பதிவு எண்: 952 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 221
ஆகஸ்ட் 9, 2021 | காலை: 6 மணி
உங்களைச் சார்ந்தோரை குஷிப்படுத்துங்கள்!
பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான நல்லுறவுக்கு ஆயிரம் வழிமுறைகள் இருந்தாலும் ஒரு விஷயம் உங்கள் குழந்தைகளின் மனதை எல்லா நேரங்களிலும் தொடுவதாக அமையும். ஒருசில பிடிவாதக் குழந்தைகளின் மனநிலைகூட அசைந்துக்கொடுக்கும்.
அது என்ன தெரியுமா?
உங்கள் குழந்தைகளால் நீங்கள் அடையும் பெருமையை அவர்களுக்கு அவ்வப்பொழுது ஏதேனும் ஒருவிதத்தில் தெரியப்படுத்துவது.
‘இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று உங்களைச் சார்ந்தவர்கள் பெருமைப்பட்டிருந்தால் அதை உங்கள் குழந்தைகளின் கவனத்துக்குக் கொண்டுவாருங்கள். ஒரு சிலர் இதனை பிள்ளைகளிடம் இருந்து மறைத்துவிடுவார்கள். ‘ஏற்கெனவே, எதையும் கேட்க மாட்டான். இப்போ இப்படி மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் என அறிந்தால் சுத்தம். சொல்பேச்சை கேட்கவே மாட்டான்’ என பொருந்தாத ஒரு காரணத்தைச் சொல்லி மறைத்துவிடுவார்கள்.
உண்மையில் அப்படி அல்ல. அவர்களால் உங்களுக்கு உண்டாகும் பெருமையை, அது சிறியதோ அல்லது பெரியதோ அதை மற்றவர்கள் சொல்வதை அவர்களே நேரில் கேட்டால் சிறப்பு. வாய்ப்பில்லாதபோது நீங்கள் அவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.
அவர்கள் ஏதேனும் தவறு செய்ய முற்படும்போது அவர்களால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமை நினைவுக்கு வந்து கொஞ்சமாகவாவது குற்ற உணர்ச்சி ஏற்பட்டு அந்தத் தவறை அவர்கள் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு.
இதுபோன்ற அணுகுமுறை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வயதில் பெரியவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் வளர்ந்த குழந்தைகள்தானே?
அவர்களின் சிறப்புகளை நீங்களே அவ்வப்பொழுது மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். யாரேனும் யு-டியூபில் பிரண்டை பொடி செய்வதை பார்த்ததாகச் சொன்னால் நீங்கள் உங்கள் அம்மா தயாரித்து வைத்திருக்கும் பிரண்டைப் பொடியைப் பற்றிச் சொல்லி அம்மாவை மகிழ்விக்கலாம். நிறைய பெரியோர்கள் ஏங்குவதும் இதுபோன்ற சிறிய அங்கீகாரத்துக்குத்தான்.
ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் எல்லாம் தெரிந்த பெரியோர்களே தங்கள் அனுபவங்களை சொல்லாமல், நான் வாட்ஸ் அப்பில் படித்தேன், யு-டியூபில் பார்த்தேன் என சொல்வதை பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டதுதான் பெரும் சோகம். காரணம் அவர்களும் தொழில்நுட்பத்துடன் இணைந்திருக்கிறார்கள் என்று காட்டிக்கொள்கிறார்களாம்.
ஒருமுறை வயதில் பெரியவர் ஒருவர் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வதன் சிறப்பு குறித்து சொல்லி விட்டு, தான் அதை வாட்ஸ் அப்பில் படித்ததாக பெருமையாகச் சொல்லி அந்தத் தகவலை எனக்கும் ஃபார்வேர்ட் செய்தார். பொறுக்க முடியாமல் நான் அவரிடம், ‘ஏன் தாத்தா நீங்கள் 70 வயது வரை எத்தனையோ தீபாவளியைக் கடந்து வந்திருக்கிறீர்கள். இப்போதுதான் கங்கா ஸ்நானம் பற்றி தெரியுமா’ என்று கேட்டதற்கு அவர் ‘அப்படி இல்லம்மா, இந்த காலத்து குழந்தைகள் வாட்ஸ் அப், யு-டியூப் அப்படி இப்படின்னு சொன்னாத்தானே நம்பறாங்க…’ என்றார்.
அண்மையில் 70 வயதிருக்கும் ஒரு பாட்டியிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ‘நேத்திக்கு கிளப் ஹவுஸ்ல இயற்கை மருத்துவம் பற்றி ஒரு டாக்டர் என்னமா பேசினார் தெரியுமா?’ என்ற போது அசந்தே போனேன். ‘கிளப் ஹவுஸ் யூஸ் பண்ண தெரியுமா?’ என கேட்டேன். ‘என் மகள் அந்த குழுவில் கலந்துகொண்டாள். ஸ்பீக்கரில் போட்டு என்னையும் கேட்கச் சொன்னாள்’ என்றபோது தொழில்நுட்பம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
இந்தத் துறையின் வளர்ச்சி பூஜ்ஜியத்தில் இருந்தபோதில் இருந்து நான் இயங்கி வருவதால் இதன் விஸ்வரூப வளர்ச்சி எனக்கு சொல்லனா பெருமையை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. இதற்காகத் தானே என்னைப் போன்றவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் அவர்களின் திறமைகளை அங்கீகரிப்பது என்பது அவர்களுடனான சுமூகமான அணுகுமுறைக்கு ஒரு சாவி அவ்வளவே. ஆனால் அந்த சாவி எல்லா எல்லோருக்கும் பொருந்தும் என சொல்ல முடியாது. உங்களுக்குப் பொருத்தமான சாவியை நீங்கள்தான் தேட வேண்டும்.
ஒரு சிறுவனிடம் அவன் அம்மா ‘அன்னிக்குப் பார்த்தியா அந்த அங்கிள் உன்னைப் பத்தி எவ்வளவு பெருமையா சொன்னார்…’ என எடுத்துச் சொல்லி அவன் செய்கின்ற சிறு தவறை திருத்த முற்பட்டார்.
அப்போது அந்த சிறுவன் ‘நீ பெருமை அடையணும் என்பதற்காக நான் எனக்கு விருப்பப்பட்டதை செய்யாமல் இருக்கணுமா?’ என்று சொன்னானே பார்க்கலாம்.
‘என் அலுவலக நண்பர் உங்களுடைய சமையல் பற்றி ரொம்ப பெருமையா சொல்லிக்கொண்டிருந்தார்’ என உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் சொன்னால் அவர்களிடம் இருந்தும் இதுபோன்றதொரு பதில் வரலாம்.
‘ம்ஹூம். இதெல்லாம் என்ன பெரிய விஷயம். அந்த காலத்தில் நான் செய்யாத பதார்த்தங்களா… இப்படி எங்களை பெருமைப்படுத்தி புகழ்ந்து புகழ்ந்தே எல்லா வேலைகளையும் எங்கள் தலையில் கட்டிவிட வேண்டியது…’
இவ்வளவுதான் மனிதர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மனிதர்கள் பலவிதம். பழகக் கற்றுக்கொள்வதும் ஒரு கலைதானே?
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். உங்களைச் சார்ந்தோரை அங்கீகரியுங்கள். பல பிரச்சனைகளுக்குத் தானாகவே தீர்வு கிடைக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP