ஜம்முனு வாழ காம்கேரின் OTP-216: துக்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லலாம்? (Sanjigai108)

பதிவு எண்: 947 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 216
ஆகஸ்ட் 4, 2021 | காலை: 6 மணி

துக்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லலாம்?

யாருக்கேனும் நாம் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றால் வார்த்தைகளை மிக மிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆறுதல் என்பது சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களுக்காக இருக்கலாம், வீட்டில் யாரையேனும் மரணத்துக்குப் பறி கொடுத்திருக்கலாம், குடும்பப் பிரச்சனையாக இருக்கலாம், அலுவலகப் பிரச்சனையாக இருக்கலாம்… இப்படி ஆறுதல் சொல்ல வேண்டிய சூழல் எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும்.

உதாரணத்துக்கு ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல நினைத்தால் ‘நான் எல்லாம் இப்படிப்பட்ட சூழல் வரும் அளவுக்கு நடந்துகொள்ளவே மாட்டேன்…’ என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல வேண்டாம். ஏற்கெனவே குற்ற உணர்வுடன் மனதளவில் தளர்ந்து போயிருக்கும் அவர்களை ‘நீ ஏன் அப்படி செய்தாய், அதனால் இப்படி ஆனது, நீ ஏன் இப்படி நடந்துகொண்டாய், அதனால் அப்படி நடந்தது’ என்று குத்திக் காட்ட வேண்டாம். அந்த சூழல் நமக்கு வந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பது அந்த சூழல் வரும்போதுதான் நமக்கே தெரியும்.

பிரச்சனைகளுக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும்போது பிரச்சனைகள் குறித்து நம் மனம் போடும் கணக்கிற்கும், பிரச்சனைகளுக்கு உள்ளே செல்லும்போது நம் மனம் போடும் கணக்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உணர்வுகள் அப்படியே மாறிவிடும்.

ஒரு பிரச்சனைக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும்போது நம் மனம் ப்ளஸ், மைனஸ் கணக்கு மட்டுமே போடும். பிரச்சனைக்குள் சென்றுவிட்டால் அல்லது அது நம்மை சூழந்துகொண்டால் நம் மனம் வெறும் ப்ளஸ், மைனஸ் கணக்கு மட்டும் போடாது, அன்பு, பாசம், மானம், மரியாதை என பல உணர்வுகள் அழையா விருந்தாளியாய் நம்மை தஞ்சமடையும். என்ன செய்வதென்றே தெரியாது. ப்ளஸ், மைனஸ் கணக்குப் போட்டு அந்தப் பக்கமும் செல்ல முடியாது, அன்பு பாசத்துக்கும் மான மரியாதைக்கும் கட்டுப்பட்டு இந்தப்பக்கமும் வர முடியாது. இரண்டு பக்கமும் ஒரே அழுத்தத்தில் இழுக்கப்படுவோம். அது மிகவும் கொடுமையான சூழலாக இருக்கும்.

அப்படிப்பட்ட பயங்கரமான மனநிலையில் இருப்பவர்களிடம் சென்று ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என ‘எனக்கெல்லாம் இப்படி வரும் அளவுக்கு நடந்துகொள்ளவே மாட்டேன்பா’ என்று உங்கள் உடல்மொழியால்கூட உங்களை வெளிப்படுத்திக்கொண்டுவிட வேண்டாம். நீங்கள் பேசாமலேயே உங்கள் குரல் அவர்களுக்குக் கேட்கும்.

மாறாக, ’எனக்கும் இதுபோன்ற ஒரு சூழல் உண்டானது, அப்போது நான் இப்படி நடந்துகொண்டேன்…’ என சொல்லி உங்கள் அனுபவத்தைப் பகிரலாம். அது சார்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுக்கலாம். உதவிகள் செய்யலாம். அது அவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுக்கும்.

உங்களுக்கு அந்த பிரச்சனை நேரடியாக அப்படியே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதுபோன்று வேறு மாதிரியான பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து நீங்கள் வெளிவந்ததை எடுத்துச் சொல்லும்போது பிரச்சனைக்குள் இருப்பவர்களுக்கு ‘தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்த’ நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி நீங்கள் கொடுக்கும் ஆலோசனையால் அல்ல, நம்மைப் போலவே நாலு பேருக்கும் வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது என்ற எண்ணம் கொடுக்கும் நிம்மதிதான் அது.

பிரச்சனைக்குள் சிக்கிக்கொள்பவர்களின் பெரிய பிரச்சனையே ‘நமக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது’, ‘நாம் மட்டும்தான் இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்கிறோம்’, ‘கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்களைக் கொடுக்கிறது’ என்பது போன்ற இணை குற்ற உணர்வுகளுக்குள்ளும் சேர்ந்து சிக்கிக்கொள்வதுதான்.

ஒரு புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டால் மீட்கலாம். ஒரு புதைகுழிக்குள் சிக்கிக்கொண்ட நபரின் கால்களை அதற்கும் கீழ் உள்ள மற்றொரு புதைகுழியும் சேர்ந்து பின்னோக்கி இழுத்தால் அவர்களை அந்த தொடர் புதைகுழிக்குள் இருந்து மீட்பதோ அல்லது அவர்களால் மீண்டு வருவதோ கடினம்.

பிரச்சனைகளில் இருந்து வெளிவர சிக்குண்டவர்கள் பதட்டமின்றி சிந்திக்க அவர்கள் மனதுக்குள் ஒரு ஸ்பேஸ் உண்டாக்கித் தர வேண்டும். அந்த ஸ்பேஸை நாம் ஏற்படுத்திக்கொடுத்தால் போதும். அவர்களாகவே அதில் இருந்து மீண்டுவிடுவார்கள். அந்த ஸ்பேஸை அவர்களுக்குள் ஏற்படுத்துவது அவர்கள் தன்மானத்தை சீண்டும் அறிவுரைகளைத் தவிர்ப்பதால் கூட இருக்கலாம். எனவே சரியாகப் பேசத் தெரியாவிட்டால், வாய் மூடி பேசாமல் இருப்பது ஆயிரம் ஆலோசனைகள் கொடுப்பதற்கு சமம்.

குடும்பத்தில் யாரையேனும் பறிகொடுத்தவர்களுக்கு உடனடியாக நான் போன் செய்து பேச மாட்டேன். வாட்ஸ் அப்பிலும் எழுதியோ பேசியோ நீளமாக ஆறுதல்கள் சொல்ல மாட்டேன்.

ஏற்கெனவே பெரும் துக்கத்தில் இருப்பவர்களுக்கு அது மேலும் மேலும் இன்னும் துக்கத்தை அதிகரிக்கவே செய்யும். போன் செய்து ஆறுதல் சொல்கிறேன் என ஒவ்வொருவரும் ஆளாளுக்கு ‘ஏன் என்ன நடந்தது’ என கேள்விகள் கேட்டால் ஒவ்வொருவருக்கும் எல்லா விஷயங்களையும் சொல்லி சொல்லி தொண்டை வரண்டுபோவதுதான் மிச்சம்.

எனவே நான் பெரும்பாலும் சுருக்கமாக என் வருத்தங்களை தெரிவித்து ‘ஏதேனும் உதவி தேவை என்றால் சங்கோஜப்படாமல் தயங்காமல் கேளுங்கள்’ என்ற தகவலுடன் முடித்துக்கொள்வேன்.

முடிந்தால் துக்கத்தில் இருப்பவருக்கும் எனக்குமான புரிதலுக்கு ஏற்ப அவர்கள் அந்த துக்கத்தில் இருந்து விடுபட, நான் அவர்களுக்கு விருப்பமான சூழலை உண்டாக்கியும் தருவேன். தந்திருக்கிறேன்.

என் பள்ளி கல்லூரி நாட்களில் என்னுடன் படிப்பவர்களின் தாய் அல்லது தந்தை இறந்து போகும் கொடுமையான சூழல் எனக்குள் ஏற்படுத்திக்கொடுத்த பழக்கம் இது.

அந்த இளம் வயதில் என்னால் அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். துக்கம் நடந்த பிறகு பள்ளி / கல்லூரிக்கு திரும்புபவர்களை எப்படி எதிர்கொள்வது, முதன் முதலாக என்ன பேசுவது என மனதுக்குள் வார்த்தைகளைத் தேடித்தேடி தவித்திருக்கிறேன். என்னென்னவோ சொல்ல நினைப்பேன். ஆனால் அவர்களைப் பார்த்ததும் அத்தனையும் மறந்துவிடும். கண்களாலேயே என் வருத்தத்தை சொல்ல முடிந்ததே தவிர வார்த்தைகளால் சொல்லப் பழகவில்லை. ஆறுதல் சொல்ல தோள் அணைத்து, ஆறுதல் சொல்லி, தானும் சேர்ந்து அழுது எப்படி எப்படியெல்லாமோ ஆறுதல் சொல்லும் சக மாணவ மாணவிகளைப் பார்க்கும்போது என் அமைதியான சுபாவத்தினால் அவர்கள் என்னை வெறுத்துவிடுவார்களோ என நினைத்து பயந்தும் இருக்கிறேன். ஆனால் ஆயிரம் வார்த்தைகள் கொடுக்காத ஆறுதலை என் கண் பார்வையினால் நான் காட்டிய கரிசனத்தை உணர்ந்தவர்கள் ஏராளம். அப்போது அதை சொல்லாவிட்டாலும் பின்னாளில் சொல்லி இருக்கிறார்கள்.

இதே சுபாவம்தான் நான் வளர்ந்த பிறகும். ஏன் இப்போதும் கூட. துக்கப்படுபவர்களின் துக்கத்தை நாம் உணர்கிறோம் என்பதை மனதளவில் புரிய வைப்பதுகூட ஒரு கலையே. எல்லாவற்றுக்கும் வார்த்தைகள் தேவையில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,282 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon