ஜம்முனு வாழ காம்கேரின் OTP-219: தீர்வுகள் உங்கள் விருப்பப்படியே கிடைக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?


பதிவு எண்: 950 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 219
ஆகஸ்ட் 7, 2021 | காலை: 6 மணி

தீர்வுகள் உங்கள் விருப்பப்படியே கிடைக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

பிரச்சனை – அது சிறியதோ பெரியதோ, அளவில் எப்படி இருந்தாலும் சரி,  அது நம் உடம்பில் ஏற்படும் சிறிய ஒவ்வாமை போன்றதுதான்.

நம் உடம்பில் தோன்றும் ஒவ்வாமை புறமாக சிறிய தடிப்பாக வெளிப்பட்டிருக்கலாம், சிறிய புண்ணாக தோற்றமளிக்கலாம் அல்லது அகமாக தலைவலியாகவோ, வயிற்று வலியாகவோ ஆரம்பிக்கலாம். இப்படி அகமாகவோ, புறமாகவோ நம் உடம்பில் ஏற்படும் ஒவ்வாமையை ஆரம்பத்திலேயே கவனித்தால் எதனால் உண்டானது என்பதை நாமே கண்டறிய முடியும். புற ஒவ்வாமையான தடிப்புக்கும் புண்ணிற்கும்  பூச்சிக் கடி, தூசி, குளிக்கும் தண்ணீரில் மாற்றம், எங்கேயேனும் அடிப்பட்டிருத்தல் என ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். அக ஒவ்வாமையான தலைவலி, வயிற்றுவலி இவற்றுக்கு சாப்பாடு, தூக்கம் இப்படி ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

இவ்வளவு ஏன், நீங்கள் வீட்டுக்குள் நடப்பதற்காக வாங்கிபோடும் செருப்பினால்கூட அலர்ஜியோ அல்லது ரத்த ஓட்டத்தில் மாறுதலோ உண்டாகலாம்.

ஆனால் நான் இங்கே குறிப்பிட்டுள்ள காரணங்கள் மட்டுமே உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சொல்லவில்லை. அவையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே சொல்கிறேன். எனவே உங்கள் உடலின் பிரச்சனைக்கு ஏற்ப நீங்கள் உங்களுக்கு உகந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சென்ற வாரம் வீட்டுக்குள் நடப்பதற்காக நான் பயன்படுத்தும் சாதாரண செருப்பினால் உண்டான பிரச்சனையை நான் எப்படி கண்டறிந்தேன் என  சொல்கிறேன்.

பிரச்சனை தலைவலியில் தொடங்கியது. சென்றவாரம் அலுவலக வேலை அதிகம். தொடர்ச்சியாக லேப்டாப் மானிட்டரை விட்டு கண்களை அங்கு இங்கு நகர்த்தக் கூட முடியாத அளவுக்கு வேலை. அது ஒன்றும்புதிதல்லவே. என் பணியின் தன்மையே அப்படித்தானே. லேப்டாப்புக்கும் ஆண்டி க்ளேர் கண்ணாடி போட்டிருக்கிறேன். என் கண்ணாடிக்கும் போட்டிருக்கிறேன். ஆனாலும் தலைவலி மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுத்தது.

முதலில் தலைவலி வந்தது. அதில் இருந்து நிவாரணம் பெற வழக்கம்போல சுக்கு தண்ணீர் குடித்தல், ஏலக்காயும் வாயில் போட்டு மெல்லுதல், சுக்குப் பற்றுப் போடுதல், ஆவி பிடித்தல் என கைவைத்தியம் செய்தேன். அப்போதைக்கு அடங்கினாற்போல இருந்தாலும் திரும்பத் திரும்ப வலி எட்டிப் பார்க்க, கண் பரிசோதனை செய்துகொண்டால் சரியாகும் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும்போது சாப்பாட்டில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்குமோ என நினைத்து கஷாயம் சாப்பிட்டு அரை நாள் வயிற்றுக்கு விடுப்புக் கொடுத்துப் பார்த்தேன்.

எதற்கும் தலைவலி நின்றபாடில்லை என்பதால் என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் காலில் போட்டிருந்த புது செருப்பு நினைவுக்கு வந்தது. இரண்டு மூன்று நாட்களாக நடக்கும்போது வழக்கத்துக்கும் மாறாக கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக தோன்றியது.

அப்போதுதான் செருப்பின் வடிவமைப்பைப் பார்த்தேன். ஆராய்ந்தேன்.

மூன்று நாட்கள் முன்புதான் வீட்டுக்குள் பயன்படுத்தும் செருப்பு பிய்ந்துபோக புதிதாக ஒரு செருப்பை வாங்கி இருந்தேன். அது வழக்கத்துக்கு மாறாக அடிப்பக்கம் கொஞ்சம் தடிமனாக இருந்தது. வீட்டுக்குள் போடுவதற்கு மிகமிக மென்மையான சாதாரண செருப்பை வாங்குவதுதான் வழக்கம். அப்படித்தான் வாங்கி இருந்தேன். ஆனால் அதைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நடப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ‘சரி, புதிய செருப்பு. அதனால் அப்படி இருக்கும். கடிக்காமல் இருக்கிறதே அதுபோதும்…’ என நினைத்து அந்த செருப்பைப் பற்றிய நினைவை ஒதுக்கினேன். ‘ஒரு சிலருக்கு புது செருப்புக் கடிக்கும்’ என சொல்வார்கள். ஆனால் இதுவரை நான் செருப்புக்கடி வாங்கியதில்லை.

செருப்பின் வடிவமைப்பை ஆராய்ந்தபோதுதான் கவனித்தேன். கண்களுக்கே தெரியாதவண்ணம் குதிக்கால் பக்கம் ஒரு பட்டையாக ஏதோ ஒன்றை வைத்துத் தைத்திருந்தார்கள். அது ஒரு சப்பாத்தியின் தடிமனைவிட குறைவான தடிமன் உள்ளதாகவே இருந்தது. நான் செருப்பைப் போட்டுக்கொள்ளும்போது குதிக்காலில் அந்த பகுதி பொருந்திக்கொண்டது. பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது புரிந்தது. அந்த சிறிய பகுதி குதிக்காலை சற்றே மேலே தூக்கி வைத்துக்கொள்வதைப் போல இருந்தது. அதுதான் ரத்த ஓட்டத்தை ஏதோ தடை செய்கிறது என்பதை புரிந்துகொண்டேன். அந்த செருப்பை கழற்றி ஓரமாகப் போட்டேன். இது நடந்தபோது காலை மணி ஏழு.

கடை திறந்ததும் வேறு செருப்பு வாங்கிப் போடலாம் என நினைத்து சில மணி நேரங்கள் வெறும் காலுடன் வீட்டுக்குள் உலா வந்தேன்.

என்ன ஆச்சர்யம். தலைவலி முற்றிலும் விலகவில்லை என்றாலும் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வந்தது. புது செருப்பு வாங்க கடைக்குச் சென்றபோது மணி முற்பகல் 11. அப்போது தலைவலி இருந்த சுவடுகூட இல்லை.

இப்படித்தான் நம் பெரும்பாலானப் பிரச்சனைகள் நம் கால் தூசிக்குக் கூட பெறுமானமில்லாத வகையில் இருக்கும். அதை என்ன, ஏது என்று ஆராய்ந்து கால் தூசியை தட்டி விட்டு, சுத்தம் செய்து கொண்டு சென்றுகொண்டே இருப்பதைப்போல் பிரச்சனைகளை கடந்து சென்றுகொண்டே இருக்கலாம். அதைவிட்டு கால் தூசியைப் பார்த்து ‘நீ எப்படி என் காலில் வந்து படரலாம்’ என கேள்வி கேட்பதைப்போல் அதற்குள் சதா உழன்றுகொண்டே இருந்தால் சிறிய புண்ணை சொறிந்து சொறிந்து சீழ் வரும் அளவுக்கு பெரிதாக்கி செப்டிக் ஆகும் நிலைக்குக் கொண்டு நிறுத்துவதற்கு ஒப்பாகும்.

எனவே பிரச்சனை எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்தால் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் நம் கண் முன் விரியும். அதைவிட்டு உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பிரச்சனைக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கும்போதுதான் சிறிய தடிப்பாக வெளிப்பட்டிருந்த ஒவ்வாமையின் அறிகுறி நம் முறையற்ற செயலாற்றலால் மெல்ல மெல்ல அதிகரித்து சீழ் பிடிக்கும் நிலைக்கு வருவதைப்போல பிரச்சனையும் விஸ்வரூபமெடுக்கும்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. தீர்வை வைத்துத்தான் பிரச்சனைகளே உண்டாகின்றன. இயற்கை அப்படித்தான் செயலாற்றுகிறது. ஆனால் நாம்தான் தீர்வை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக்கொண்டே தீர்வைத் தேடித்தேடி அலைகிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம், எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கிடைத்தாலும் நம்மில் பெரும்பாலானோரின் பிரச்சனை என்ன தெரியுமா? கிடைக்கின்ற தீர்வும் அவர்கள் விருப்பப்படி அமைய வேண்டும் என நினைப்பதுதான். அதனால்தான் அவர்களுக்குக் கிடைக்கின்ற தீர்வுகள் கூட தீர்வுகளாக அவர்கள் கண்களுக்குத் தெரியாமல் அவை மற்றொரு பிரச்சனையாக தோற்றமளிக்கிறது.

ஆக, பிரச்சனைகளை பிரச்சனைகளாகவும், தீர்வுகளை தீர்வுகளாகவும் பார்க்கும் பக்குவதைப் பெறுவது ஒன்றே பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கான ஒரே வழி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon