பதிவு எண்: 964 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 233
ஆகஸ்ட் 21, 2021 | காலை: 6 மணி
சேவை Vs சேவை மனப்பான்மை!
இரண்டும் ஒன்றல்ல. ஆனால் தொடர்பு உண்டு.
சேவை என்பது குறிப்பிட்ட சமுதாய நலனுக்காகவோ அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக நம்மால் ஆன உதவியை செய்வது. அது பண உதவியாகவோ அல்லது உடல் உழைப்பாகவோ அல்லது நம் கல்வி அறிவினால் செய்யும் முன்னெடுப்புகளாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணம்: பேரிடர் காலங்களில் நேரடியாக களப்பணி செய்வது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் காப்பகங்களுக்குச் சென்று பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்வது, அங்கு நம் பிறந்தநாள், திருமணநாள் போன்ற சிறப்பு தினங்களைக் கொண்டாடி அவர்களுடன் நேரம் செலவழிப்பது, சொந்தமாக அறக்கட்டளை ஏற்படுத்தி ஆதரவற்றவர்களுக்கு காப்பகம் அமைத்துக் கொடுத்து அவர்களை வாழச் செய்வது என்பதெல்லாம் சேவை செய்வதில் அடக்கம்.
ஆனால், அவரவர்கள் துறைசார்ந்த பணிகளை செய்வது சேவை செய்வதன் கீழ் வராது. நாம் கற்றதையும், பெற்ற அனுபவங்களையும் வஞ்சனை இல்லாமல் நேர்மையாக செய்யும் பணியில் காட்டுவது என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்ற பிரிவில் வேண்டுமானால் வரலாம். அவை சேவை அல்ல.
‘நான் என்னமா ஓடா உழைக்கிறேன் என் நிறுவனத்துக்கு…’ என ஒரு சிலர் புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதும், அங்கு செய்யும் பணிகளில் நேர்மையாக இருப்பதும், நீங்களும் உயர்ந்து, உங்கள் நிறுவனத்தையும் உயர்த்திப் பிடிப்பதும் சேவை அல்ல. சேவை மனப்பான்மையுடன் உங்கள் பணிகளை செய்வதில் வரும். அதில் கடமை கொஞ்சம் தூக்கல்.
நடந்து பல வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றளவும் என் மனதில் நிற்கும் காட்சி ஒன்றை பகிர்கிறேன்.
ஒரு வங்கியில் இருந்து வெளியே வந்த ஒரு மூதாட்டி கால் இடறி கீழே விழுந்துவிட்டார். அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி உடனடியாக தன் டேபிளுக்கு அருகில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெடஸ்டல் ஃபேனை அந்த மூதாட்டியின் முகத்தை நோக்கி திருப்பி வைக்கிறார். தன் தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்து குடிக்கச் சொல்கிறார். அவரை ஆசுவாசப்படுத்திக்கொள்ளச் சொல்கிறார். பிறகு அவர் எழுந்துகொள்ள உதவியும் செய்கிறார். கண்களால் சிரித்து, நன்றி சொல்லி, வாழ்த்தி விடைபெற்ற அந்த மூதாட்டிக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும்.
இதில் அந்த செக்யூரிட்டி செய்வதது சேவை அல்ல. சேவை மனப்பான்மையுடன் செய்த செயல். அதில் மனிதாபிமானம் கொஞ்சம் தூக்கல்.
சேவையை ஆத்மார்த்தமாக செய்ய வேண்டுமானால்கூட சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
எல்லோருக்கும் சேவை செய்வதற்கான சாத்தியகூறுகள் குறைவு. ஆனால் அவரவர் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்வது என்பது நித்தியப்படி பணிகளை செய்யும்போதே செய்ய முடியும்.
என்னால் தேவை உள்ள இடத்துக்கு ‘சேவை’ செய்யவும் முடியும். செய்யும் பணிகள் அத்தனையையும் ‘சேவை மனப்பான்மை’-யுடனும் செய்ய முடியும்.
உங்களால்?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP