பதிவு எண்: 963 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 232
ஆகஸ்ட் 20, 2021 | காலை: 6 மணி
‘நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும்!’
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை நமக்கு தொந்திரவு செய்பவர்களை பொதுவெளியில் போட்டு வாட்டி வதக்குவதைவிட தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம் அல்லது ஒதுங்கச் சொல்லலாம் அல்லது ஒதுக்கி வைக்கலாம்.
ஏனெனில் அவர்களின் தவறுகளை பொதுவெளியில் சொல்லும்போது குறிப்பாக சமூக வலைதளங்களில் அது நமக்கு வேறு வகையில் தொந்திரவுகளை உண்டாக்கலாம். தவறே செய்யாதவர்களுக்கும் ‘ஓ, இதுபோல செய்யலாம் போல் இருக்கிறதே’ என்ற எண்ணத்தை உண்டு செய்ய வாய்ப்பு ஏற்படும். எனவே கவனம்.
மேலும் நம்மைப் பிடிக்காதவர்கள் அனைவரும் ஒன்று சேராமல் இருக்க, வெர்ச்சுவல் உலகைப் பொறுத்தவரை பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் தீர்த்துக்கொள்வதுதான் சிறந்தது. இல்லை என்றால் ‘எதடா சாக்கு’ என்று காத்திருப்பவர்கள் நமக்கு எதிராக வியூகம் அமைத்துக்கொண்டு வம்பு பேசுவதற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.
வெர்ச்சுவல் உலகம் என்றல்ல, நிஜ உலகிலும் நம் எதிரிகளை / நம்மைப் பிடிக்காதவர்களை / நமக்குப் பிடிக்காதவர்களை நாம் எப்படி கையாண்டால் நாம் நிம்மதியாக இருக்க முடியும் தெரியுமா?
அவர்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் நன்றாக இருந்தால்தான் அவர்களால் நமக்கு உண்டாகும் பிரச்சனைகள் குறையும். இல்லை என்றால் அவர்கள் நமக்கு எதிராக தொந்திரவுகளை அதிகம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
‘நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும்’ என நினைப்பது பெருந்தன்மை மட்டுமல்ல, நமக்கான பாதுகாப்புக் கவசமும் கூட.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP