ஜம்முனு வாழ காம்கேரின் OTP-226: குழந்தைகளை MHA -வில் சேர்த்துவிடுங்கள்!

பதிவு எண்: 957 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 226
ஆகஸ்ட் 14, 2021 | காலை: 6 மணி

குழந்தைகளை MHA -வில் சேர்த்துவிடுங்கள்!

என்னுடைய நிறுவனம் சிறு தூசிகூட இல்லாத அளவுக்கு சுத்தமாக இருக்கும். பார்ப்பவர்கள் அதிசயிக்கும் ஒரு விஷயம் இது.

இது எப்படி சாத்தியமானது எனக்கு?

நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் பெற்றோர் வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்யும்போது நாங்கள் புத்தகங்கள் மற்றும் உடைகள் வைத்துக்கொள்ளும் அலமாரிகளை நாங்களே எடுத்துத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.

ஒருமுறை அப்படி சுத்தம் செய்தபோது தேவையில்லாத குப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு தேவையானதை அடுக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. சிறு வயது என்பதால் கொஞ்சம் சலிப்பும் வந்தது. இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் சுத்தம் செய்யும்போது அந்தப் பணி சோம்பலையே உண்டாக்கும் என்பதையும் புரிந்துகொண்டேன். நான் மட்டுமல்ல என் உடன்பிறந்தோரும்தான்.

அன்று என் மனதுக்குள் தானாகவே உண்டான பழக்கம்தான் அவ்வப்பொழுது சுத்தம் செய்து வைக்கும் வழக்கம். எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது, எடுக்கும்போதே தூசியாக இருந்தால் துடைத்து எடுப்பது, போன் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணில் தெரியும் தூசிகளை துணியால் துடைப்பது போன்ற பழக்கங்கள். ‘கண் பார்த்தால் கை செய்யும்’ என்பார்களே அதுவே நியதியானது.

இப்படி செய்கின்ற சின்ன சின்ன வேலைகளில் ஒழுக்கத்தையும் நேர்த்தியையும் கொண்டு வந்தால் வாழ்க்கையில் சலிப்பும், அலுப்பும், சோம்பலும் குறையும்.

இந்த வழக்கம் நான் நிறுவனம் தொடங்கியதும் என் பொறியாளர்களையும் தொற்றிக்கொண்டதன் விளைவே தூசிகளற்ற பெருவாழ்வு.

நாங்கள் காலையில் எழுந்ததும் எங்கள் போர்வை தலையணைகளை மடித்து வைப்பதையும் நினைவு தெரிந்த நாளாய் செய்ய ஆரம்பித்து விட்டோம். நாங்கள் வளர வளர, இப்படி மடித்து வைக்கும் பழக்கத்தினால் நம் தலையணை உறை போர்வை அழுக்காக ஆரம்பிக்கும்போது அது எங்களுக்கு உறுத்தலாகத் தெரியும். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை துவைக்க வேண்டும் என்ற உணர்வும் தானாகவே உண்டாகும்.

என்னுடைய உதவியாளர் நான் இல்லாத நேரத்தில் அலுவலகத்துக்கு யார் யார் வந்து சென்றனர், என் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய அலுவலகத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் என எல்லாவற்றையும்  ‘Log’ நோட்டில் எழுதி வைப்பார். நான் ஏற்பாடு செய்துகொடுத்த வழக்கம்தான். மறந்துவிடாமல் இருக்கவும், எல்லாவற்றிலும் வெளிப்படயாக இருக்கவும் இந்த வழக்கம் உதவி செய்யும். அலுவலகம் என்றல்ல வீட்டில் கூட இதை பின்பற்றலாம். பின்னாளில் Log நோட்டுக்கு பதிலாக கம்ப்யூட்டரிலேயே பதிவு செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தேன். இப்போது அந்த வழக்கம் அலுவலக வாட்ஸ் அப் குழு, இமெயில் என்ற புது பரிணாமத்துடன்.

இந்த வழக்கமும் என் வீட்டில் இருந்து வந்ததுதான். என் பெற்றோர் இருவரும் 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்ததால் அப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அம்மாவுக்கு மாலை நேர ஷிஃப்ட், அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அப்பாவுக்கு மாலை நேர ஷிஃப்ட். என்றேனும் இருவருக்கும் சேர்த்து ஒரே நேர ஷிஃப்ட் வருவதுண்டு. மேலும் ஒருவர் வீட்டுக்கு வருவதற்கும், மற்றொருவர் வீட்டை விட்டு கிளம்புவதற்குமான இடைவெளி ஏற்பட்டால் அப்போது நாங்கள் தனியாக வீட்டில் இருக்க வேண்டி இருக்கும் அந்த இடைவெளியில் வீட்டில் என்ன நடக்கிறது, யாரேனும் வீட்டுக்கு வந்தால் அது பற்றிய குறிப்புகள் போன்றவற்றை ஒரு நோட்டில் எழுதி வைக்கச் சொல்வார்கள். அதற்காகவே ஒரு நோட்டு எங்கள் வீட்டில் இருக்கும். இதுதவிர எங்கள் மூவருக்கும் தனித்தனியாக ஒரு நோட்டு எப்போதுமே உண்டு. அதில்தான் நாங்கள் எங்களுக்குள் சண்டை வந்தால்கூட நாங்கள் சண்டை போட்டுக்கொண்ட விவரத்தை அதில் எழுதி வைப்போம். எங்கள் அப்பா அம்மா வீட்டுக்கு வந்ததும் அதை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து ஆரம்பமாகும். பேசி தீர்த்துக்கொள்வோம். இதன் மூலம் எங்களுக்குள் கம்யூனிகேஷன் கேப் குறைந்தது.

எதுவானாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது. அப்பா அம்மாதான் நமக்குப் பாதுகாப்பு என்ற விஷயங்களை எல்லாம் நாங்கள் குறிப்பெழுதி வைக்கும் நோட்டுகள் உணர்த்தின என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நம் ஒவ்வொரு குடும்பமும் MHA கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகம்தான். MBA தெரியும். அதென்ன MHA.

MBA என்றால் Master of Business Administration. MHA என்றால் Master of House Administration. அவ்வளவுதான்.

வீட்டில் MHA-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள், பின்னாளில் MBA படிக்காமலேயே அதில் இரட்டைப் பட்டம் பெறும் அளவுக்கு அறிவைப் பெற முடியும்.

நீங்களும் உங்கள் பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் சேர்க்கும்போதே வீட்டில் MHA-விலும் சேர்த்துவிடுங்கள். வாழ்க்கையின் அத்தனை சூழ்ச்சுமங்களையும் தாங்களாகவே கற்றுக்கொள்வார்கள்.

எங்களுக்கு எதையும் எங்கள் பெற்றோர் போதிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார்கள். இன்றுவரை அதையே செய்கிறார்கள். நாங்களும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. தானாகவே வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் எங்களுக்குள் சென்றன.

இதுதான் MHA-வின் சிறப்பு.

என்ன நீங்களும் உங்கள் பிள்ளைகளை MHA படிக்கவைக்க முடிவு செஞ்சுட்டீங்களா?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 767 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon