ஜம்முனு வாழ காம்கேரின் OTP-223: பாராட்டில் பங்கீடு வேண்டாமே!

பதிவு எண்: 954 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 223
ஆகஸ்ட் 11, 2021 | காலை: 6 மணி

பாராட்டில் பங்கீடு வேண்டாமே!

யாரையாவது பாராட்ட நினைத்தால் நேரடியாக அவரை மட்டும் பாராட்டுங்கள். அவரது பாராட்டை பங்கு வைக்காதீர்கள். என்ன புரியவில்லையா?

உங்கள் மகனையோ அல்லது மகளையோ பாராட்ட நினைத்தால் முழு மனதுடன் ‘அவர்களை மட்டும்’ குறிப்பிட்டு அவர்கள் செய்த சாதனையைப் பற்றியோ அல்லது அவர்கள் பெற்ற வெற்றி குறித்தோ மட்டும் சொல்லி அவர்களைப் பாராட்டுங்கள்.

அப்படித்தானே பாராட்டுவார்கள். பின் எப்படி பாராட்டுவார்கள் என நினைக்கிறீர்களா? சொல்கிறேன்.

உங்கள் மகள் கர்நாடக சங்கீதத்தில் ஏதேனும் பரிசு பெற்றால் அவளுடைய திறமையைப் பற்றி மட்டும் பேசுங்கள். ‘என் ஆஃபீஸ் நண்பரின் மகள் கூட இப்படித்தான்…’, ‘உன்னுடைய வகுப்புத் தோழி வருடா வருடம் கிளாசிகல் மியூசிக்கில் ஏதேனும் பரிசு வாங்கிடறா… எல்லா சேனல்களிலும் அவள் முகம் வருகிறது…’ என்றெல்லாம் சொல்லி உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரத்திலும் பாராட்டிலும் பங்கு வைக்காதீர்கள். இவ்வளவு ஏன் ‘நான் கூட நன்றாக பாடுவேன். ஆனால்…’ என்று  உங்கள் குறித்துகூட பாராட்டும் அந்த நேரத்தில் பேசவே வேண்டாமே. உண்மையிலேயே உங்கள் மகளின் சங்கீதத் திறமைக்கு அவை எல்லாம் உதவும், ஊக்கமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் இதுபோன்ற விவாதங்களை வேறொரு சமயத்தில் பேசலாம். ஆனால் உங்கள் மகளின் வெற்றியை பாராட்டும் சமயத்தில் வேண்டாமே. அது எதிர்வினையே ஆற்றும்.

ஆமாம். இப்படி தொடர்புப்படுத்தியோ, பங்கீடு செய்தோ சொல்லும் பாராட்டுக்கள் பெரும்பாலும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யாமல் சோர்வடையவே செய்யும்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியோர்களாகிய நமக்குமே இது எரிச்சலைத்தான் தரும். உங்கள் சமையலை மனதார பாராட்டும் உங்கள் கணவர், கூடவே சேர்த்து ‘என் அம்மா எப்படி சமைப்பா தெரியுமா… இப்போ நினைச்சா கூட அந்த சுவை நாக்கிலேயே நிற்கிறது…’ என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

உங்கள் மனைவிக்கு ‘சர்ப்ரைஸாக’ வாங்கி வந்த ஒரு பரிசுப் பொருளை அவர் சந்தோஷப்பட்டுக்கொண்டே திறந்து பார்க்கும் இடைவெளியில் ‘எங்க அப்பா நான் சொல்லாமலேயே நான் நினைக்கின்ற ஸ்வீட்டை கடையில் இருந்து வாங்கி வந்துவிடுவார்… அவருக்கு எப்படித்தான் நான் மனதில் நினைப்பது தெரியுமோ’ என்று சொல்லிக் கொண்டே திறக்கிறார் என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றும் என நினைத்துப் பாருங்கள்.

உங்கள் இணை அது கணவனோ அல்லது மனைவியோ ஏதோ ஓரிரு முறை இப்படி சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு முறை நீங்கள் ஏதேனும் செய்யும்போதும் அதை மற்றவர்களுடன் தொடர்புபடுத்திப் பாராட்டிக்கொண்டிருந்தால் யாருக்குமே எரிச்சலும் சோர்வும்தானே வரும்.

பெரும்பாலும் என் அப்பா அம்மாவின் பன்முகத் திறமைகளை வியந்து மற்றவர்களிடம் சொல்லும்போது பெரும்பாலானோர் ‘அந்த காலத்து பெரியோர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்…’ என்று சொல்வார்கள்.

‘அப்படியா, என் பெரியம்மா கூட அந்த கால மனுஷிதான். ஆனால் செடிகொடிகள், இயற்கை மருத்துவம் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. இவ்வளவு ஏன் தக்காளி தொக்கு எப்படி செய்வது என்பதைக் கூட என் பெற்றோரிடம்தானே கேட்டு தெரிந்துகொள்வார். என் மாமா கூட அந்த காலத்து மனிதர்தான். ஆனால் சமையல் குறித்தோ அல்லது வீட்டு பராமரிப்பு குறித்தோ துளியும் தெரியாதே’ என்று சொல்லி அவர்கள் முகம் சொல்லும் செய்தியை உன்னிப்பாக கவனிப்பேன்.

என் பெற்றோரின் திறமைகள் எனக்கு உசத்தி. அதைப் பொதுமைப்படுத்துவதை என்றுமே நான் விரும்ப மாட்டேன். இருக்கலாம், அந்த காலத்துப் பெரியோர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். ஆனால் நான் என் பெற்றோர் குறித்து சொல்லும்போது அதற்கான அங்கீகாரத்தை பொதுமைப்படுத்தப்படுவதை விரும்பவே மாட்டேன்.

ஆனால் பொது விவாதமாக இருக்கும்போது நாம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம், யாருடன் வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பேசலாம். தவறே இல்லை.

இப்படித்தான் நாம் எல்லோருமே. இயற்கை அப்படித்தான் நம் மனதை கட்டடமைத்துள்ளது. விதிவிலக்குகள் இருக்கலாம். நமக்கான பிரத்யோகமான அங்கீகாரத்தில் பங்கு போடும்போது, அதன் சுவாரஸ்யமும் வீரியமும் குறையத்தான் செய்யும்.

இனி யாரையாவது பாராட்ட நினைத்தால் அதில் மற்றவர்களுக்குப் பங்கீடு செய்யாமல் முழு மனதுடன் முழுமையாக யாருக்கு அந்த பாராட்டைச் சொல்ல நினைக்கிறீர்களோ அவர்களை மட்டும் அந்த நேரத்தில் பாராட்டுங்கள்.

பாராடுவதிலும் கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon