…
வருத்தங்கள்…
கற்பனைகள்…
ரூம் போட்டெல்லாம்
யோசிக்க மாட்டோம்
அதற்கு அவசியமே இல்லை!
சாப்பிடும்போது,
அலுவலக வேலையின்போது,
டிவி பார்க்கும்போது,
தூங்கச் செல்லும் முன்னர்,
தூக்கத்தின் இடையில்
விழித்துக்கொள்ளும்போது,
குழந்தையுடன் விளையாடும்போது,
வாக்கிங் செல்லும்போது,
பாட்டு கேட்கும்போது…
அப்படி இப்படி என
கிடைக்கின்ற இடைவெளியில் எல்லாம்
நாம் அனுப்பிய தகவலுக்கு வராத ரிப்ளை
குறித்த சிந்தனையாகவே இருக்கும்!
‘இந்த சின்ன விஷயத்துக்கு
ஏங்க இப்படி தேவையில்லாமல்
கற்பனை செய்துகொள்றீங்க?’
ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு
பிரச்சனைகள் இருக்கு
உங்களுக்கு ‘ரிப்ளை’
வராதது மட்டும்தான்
பிரச்சனைபோல என யாரேனும்
மனதுக்குள் பேசிக்கொண்டால்
அதுவும் எனக்குக் கேட்கும்…
உங்களுக்கு இருக்கும்
ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் போலவே
எனக்கும் ஆயிரத்தெட்டு அல்ல
பத்தாயிரத்தெட்டுப் பிரச்சனைகள்
இருக்கத்தான் செய்கிறது!
ஆனாலும் நான் உங்கள்
நலனை அறிய விரும்பியோ
அல்லது நீங்கள் என்னிடம் கேட்டிருந்த
உதவி குறித்தோ அல்லது
வேறு ஏதேனும் ஒரு விஷயத்துக்காகவோ
தகவல் அனுப்பி இருப்பேன்!
அதற்கு உங்களுக்கு
பதில் அளிக்க நேரம் இல்லை என்றாலும்
ஒரு சிறிய சிரிக்கும் ஸ்மைலி ஒன்றையாவது
பதிலாகக் கொடுத்துவிட்டு
உங்கள் வேலைகளைப் பார்க்கக் கூடாதா?
நீங்கள் வேண்டுமானால்
எந்த கற்பனைகளுக்குள் சிக்காதவர்களாக
எதற்கும் கவலைப்படாதவர்களாக
தைரியமான மனதுள்ளவராக
இருந்து கொள்ளுங்கள்,
ஆனால் எதிராளி
உங்களிடம் இருந்து பதில் வரவில்லை என்றால்
கவலைப்படும் நபராக இருக்கலாம்
என்ற சின்ன பதபதைப்பை மட்டும்
மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்களேன்!
வாட்ஸப்பில் ‘ஜஸ்ட்’ காப்பி பேஸ்ட் ஷேரிங்
கலாச்சாரத்துக்குப் பழகிப் பழகி
பர்சனல் தகவல்களுக்குக் கூட
பதில் அளிக்க வேண்டும் என்று
தோன்றாத மனநிலை பரவிவிட்டது!
சமூகவலைதளங்களில்
நட்புத் தொடர்பில் முகம் தெரியாமல்
இருப்பவர்களை எல்லாம்
எப்போது ‘நண்பர்கள்’ என
கொண்டாட ஆரம்பித்துவிட்டோமோ
அப்போதே நமக்கு மிக நெருக்கத்தில் இருக்கும்
சொந்த பந்தங்கள் அந்நியமாகிப் போய்விடுகிறார்கள்!
போதும்
அதிகம் பேசவில்லை
நிறுத்திக்கொள்கிறேன்…
இனி யாரேனும்
உங்கள் சொந்த பந்தங்கள், உயிர் நண்பர்கள்
தகவல் அனுப்பினால்
உங்களுக்குப் பிடித்த
ஒரு ஸ்மைலியை தட்டிவிடுங்கள்
பின்னர் சாவகாசமாக உங்களுக்கு
நேரம் கிடைக்கும்போது
விரிவாக பதில் கொடுக்கலாம் அல்லது
போன் செய்து பேசலாம்!
குறிப்பாக உங்கள் வயதான பெற்றோர்கள்
தகவல் அனுப்பினால் மறந்தும்
பதில் அனுப்பாமல் விட்டு விடாதீர்கள்…
உங்களுக்கு வேலை பிசி,
அவர்களுக்கோ உதாசினப்படுத்துகிறீர்கள்
என்ற தீராத வேதனை!
அவர்கள் என்ன
பொன்னும் பொருளுமா எதிர்பார்க்கிறார்கள்?
அவர்கள் உங்கள் நலன் கேட்டு
வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறார்கள்
‘நன்றாக இருக்கிறேன் அம்மா’,
‘செளக்கியமா இருக்கேன் அப்பா’,
‘நீங்களும் உங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்’
என்ற பதிலை தட்டிவிட்டு
உங்கள் பிசிக்குள் நுழைந்துகொள்ளுங்களேன்…
யார் கேட்கப் போகிறார்கள்?
இதைத்தானே அவர்களும்
எதிர்பார்க்கிறார்கள்
இதுபோதுமே நல்ல அன்புள்ளங்களை
அன்பின் மழையில் நனைய வைத்துக்கொள்வதற்கு!
ஆம்.
‘ரிப்ளை!’ என்பது
வெறும் பதில் தகவல் அல்ல
அது அன்பின் மழை!
பேரன்பின் வெளிப்பாடு!
Yes.
‘Reply’ is not just a ‘Reply’,
it is a beautiful expression of Love!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP