ஜம்முனு வாழ காம்கேரின் OTP-218: நம்பிக்கைகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமா?

பதிவு எண்: 949 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 218
ஆகஸ்ட் 6, 2021 | காலை: 6 மணி

நம்பிக்கைகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமா?

தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்திருந்த சிறந்த நூல்களுக்கான பரிசுத்திட்ட விளம்பர செய்தியைப் பார்த்தபோது அது சார்ந்து சில சிந்தனைகள். என் நலன்விரும்பிகள் சிலர் அந்த விளம்பரத்தை எனக்கு அனுப்பி என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

‘நான் எந்த போட்டிக்கும் புத்தகங்களை அனுப்பி வைப்பதில்லை, எந்த விருதுகளுக்கும் விண்ணப்பிப்பதும் இல்லை’ என்று அவர்களுக்குத் தெரியாதல்லவா?

நம் நம்பிக்கைகளை எல்லாம் அல்லது நமக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களை (அவநம்பிக்கைகள்) எல்லாம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் நம்பிக்கையை வேறருக்காமல் இருப்பது உத்தமம்.

நாம் நம்புவதை எல்லாம் என்று சொல்லி அதே வரியின் பின்னால் நமக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் எல்லாம் என்று சொல்கிறீர்களே… புரியவில்லையே என நினைக்கிறீர்களா?

சொல்கிறேன். நம் அவநம்பிக்கைகளும் ஒருவகையில் நம் நம்பிக்கைகள்தானே. ‘இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை’ எனும்போதே அந்த கருத்தும் நம் நம்பிக்கையாகி விடுகிறதுதானே?

உதாரணத்துக்கு ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் கடவுளை மறுப்பாளர் பிரிவில் வருவார்கள். ‘கடவுள் இல்லை’ என்கின்ற ஒரு விஷயத்தில் நம்பிக்கை (உடன்பாடு) இல்லாத விஷயம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் திடமான நம்பிக்கைத்தானே.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

நம் நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் மற்றவர்களுக்கும் அதே கோணத்தில் இருக்க வேண்டும் என்பதில்லையே. குறிப்பாக நம் அவநம்பிக்கைகள் மற்றவர்களுக்கு பொருந்திப்போகலாம்.

குறிப்பாக  தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்திருந்த சிறந்த நூல்களுக்கான பரிசுத்திட்ட விளம்பரத்தைப் பார்த்தபோது இந்தக் கருத்து இன்னும் ஆழமாக என்னுள் வேரூன்றியது.

எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி செமஸ்ட்டர் கல்லூரி ப்ராஜெக்ட்டை சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் செய்துகொண்டிருக்கும்போதே அடுத்து என்ன செய்யலாம் என என் பெற்றோருடன் தீவிரமான ஆலோசனைகள் நித்தம் நடந்தவண்ணம் இருந்தன.

அப்போதெல்லாம் நமக்குத் திறமை இருந்தால் நமக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்த உலகம் நம்மைக் கொண்டாடும். நம்முடைய திறமைக்கு வாய்ப்புகள் கொட்டும். நம்மை தலைக்கு மேல் தூக்கி வைத்துகொண்டு கொண்டாடுவார்கள் அப்படி இப்படி என ஏகப்பட்ட நம்பிக்கைகள். கற்பனைகள். உற்சாகங்கள்.

ஆனால் நிஜத்தில் அப்படி எல்லாம் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தபோது ஒரு தெளிவு உண்டானது. அந்தத் தெளிவுக்கு அதிக நாட்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரிரு வருடங்களிலேயே வெளி உலகம் புரிய ஆரம்பிக்க உஷாராக இருக்க ஆரம்பித்தேன்.

நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நம் திறமையும் அது சார்ந்த உழைப்பும் இருந்தால் மட்டும் போதும் என்ற நம்பிக்கையுடன் 21 வயது வரை படிப்பு, திறமை இரண்டையும் வளர்த்தெடுத்தல் என குறிக்கோளுடன் வாழ்ந்தபோது எனக்குள் சொல்லனா செயலாற்றல் பிரவாகமாகிப் பெருகி இருந்ததை என்னால் உணர முடிந்தது.

ஆனால் நிஜ உலகம் அப்படி இல்லை என்றபோது, அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக ஆரம்பித்தபோது நம்முடைய செயல் ஆற்றலும் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாவதையும் உணர முடிந்தது.

அது மிகவும் ஆபத்தானதாயிற்றே. என்னை நான் பலவீனமாக்கிக்கொள்ள விரும்பவில்லை.

படிக்கின்ற காலத்தில் எனக்குள் இருந்த நம்பிக்கைகளை அப்படியே தக்க வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்குமே என நினைக்க ஆரம்பித்தேன். தீர்வுகள் மடமடவென என் கண்முன் கொட்டியது. என் பெற்றோரின் ஆலோசனைகளும், ஆதரவும் அதற்கு பக்கபலமாயின.

அதன்படி சில முடிவுகளை எடுத்து சில தீர்மானங்களை எனக்குள் நிறுவிக்கொண்டேன். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிரத்யோகமாக ‘Motto’ இருப்பதைப் போல எனக்கும் உருவாக்கி வைத்துக்கொண்டேன். அது எனக்கு கடினமான வேலையாக இல்லை. ஏனெனில் சிறு வயதிலேயே ‘நமக்கான தனித்துவடன் வாழ்வது எப்படி?’ என என் பெற்றோர் வாழ்ந்து வழிகாட்டிய பாடங்களுள் ஒன்றாக அது இருந்தது.

அவற்றில் சிவற்றை உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்கு ஒத்துவந்தால் பின்பற்றுங்கள் இல்லை என்றால் நீங்களாக உங்களுக்கான ‘Motto’-வை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

  1. எதற்காகவும் யாருக்காவும் நம் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம்.
  2. கொள்கைகள் என்பதை ஏதோ பிரமாண்ட விஷயமாக நினைக்க வேண்டாம். செய்கின்ற எல்லா விஷயங்களிலும் சின்ன சின்ன ஒழுக்கங்கள், நேர்மைகள், பண்பான செயல்பாடுகள். இவற்றையே கொள்கைகள் என்கிறேன்.
  3. நம் இயல்பு ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த இயல்புக்கு மாறாக செயல்பட்டால்தான் ஒரு வெற்றி கிடைக்கும் என்றால் அந்த வெற்றியை தூக்கி தூற எறிவதும் கூட வெற்றியே. அதுவே மாபெரும் வெற்றி என்பேன்.
  4. நம் இயல்புக்கு மாறாக நம் செய்கின்ற செயலினால் நம் உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் உண்டாகும் போராட்டம் நம் செயல் ஆற்றலை நிச்சயம் வலுவிழக்கச் செய்யும். அப்படி செய்து கிடைக்கின்ற வெற்றி தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்கலாமே தவிர அடுத்தடுத்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தடுக்கலாம்.
  5. புகழைவிட பணத்தைவிட பதவியைவிட நம் நிம்மதி முக்கியம். நம் சுயத்தை இழந்துதான் இவற்றைப் பெற வேண்டும் என்கின்ற கட்டாயம் / அழுத்தம் உருவானால், சூழலை மாற்றுவது என்பது சாத்தியம் இல்லாதபோது, எவ்வளவு சீக்கிரம் அந்த சூழலில் இருந்து வெளிவர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளிவந்துவிடுவது உத்தமம்.

சரி, நான் ஏன் எந்த போட்டிகளிலும் கலந்துகொள்வதில்லை, விருதுகளுக்கு விண்ணப்பிப்பதில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

போட்டிகளுக்கும், பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் பின்னால் உள்ள பல்வேறு அரசியல்களை அறிந்த பின்னர் அதில் எல்லாம் பங்கெடுக்கும் ஆர்வமே இருந்ததில்லை.

அதனால் என்ன, நான் இம்மியும் குறைந்துவிடவில்லையே. வருடா வருடம் லட்சணக்கணக்கில் மாணவர்கள் என் நூல்களையும், சாஃப்ட்வேர்களையும் இதர தயாரிப்புகளையும் பயன்படுத்துகிறார்களே? அதுதான் எனக்குக் கிடைத்து வரும் உயரிய விருதாக நான் நினைக்கிறேன்.

சென்னைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என நம் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என என் படைப்புகளில் பல பாடதிட்டமாக உள்ளன.

நான் எழுதுகின்ற புத்தகங்கள் மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், வீடியோ நிகழ்ச்சிகள் உட்பட பலதரப்பட்ட படைப்புகளும்தான்.

இதைத்தான் எனக்கான விருதாகக் கருதுகிறேன். அப்படித்தான் என்னை கட்டமைத்துக்கொண்டுள்ளேன்.

இதற்காக நான் எந்த பெருமுயற்சியையும் எடுப்பதில்லை. என் சிறுவயதில் கள்ளம் கபடமில்லாமல் நினைத்திருந்த ‘திறமையும் அது சார்ந்த உழைப்பும் இருந்தால் உலகம் நம்மைக் கொண்டாடும்’ என்ற என் ஆழமான நம்பிக்கை என் வாழ்க்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூலம் நிஜமானது.

இப்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஏதேனும் ஒரு பாதையில் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைத்துத்  தரும். அந்தப் பாதையில் நீங்கள் நினைத்திருக்கும் அளவுக்கு ‘பளபளப்பு’ இல்லமால் இருக்கலாம். ஆனால் நிம்மதி நிச்சயம் கிடைக்கும். அந்த நிம்மதிதான் அந்த ‘பளபளப்பு’ என்பதையே பலரும் உணருவதில்லை. அதுதான் பெரும் சோகம்.

இதுபோன்ற அற்புதமான பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு பயணியுங்கள். வாய்ப்பிருந்தால் உங்களுக்கானப்  பாதையை நீங்களே கட்டமையுங்கள். அதைவிட்டு வாழ்க்கை காட்டும் அத்தனைப் பாதைகளிலும் பயணித்தால் சோர்வுதான் உண்டாகும்.

வாழ்க்கைக் காட்டும் பல பாதைகள் – அதில்
உன் பாதை எதுவென தீர்மானிப்பதுதான் உன் வெற்றி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 589 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon