ஜம்முனு வாழ காம்கேரின் OTP-222: படிப்பு என்னதான் சொல்லிக்கொடுக்கிறது?

பதிவு எண்: 953 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 222
ஆகஸ்ட் 10, 2021 | காலை: 6 மணி

படிப்பு என்னதான் சொல்லிக்கொடுக்கிறது?

எங்கள் குடும்பத்தில் அடுத்தத் தலைமுறை குழந்தையின் திருமண வைபவத்துக்காக விருந்தினர்களுக்குப் பரிசளிக்க அலங்கரிக்கப்பட்ட தட்டுகளை வாங்குவதற்கு மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்றோம்.

எப்போதுமே பரபரப்பாக இருக்கும் கடையில் அத்தனை கூட்டமில்லை. ஆனாலும் வருகின்ற நபர்கள் ஐந்தாறு பேரே ஆனாலும் மேலே இடிக்காத குறையாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். பணி புரிபவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மாஸ்க் தாடையில்தான் தொங்கிக்கொண்டிருந்தது. வெளியே சுட்டெறிக்கும் வெயில் கடையிலுள் வெக்கையைக் கொட்டியது. காரில் இருந்து இறங்கி கடைக்குள் சென்று பொருட்கள் வாங்குவதற்குள் வியர்வை மழை. மாஸ்க் போட்டுக்கொண்டு பேசுங்கள் என சொல்லிக்கொண்டே இருந்தோம்.

அலங்கரிக்கப்பட்ட தட்டுகளை பொறுமையாக சரி பார்த்து எடுத்துக்கொண்டோம். எண்ணிக்கையில் அதிகம் இருந்ததால் கடையினுள் அதிக நேரம் இருக்கும்படி ஆனது. வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லை என்பதால் மின்விசிறியையும் ஆன் செய்யவே இல்லை. ‘ஃபேன் போடுங்கள்’ எனச் சொல்லி போட வைத்தோம். கடையிலுள் மெகா சைஸில் இரண்டு டிவிக்கள் ஓடிக்கொண்டே இருந்தன. ஒரு டிவியில் ஒரு சீரியல். மற்றொரு டிவியில் சினிமா.

எதற்கு இரண்டு டிவிக்கள் என கேட்டதற்கு ‘ஒன்று மேட்ச் பார்க்க’, ‘மற்றொன்று சீரியல் பார்க்க’, ‘மேட்ச் இல்லாத நாட்களில் ஒன்றில் சீரியல், மற்றொன்றில் சினிமா’ என அங்கு பணிபுரியும் இளம் பெண் சீரியஸாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார்.

எங்களுக்கு உதவிய பெண்ணிடம் அவர் என்ன படித்திருக்கிறார் என பேச்சுக்கொடுத்தேன். அவர் உட்பட அங்கு பணிபுரியும் அத்தனை இளைஞர்களும் டிகிரி முடித்திருக்கிறார்கள்.

நாங்கள் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு பில்லிங் செக்‌ஷனுக்கு வரும்போது அங்கு கொஞ்சம் நெரிசல் இருந்ததால் ‘கொரோனா’ பயம் உண்டானது. பணம் செலுத்திவிட்டு நாங்கள் ஒதுங்கி நின்று கொண்டோம். பில் போட்டு பொருட்களை பையில் வைத்து கடை வாசலுக்குக் கொண்டு வைத்தார் கடையில் வேலை செய்யும் ஓர் இளைஞன்.

இதற்குள் நாங்கள் காரை கடை வாசலுக்கு எடுத்துவர, அந்த இளைஞன் பையை டிக்கியில் வைத்துவிட்டு விருட்டென கடைக்குள் நுழைந்துவிட்டார். நாங்கள் நன்றி சொன்னதைக் கூட காதில் வாங்கவில்லை.

இதுவரை ஓகேதான். வீட்டுக்குச் சென்று காரில் இருந்து நாங்கள் வாங்கிய அந்த பையை எடுக்கும்போதுதான் அந்தக் கடைப் பணியாளர்களையும், பில்லில் பிரிவில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரையும் நினைத்து  அதிசயித்தோம்.

ஆம். பையை எங்களால் ஓர் ‘இன்ச்’ கூட அசைக்கக் கூட முடியவில்லை. அத்தனை கனம். விழா நிகழ்வுக்கு விருந்தினர்களுக்குப் பரிசளிப்பதற்காக வாங்கிய பூவேலை செய்யப்பட்ட தட்டுகள் அல்லவா? எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள்.

அவை தட்டுகள் என்பதால் ஒரு பெரிய கட்டைப் பையில் அத்தனையும் அடங்கிவிட்டது. கொரோனாவுக்கு பயந்து பில் பிரிவில் இருந்து ஒதுங்கி நின்று கொண்டிருந்ததால் தனித்தனியாக நான்கைந்து பைகளில் போட்டுத்தாருங்கள் என நாங்கள் சொல்லவில்லை. சொல்ல மறந்துவிட்டது. கடையை விட்டு வெளியே வந்தால் போதும் என்ற அளவுக்கு வியர்வை, கூட்டம், கசகசப்பு. இத்தனைக்கும் இடையில் டிவி சப்தமாக ஓடிக்கொண்டே இருந்தது. வாடிக்கையாளர்கள் விற்பனைப் பெண்களிடமும், பில் போடும் நபரிடமும் ஏதேனும் கேட்டால்கூட காதில் விழாத அளவுக்கு டிவி சப்தம் நாராசமாக இருந்ததால் எப்போதடா காரில் சென்று ஏசியை ஆன் செய்வோம் என்றாகிவிட்டது. இதனால் தனித்தனிப் பைகளில் போட்டுத்தர சொல்ல தவறிவிட்டோம்.

விளைவு. கார் டிக்கியில் இருந்து அதை நகர்த்தக் கூட முடியவில்லை. வாட்ச் மேனை விட்டு எங்கள் வீட்டு வாசலுக்குக் கொண்டு வைக்கச் சொன்னோம். அவருக்கும் அதை எளிதாக தூக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் இதற்கு முன் கட்டடம் கட்டும் இடத்தில் செங்கற்களை தலையில் சுமந்து செல்லும் பணியில் இருந்தவர். இரண்டு மாடி, மூன்று மாடி கற்களை தலையில் சுமந்து சென்ற அனுபவம் உள்ளவர். வயதானதால் அந்த வேலையை விட்டு வாட்ச் மேன் வேலைக்கு வந்தவர்.

அந்த அனுபவத்தில் அவர் அந்த பையை இலாவகமாக தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு எங்கள் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து வைத்தார்.

கடையில் பில்லில் பிரிவில் தட்டுகளை அடுக்கிய பெண்ணுக்கு ‘இவ்வளவு கனமான பையை இவர்கள் எப்படி தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் செல்வார்கள்’ என்று தோன்றவில்லை. தோன்றி இருந்தால் அவரே தனித்தனி பைகளில் போட்டுக்கொடுத்திருப்பார். பில்லிங் பிரிவில் அமர்ந்திருக்கும் கடை உரிமையாளருக்கும் இந்த விஷயம் குறித்த அக்கறை இல்லை. அவர் கவனம் முழுவதும் கல்லாப் பெட்டியில் பணத்தை வைப்பதும், நிமிர்ந்து டிவியைப் பார்ப்பதிலுமே. சரி, இவர்களுக்கு கவனம் இல்லாமல் இருக்கலாம். காரில் அந்த பையை கொண்டு வைத்த அந்த இளைஞனுக்காவது தோன்றி இருக்க வேண்டாமா?

யாருக்குமே வாடிக்கையாளர் மீது ஒரு துளியும் அக்கறை இல்லை. மெக்கானிக்கலான செயல்பாடுகள். உணர்வுகளற்ற வாழ்க்கை ஓட்டம். வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

எப்போதுமே எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி உள்ளது. நாம் கொஞ்சம் கவனம் சிதறினாலும் நாம்தான் கஷ்டப்பட வேண்டியுள்ளது.

டிகிரி படித்துள்ள அந்தக் கடை இளைஞர்கள் முகம் இப்போதுவரை மனதுக்குள் வந்து சென்றுகொண்டே உள்ளது. என்ன படிக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள்? கல்வி என்பது பாடத்தை மட்டும் கற்பிப்பதா?

வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய பணியில் இருக்கும் நபர்களுக்கு வாடிக்கையாளர் நலன் குறித்த சிந்தனை சிறுதுளியும் இல்லை என்றால் அவர்கள் என்ன படித்துதான் என்ன பலன்?

தங்களாலேயே தூக்க முடியாத ஒரு பையை இவர்கள் எப்படி தூக்கிச் செல்வார்கள் என சிந்திக்கவே முடியாத அளவுக்கு மனம் இறுகிப் போய்விட்டதா?

படிப்பும், பண்பும் ஒருங்கிணையும்போதுதான் கற்ற கல்விக்கான பலனை தானும் அனுபவித்து இந்த சமுதாயத்துக்கும் அளிக்க முடியும். அது தவறும்போது இரண்டும் தனித்தனியாக இரு துருவங்களாக இருப்பதால்தான் மனிதநேயம் காணாமல் போய்விடுகிறது.

மயிலாப்பூர் வீதியில் உள்ள வேறு சில கடைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது. ஓரிடத்தில் கண்ட காட்சி வேதனை.

ஓர் இளம் பெண், ஒரு கடை வாசலில் தரையில் அமர்ந்து கடையில் வாங்கிய இட்லியை சாம்பார் ஊற்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அருகே அவர் குழந்தை தத்தித் தத்தி நடக்க முயன்று கொண்டிருந்தது. அவருக்கு மிக அருகே, துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு முன் மாட்டுச் சாணம். அதில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவரது குழந்தை அந்த சாணத்தின் அருகே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அதன் மீது தடுமாறி விழவும் செய்யலாம் என்கின்ற உடல்மொழி.

அவர் சாணத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் செய்யவில்லை. எந்த அருவெறுப்பும் இன்றி சாணத்தின் மிக அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அவருக்கு நிச்சயம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வி அறிவும் இருந்திருக்கப் போவதில்லை.

அவருடைய செயல்பாடும், திடகார்த்தமாக இருக்கும் ஒருவரால் இயல்பாக தூக்கவே முடியாத கனத்தை ஒரே பையில் வைத்து காரில் ஏற்றி அனுப்பிய கடைப் பணியாளர்களும் ஒரே நேர்கோட்டில் வந்தார்கள்.

கடைக்கு வெளியே கண்ட காட்சியில் உள்ள பெண் படிக்கவில்லை. கடைக்கு உள்ளே பணி செய்பவர்கள் படித்திருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 944 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon