பதிவு எண்: 948 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 217
ஆகஸ்ட் 5, 2021 | காலை: 6 மணி
‘ஓ, மை கடவுளே’!
‘ஓ, மை கடவுளே’ திரைப்படத்தை OTT-யில் பார்த்தேன்.
அஷோக் செல்வன் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.
நடிகர் என்று தூரத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றாமல்,
மிக இயல்பாக நாம் அடிக்கடி சந்திக்கும்
இளைஞரைப் போன்ற உடல்மொழி. சிறப்பு.
நாயகியாக வரும்
ரித்திகா சிங்கின் நடிப்பும் மிக இயல்பு.
சின்ன சின்ன திருப்பங்கள்,
மென்மையான கதையோட்டம்
என கதையில் கடவுள் என்னதான்
சொல்ல வருகிறார் என்பதை
உட்கார்ந்து பார்க்க வைத்தது.
இதுவரை கதை
இனி நிஜம்
பார்க்கலாம் வாங்க!
அஷோக் செல்வனின் சகோதரி
அபிநயா செல்வம்.
இருவரும் ‘ஒற்றுமையாக’
திரைத்துறையில்
‘Happy High Pitures’என்ற பேனரில்
கால்பதித்து முன்னேறி வருவது
உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு பெருமையாக இருக்கும் ஒரு விஷயம்,
அபிநயா செல்வம்
இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பது.
அவர் இளைய தலைமுறை பெண்களுக்கு
எல்லாம் முன்னுதாரணம்.
இவர் இப்படி செயல்படுவது
ஆச்சர்யமான விஷயம் அல்லவே!
காரணம் உண்டு…
1993-2000 ஆண்டு வரை ‘ஏற்றுமதி உலகம்’ என்ற
மாத இதழ் வெளிவந்துகொண்டிருந்தது.
தமிழில் பிசினஸுக்காக
வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள்
அந்த காலகட்டத்தில் குறைவு.
‘ஏற்றுமதி உலகம்’ பத்திரிகையே
தமிழில் வெளிவந்த
முதல் பிசினஸ் பத்திரிகையாக இருக்கலாம்.
உறுதியாகத் தெரியவில்லை.
அது சரி,
‘ஓ மை கடவுளே’ திரைப்படத்துக்கும்
‘ஏற்றுமதி உலகம்’ பத்திரிகைக்கும்
என்ன சம்மந்தம்?
இருக்கிறதே…
இந்தத் திரைப்படத்தில்
கதாநாயகனாக நடித்துள்ள
அஷோக் செல்வன்,
தயாரிப்பாளரான
அபிநயா செல்வம்
இருவரின் பெற்றோர்தான்
‘ஏற்றுமதி உலகம்’
பத்திரிகையை நடத்தி வந்தார்கள்.
இப்போது சொல்லுங்கள்
பெண்கள் அதிகம் பிசினஸில் இறங்காத
1993-லேயே பிசினஸுக்கான பிரத்யோகமான
பத்திரிகையின் சப் எடிட்டராக இருந்து
அதை திறம்பட நடத்தி
வந்த அம்மாவின் குழந்தைகள் இப்படி
செயல்படாவிட்டால்தானே ஆச்சர்யம்.
அது சரி ஏற்றுமதி உலகத்துக்கும்,
இந்த திரைப்படத்தின் நாயகன் மற்றும்
தயாரிப்பாளரின் பெற்றோருக்குமான
தொடர்பு புரிகிறது.
உங்களுக்கும்
ஏற்றுமதி உலகத்துக்கும் என்ன சம்மந்தம்?
இருக்கிறதே!
1996-ம் ஆண்டு ‘ஏற்றுமதி உலகம்’
பத்திரிகையில் என் நேர்காணல் வெளியானது.
தமிழகத்தில் முதன் முதலாக சாஃப்ட்வேர் நிறுவனம்
தொடங்கிய பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்கின்ற
கோணத்தில் செய்யப்பட்ட நேர்காணல்.
அந்த நேர்காணலின் கடைசி வரியாக
‘புத்தகங்கள் எழுதி வெளியிடுவதும்,
சினிமா எடுப்பதும் என் கனவு’ என குறிப்பிட்டிருந்தேன்.
அது இன்றளவும் என் மனதில் நிற்கிறது.
புத்தகங்கள் எழுதுவது தொடர்கிறது…
ஆவணப்படங்கள்,
கார்ப்பரேட் படங்கள்,
கல்வி சார்ந்த படங்கள்,
அனிமேஷன் படங்கள் என இயக்கி
எங்கள் ‘காம்கேர் டிவி’என்ற
யு-டியூப் சேனலில் வெளியிட்டு வருவதும் தொடர்கிறது.
அவ்வப்பொழுது
சின்னத் திரை, பெரிய திரை நிறுவனங்கள்
நான் எழுதி வெளியிடும்
கான்செப்ட்டுகளின் கருவுக்கு உரிமம் கேட்டு வாங்கி
தங்கள் படைப்புகளில் பயன்படுத்துகிறார்கள்.
எனக்கான கிரெடிட்டையும் கொடுத்து
மரியாதையும் செய்து
உரிய சன்மானத்தையும் கொடுத்து!
இதுதான் ஹைலைட்!
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய
எத்தனை எத்தனை விஷயங்கள்தான்
வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
கடைசி வரை அந்த பெற்றோரின்
பெயரை குறிப்பிடவில்லையே என நினைக்கிறீர்களா?
இதோ, சொல்கிறேன்…
அம்மா மலர் டிஎஸ்பி செல்வம்,
அப்பா திரு து.சா.ப.செல்வம்!
மலர் டிஎஸ்பி செல்வம் அவர்களுடன்
போனில் பேசிக்கொண்டிருந்தபோது
என் எழுத்துக்களில் அவரைக் கவர்ந்த
விஷயம் ஒன்றை வியந்து பாராட்டினார்.
‘எனக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக உங்கள் அப்பா சமையலை பற்றி அடிக்கடி எழுதுவீர்களே, அதை நான் வியந்து ரசித்திருக்கிறேன். அதுவும் சமைக்கும் முன் அதற்கான முன்னேற்பாடுகள், சுவையுடன் சமைக்கும் நேர்த்தி, சமைத்த பின் சமைத்த சுவடே இல்லாமல் அத்தனை சுத்தமாக அந்த இடத்தை தூய்மையாக வைத்தல் என அப்பாவின் கைப்பக்குவத்தை அத்தனை ரசனையுடன் எழுதுவீர்களே…’ என சொல்லிக்கொண்டே போனார். அந்த நாள் இனிமையாக இது ஒன்று போதாதா?
(Image Courtesy: indiaglitz.com)
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP