பதிவு எண்: 958 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 227
ஆகஸ்ட் 15, 2021 | காலை: 6 மணி
கூச்ச சுபாவத்தில் இருந்து வெளிவருவது எப்படி?
அன்பாகவும் பாசமாகவும் இருப்பவர்கள் இரண்டு மனிதர்களுக்கு சமம். அவர்களின் அன்பின் ஆழத்துக்கு ஏற்ப இரண்டு மனிதர்கள் என்ற எண்ணிக்கை பலமடங்காகலாம். எப்போதும் அவர்களுடன் ஒரு துணை இருந்துகொண்டே இருப்பதைப் போன்ற பலம் கிடைக்கும்.
கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பவர்களுடன் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருப்பதைப் போலவே தவிப்பார்கள். அவர்களுடன் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் ஒற்றை மனிதர்கள்தான்.
நீங்கள் எத்தனை மொழிகள் கற்றுத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அத்தனை மனிதர்களுக்கு சமம். உங்கள் தாய் மொழி தமிழ் என்றால் தமிழுடன் சேர்த்து ஆங்கிலம், மலையாளம் என இருமொழிகளைக் கற்று வைத்திருந்தால் நீங்கள் ஒருவர் அல்ல, மூவர். ஒரு மொழியில் ஆழமான புலமை இருந்தால் மற்ற மொழிகளைக் கற்றுகொள்வது அத்தனை கடினம் அல்ல. எனவே தாய்மொழியிலாவது தவறில்லாமல் இலக்கண இலக்கிய சுத்தத்துடன் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்துகொள்ளுங்கள். மற்றவற்றை கற்கும் ஆர்வம் தானாகவே வரும்.
எத்தனைக்கு எத்தனை உங்கள் பண்புகளையும், திறமைகளையும் சீறும் சிறப்புமாக உயர்த்திக்கொள்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை நீங்கள் பலசாலியாக உணர்வீர்கள்.
ஒரு சிலரைச் சுற்றி எப்போதும் சிறு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். பெரும்பாலும் அதற்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வாக இருக்கும். பொது நிகழ்ச்சியோ அல்லது குடும்பத்து நிகழ்ச்சியோ, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் அங்கிருக்கும் நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக செலவிடவே விரும்புவார்கள். அந்த நேரத்தில் யார் காமெடியாக பேசிக்கொண்டு எல்லோரையும் கவர்கிறார்களோ அவர்களைச் சுற்றி கூட்டம் கூடுவது இயல்புதானே.
பெரும்பாலான குடும்ப நிகழ்ச்சிகளில் என்னைச் சுற்றியும் கூட்டம் இருக்கும். அதற்கு இரண்டு காரணங்கள். அவை என்ன தெரியுமா?
ஒன்று தொழில்நுட்பம் சார்ந்த என் திறமை. இரண்டாவது ஜோதிடத்தில் ஈடுபாடு.
முதலாவதை காரணம் காட்டி, தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவார்கள். பின்னதைக் காரணம் காட்டி, ‘எனக்கு இன்ன ராசி இந்த வருடம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா, திருமணம் ஆகுமா?’ அப்படி இப்படி என ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொள்வார்கள்.
உங்களில் யாரேனும் பொதுவெளியில் பழகுவதற்கு கூச்சப்படும் சுபாவம் உள்ளவராக இருந்தால் அதில் இருந்து வெளிவருவதற்கும் சகஜமாக பழகுவதற்கும் மிக சுலபமான வழி உள்ளது.
அதாவது, உங்களுக்கே உங்களுக்கான திறமையை வளர்த்துக்கொண்டு அது சார்ந்து உங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சங்கோஜ குணம் மெல்ல மெல்ல உங்களைவிட்டு விலகி விடும்.
உதாரணத்துக்கு, நீங்கள் படம் வரைவீர்கள் என்றால் சும்மா உட்கார்ந்திருக்கும்போது பென்சிலால் பேப்பரில் ஸ்கெட்ச் செய்யுங்கள். Rough Sketch ஆக இருந்தாலும் பரவாயில்லை. அப்போது அதைப் பார்ப்பவர்கள் ‘நீங்கள் ஆர்டிஸ்ட்டா?’, ‘உங்களுக்கு படம் வரைய வருமா?’ என்றும் கேட்டு உங்களை நெருங்குவார்கள். அந்த சூழல் உங்களை சகஜமாக்கும். அப்படியே அங்கிருக்கும் ஏதேனும் ஒரு குழந்தையை கோடுகளால் உருவமாக்கி அதன் பெற்றோரிடம் கொடுங்கள்.
நாம் போன் பேசும்போதே நம் எதிரே பேப்பரும் பேனாவும் இருந்தால் அதில் நம்மையும் அறியாமல் கிறுக்கத் தொடங்குவோம் தானே? கால் மணி நேரம் தொடர்ச்சியாக போன் பேசினால் ஏதேனும் ஒரு உருவத்தை வரைந்து முடித்திருப்போம். நமக்கு ஓவியத்தில் திறமை இருந்தால் அந்த உருவம் மார்டன் ஆர்ட் போல வந்திருக்கும்.
இதே நுட்பத்தைத்தான் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் அமர்ந்திருக்கும்போதும் செய்யச் சொல்கிறேன்.
இங்கு நான் ஓவியம் வரைவதை உதாரணத்துக்காக மட்டுமே சொல்லி உள்ளேன். உங்களை இயல்பாக வெளிப்படுத்திக்கொள்ள, உங்கள் சங்கோஜ குணத்தை விரட்டி அடிக்க உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து அதை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு முறை விவேகானந்தா ஆஸ்ரம மாணவர்களுக்கு உரை ஆற்றச் சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களில் ஒரு மாணவன் மட்டும் ‘அக்கா, உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே, டிவியில் எல்லாம் வருவீர்கள்தானே?’ என கேட்டு என்னுடன் பேசுவதற்கான சூழலை தானாகவே உருவாக்கிக்கொண்டான்.
நிகழ்ச்சி முடிந்ததும் இதை அங்கிருந்த ஸ்வாமிஜியிடம் பகிர்ந்துகொண்ட போது ‘மாணவர்களில் சிலர் இப்படித்தான் பிறர் தங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொதுவான டாப்பிக்கை எடுத்துப் பேசி மிகவும் தெரிந்தவர் போல காட்டிக்கொண்டு எதிராளியின் கவனத்தை ஈர்ப்பார்கள். அந்த மாணவன் அந்த வகையில் வருவான்…’ என்றார்.
இருந்துவிட்டுப் போகட்டுமே. நான்கு பேர் மத்தியில் பேசுவதற்கே கூச்சப்பட்டுக்கொண்டு நடுங்கியபடி நிற்பதற்கு பதில் தங்களை தைரியமாக வெளிப்படுத்திக்கொள்ள இதை ஒரு யுக்தியாக பயன்படுத்துவதில் தவறே இல்லை என்பேன். ஆனால் என்ன, எதுவும் எல்லை மீறாமல் அததற்கான வட்டத்துக்குள் இருந்துவிட்டால் எல்லாம் நல்லவையே, எல்லோரும் நல்லவர்களே, அனைத்தும் சுபம்தான்.
கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களில் ஒருசிலர் தேவாரம், திருவாசகம், கந்தர் சஷ்டிக் கவசம் போன்றவற்றை உரக்கப்பாடிக்கொண்டே பிரகாரத்தை வலம் வருவார்கள் அல்லது ஓரிடத்தில் அமர்ந்து பாடுவார்கள். அவர்கள் தங்கள் குரல் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். கர்ப்பகிரஹத்துக்குள் இருக்கும் கடவுளுக்கும் அவர்களுக்குமான நேரடி தொடர்பு இருப்பதைப் போல மெய் மறந்து பாடுவார்கள். நமக்கு அந்த சூழல் பிடித்துப் போகும். அவர்களின் குரலை தெய்வீகமாக உணர முடியும். அவர்களின் குரலும், முகமும், உடல் மொழியும் நாம் அந்த கோயிலை விட்டு வெகுதூரம் வந்த பிறகும் நம்முடனேயே இணைந்து பயணம் செய்யும்.
இப்படித்தான் உங்களுக்குள் இருக்கும் திறமை உங்கள் சக்தியை பலமடங்காக்கும். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டுமே.
உங்களுக்குள் இருக்கும் அன்பையும் பாசத்தையும் சரியாக வெளிப்படுத்த தெரிந்துகொள்வதும் திறமைதான். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றறிவதும் திறமைதான். உள்ளுக்குள் புதைந்து கிடப்பதை புடம்போட்டு அழகாக வெளிப்படுத்தும் எல்லாமே திறமைதான்.
சங்கோஜ குணத்தை விரட்டி அடிக்க வழி கிடைத்துவிட்டதா? ஜமாயுங்கள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP