பதிவு எண்: 962 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 231
ஆகஸ்ட் 19, 2021 | காலை: 6 மணி
எழுத்து செய்யும் மேஜிக்குகள்!
‘எனக்கு நீங்கள் கண்டிப்பும் கனிவும் காட்டும் ஆசிரியை’ என என் எழுத்தின் தீவிர வாசகி ஒருவர் தனித்தகவலில் கருத்து சொல்லி இருந்தார்.
எனக்கு ஒரு நிமிடம் ‘திக்’ என்றிருந்தது.
‘நான் எப்போது உங்களிடம் கண்டிப்பாக இருந்திருக்கிறேன்…’ என்று கேட்டேன்.
‘ஆமாம் மேடம்… நீங்கள் என்னிடம் கண்டிப்பு காட்டினீர்கL, கனிவாகவும் நடந்துகொண்டீர்கள்…’ என்று சொன்னதையே திரும்ப வேறு மாதிரி சொன்னார்.
எனக்கு கொஞ்சம் படபடப்பானது. ‘புரியும்படி சொல்லுங்கள், என்ன காரணத்துக்காக நான் கண்டித்தேன், கனிவு காட்டினேன்’ என்றேன்.
‘ஒரு முறை தங்கள் புரொஃபைல் புகைப்படம் பார்த்து அந்த கண்களில் தான் எத்தனை கருணை என்று குறிப்பிட்டு இருந்தேன். எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியையின் முகச்சாயலில் தாங்கள் உள்ளீர்கள். பள்ளியில் கண்டிப்புடன் இருக்கும் அவர் ஆச்சாரம் மிக்கவர். ஆனால் என்னை அவர் அடுக்களை வரை அழைத்து சென்று காஃபி கலந்து தருவார். சிறுமியான என்னை அவர் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவார். கண்டிப்பும் கருணையும் மிக்க அவரை உங்களில் கண்டேன்…’
எனக்கு படபடப்பு அடங்கியது.
அத்துடன் விட்டாரா? என் கேள்விக்கு எதிர்கேள்வி வேறு கேட்டார்.
‘இப்போது சொல்லுங்கள், நீங்கள் எங்கே என்னிடம் கண்டிப்பு காட்டீனீர்கள்?’
எழுத்தின் வாயிலாக அறிமுகம் ஆகும் வாசக வாசகிகள்தான் எத்தனை அன்பைப் பொழிகிறார்கள். என் எழுத்தின் அவர்களின் ஆதர்ச பிம்பங்களைக் காண்பதை நான் உணரும் தருணம் உண்மையில் சிலிர்ப்பாக உள்ளது.
அனைவரின் அன்புக்கும் நன்றியும், பேரன்புகளும்! வேறென்ன சொல்ல?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP