ஜம்முனு வாழ காம்கேரின் OTP-225: ‘மேக்ரோ’ பிரச்சனைகளுக்கு ‘மைக்ரோ’ காரணங்கள்!

பதிவு எண்: 956 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 225
ஆகஸ்ட் 13, 2021 | காலை: 6 மணி

‘மேக்ரோ’ பிரச்சனைகளுக்கு ‘மைக்ரோ’ காரணங்கள்!

நட்பு நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். ஆனால் திடீரென என்ன  காரணம் என்றே தெரியாமல் விரிசல் உண்டாகிவிடும். நாமும் என்ன காரணம் என்று மண்டையை உடைத்துக்கொண்டு அலசி ஆராய்ந்துகொண்டிருப்போம்.

பணம் கடன் கேட்டபோது கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதே, அதுவாக இருக்குமோ…

அவர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் போனதால் இருக்குமோ…

அலுவலகத்தில் நமக்கு பதவி உயர்வு கிடைத்ததில் அவருக்கு ஏதேனும் வருத்தம் இருக்குமோ…

அப்படி இப்படி என நமக்குத் தெரிந்த காரணிகளை எடுத்து வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் அந்த விரிசலுக்கு பெரிய காரணங்கள் எதுவுமே காரணியாக இருக்காது. உணர்வு ரீதியான மிக நுண்ணிய ‘மைக்ரோ’ காரணிகளே அந்த விரிசலுக்குப் பிரதானமாக அமைந்துவிடுவதுண்டு.

நம் உடம்பில் பூராணோ, பாம்போ, தேளோ கடித்தால் நமக்கு என்ன கடித்தது என்று தெரியும். நமக்கு ஏற்பட்ட வலிக்கும் அலர்ஜிக்கும் அதுவே காரணம் என்று கண்டுபிடித்துவிடலாம். காரணம் நம்மைக் கடித்தவற்றின் உருவம் நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால், நமக்கே தெரியாமல் நாம் முகர்ந்துவிடும் தூசியினாலும், புகையினாலும் ஏற்பட்ட அலர்ஜிக்கு காரணம் கண்டுபிடிப்பது கடினம்தானே? ஒட்டடை அடித்தாலோ அல்லது வாகன நெரிசலில் செல்லும் சூழல் ஏற்பட்டாலோ நாம் அதை ஒரு காரணமாக்கி ‘நம் அலர்ஜிக்கு அதுவே காரணம்’ என அனுமானிக்கலாம். ஆனால், எங்குமே செல்லாமல் சாதாரணமாக புழங்கிக்கொண்டிருக்கும் வீட்டில் இருக்கும்போதுகூட நமக்கு அலர்ஜி ஏற்படலாம். அதற்கு காரணம் கண்டுபிடிப்பது கடினம்தான்.

இந்த கொரோனா கொடுங்காலத்தில் வீட்டுக்கு வாசலில் வைத்துவிட்டுச் செல்லும் கொரியர்கள் மீது நாம் சுகாதாரத்துக்காக அடிக்கும் சானிடைசர் ஸ்ப்ரேயின் வாசனை கூட ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தலைவலியை உண்டாக்கும்.

இந்த உதாரணங்களைப் போல்தான் மனிதர்களுக்குள் உண்டாகும் விரிசல்களுக்குப் பெரும்பாலும் மிகச் சிறிய காரணங்களே காரணிகளாக இருக்கும்.

சொத்துப் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். கோர்ட்டில் கேஸ் போட்டு கூட பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரலாம். தீர்ப்பானதும் எதிரும் புதிருமாக இருந்த உறவுகள் நட்பாகும் நிகழ்வுகளையும் பார்த்திருப்போம்.

திருமண உறவில் பிரச்சனை என்றால் விவாகரத்து வாங்கிய கணவன் மனைவி கூட நண்பர்களாக இருக்கும் உண்மை கதைகளையும் பார்த்து வருகிறோம்.

இப்படி பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சிறிய பிரச்சனைகள்தான் தீர்வில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்.

நமக்கே தெரியாமல் நாம் என்றோ எப்போதோ பேசி இருக்கும் ஒற்றை வார்த்தை முகம் பார்க்க முடியாத அளவுக்கு விரோதத்தை உண்டாக்கிவிடுவதுண்டு. ‘நீ அன்று அப்படிச் சொன்னாய்’ என்று அதை ஒரு காரணமாக சொல்லவும் வெட்கப்பட்டு அந்த வடுவை மனதில் வைத்துக்கொண்டே ஒதுங்கிச் செல்பவர்களும் உண்டு.

ஜோக் என்ற பெயரில் வீட்டுப் பெண்களை கிண்டல் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பெண்களை மட்டமாக பேசியே கைத்தட்டல் வாங்குவது, உருவத்தில் குண்டானவர்களை மையப்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் அவர்களைக் கேவலப்படுத்துவது இவற்றின் தாக்கத்தால் நடைமுறையிலும் அரங்கேறும் நிறைய நகைச்சுவை உரையாடல்கள் பூதாகரமான பிரச்சனைகளுக்குக் காரணிகளாக அமைந்து விடுவதுண்டு.

சாதாரணமாக திருமண நிகழ்வுகளில் கூட ‘இப்போதோ சிரிச்சுக்கோ, இன்றுதான் நீ சந்தோஷமாக சிரிக்கும் கடைசி நாள்’ என அபசகுனமாக ஜோக் அடிப்பவர்களை என்னவென்பது?

அது ஜோக்காகவே இருக்கட்டும். ஆனால் திருமண மேடையில் விரதங்கள், ஹோமங்கள், பூஜைகள் செய்து அக்னி சாட்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மங்கள நிகழ்ச்சியில் வந்திருக்கும் அத்தனை பேரும் பூதூவி ஆசிர்வதித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவை எல்லாவற்றையும் புறந்தள்ளி மணமகனை கிண்டல் செய்யும் அபசகுன நகைச்சுவையை யாரால் ரசிக்க முடியும்? மணப்பெண்ணால் கூட ரசிக்க முடியாது. திருமண மேடை எனும் நாகரித்தால் வேண்டுமானால் வேறு வழியில்லாமல் அந்த நகைச் சுவையை கண்டும் காணாமால் போட்டோவுக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கலாம்.

என்ன காரணம் என்றே தெரியாமல் சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நட்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெரிய பெரிய காரணிகள் குறித்து யோசிக்கும் அதே வேளையில் என்றாவது, எப்போதாவது, எங்காவது போகிற போக்கில் நமக்கே தெரியாமல் அவர்கள் தன்மானத்தை சற்றே தட்டிவிட்டுச் சென்றிருக்கிறோமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்.

ஆம். பெரும்பாலான பிரச்சனைக்கான அடிநாதம் ‘மேக்ரோ’ காரணங்கள் அல்ல, ‘மைக்ரோ’ காரணங்களாகவே இருக்கும்.

உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம்!

 

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 889 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon