ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1009
அக்டோபர் 5, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி
நீங்கள் அதிர்ஷ்டக்காரரா, துரதிஷ்டக்காரரா?
சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மருந்துக் கடையில் சமித்து, தர்ப்பைக் கயிறு, முழு கொட்டைப் பாக்கு, விரலி மஞ்சள் இவற்றுடன் இன்னும் சில நாட்டு மருந்துப் பொருட்களை வாங்க வேண்டி இருந்தது.
நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நாட்டு மருந்துக் கடையில் அவை கிடைக்கும்தான். ஆனாலும் தவிர்த்தோம். காரணம் அந்தக் கடை உரிமையாளரின் அணுகுமுறை. அவர் எப்போதுமே ‘இஞ்சி தின்ற குரங்கு’ என்று சொல்வார்களோ அதுபோலவே முகத்தை வைத்துக்கொண்டிருப்பார். ஏதேனும் கேட்டால் எரிச்சலான குரலில் பதில் அளிப்பார். கேள்விக்கான பதிலே ‘விட்டேத்தியாக’ இருக்கும்.
ஆகவே அதைத் தவிர்த்து ஆதம்பாக்கம் பகுதியில் இருக்கும் மற்றொரு கடையை அணுகினோம். அப்பாதான் கூகுளில் தொலைபேசி எண் தேடி எடுத்தார். செல்வதற்கு முன்னர் போன் செய்து நாங்கள் கேட்டிருந்த பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என கேட்டறிந்தோம். போனில் அவர் பேசுகின்ற தொணியிலேயே அத்தனை உற்சாகம். ’வாங்கய்யா, எப்ப வேணா வாங்க… கடை திறந்துதான் இருக்கும்…’. அவரது மரியாதையும் பணிவும் அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது.
நேரடியாக கடைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்ததும் போனில் பேசியதைவிடவும் கூடுதலான மரியாதையும் உற்சாகமும் தொற்றிக்கொண்டது. வழக்கமான நாட்டு மருந்துக் கடையை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்தது. கடை அகலவாக்கில் தெருவை அடைத்தாற்போல் இருந்ததால் அதன் கட்டமைப்பு ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. ஆம். நீள வாக்கில் சந்துபோல உள்ளே நீளமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்களைவிட அகலவாக்கில் விரிந்திருக்கும் கட்டிடங்கள் எடுப்பாக பார்ப்பவரை கவரும் வண்ணம் இருக்கும் என்பது என் கண்ணோட்டம்.
கடையின் உரிமையாளருக்கு மிஞ்சிப் போனால் 60 வயதிருக்கும். கடையில் வேலை செய்ய இரண்டு இளைஞர்கள். அவர் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். ‘சாருக்கு என்ன வேணுமோ எடுத்துக் கொடுப்பா…’ என்று சொல்லிவிட்டு அந்தக் கடைக்கு வந்திருந்த மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
நாங்கள் வாங்க வேண்டிய பொருட்களில் ஒருசில அந்தக் கடையில் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் எங்களிடம் ‘கவலையேபடாதீங்க… எனக்கே வேறொரு பகுதியில் இன்னும் இரண்டு கடைகள் இருக்கு… அங்குள்ளதா என பார்த்துவிட்டு இன்று இரவுக்குள் உங்களுக்குக் கொடுத்துடறேன்…’ என்றார்.
‘இல்லை, கொஞ்சம் அவசரம்… வெளியூர் அனுப்பணும்… திரும்பத் திரும்ப கடைக்கு வந்து அலைந்துகொண்டிருக்க முடியாது’
‘அட, நீங்க ஏன் வரணும்… நானே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன்…’
‘நாங்கள் இந்தப் பகுதியில் இல்லை’ எனச் சொல்லி நாங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னோம்.
‘அய்யா, நீங்க அமெரிக்காவிலேயே இருங்களேன்… நீங்கள் கேட்டப் பொருள் உங்கள் வீடு தேடி வரும்… நானே நேர்ல கொண்டு வந்து கொடுக்கிறேன்.’ நேர்மறையை அட்சயப்பாத்திரத்தில் வைத்திருப்பாரோ என நினைக்கும் அளவுக்கு குரலிலும், உடல் மொழியிலும், சிரிப்பிலும் அத்தனை மகிழ்ச்சியும் உற்சாகமும்.
‘உங்கள் அந்த இரண்டு கடைகளிலும் அந்தப் பொருட்கள் இல்லை என்றால் அதற்கு மேல் வெறெங்காவது தேடி வாங்குவது சிரமமாகிவிடும்…’ என்றோம்.
’அட நீங்க வேற… என் கடைக்கு வந்துட்டு இப்படி கவலைப்படறீங்களே… என் கடையில் இல்லைன்னா நான் பஜார் சென்று நாளை மதியத்துக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து நானே கொடுக்கிறேன்… கவலைப்படாமல் கிளம்புங்க…’ இப்படிச் சொன்ன பிறகு யார் வேறு கடை தேடிக்கொண்டிருப்பார்கள் சொல்லுங்கள்.
வீடு வந்து சேரும் வரை அந்த நாட்டு மருந்துக்கடை உரிமையாளரின் அணுகுமுறையே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
நாங்கள் அமெரிக்காவில் இருந்தால் அவரால் நேரில் வந்து கொடுக்க முடியப்போவதில்லை. அது யாருக்கும் சாத்தியமும் இல்லை. கொரியரில் வேண்டுமானால் அனுப்ப முடியும். ஆனால் அவரோ வாடிக்கையாளரை திணறத் திணற நேர்மறைக்குள் முக்கி எடுக்கும் ‘அய்யா, நீங்க அமெரிக்காவிலேயே இருங்களேன்… நீங்கள் கேட்டப் பொருள் உங்கள் வீடு தேடி வரும்… நானே நேர்ல கொண்டு வந்து கொடுக்கிறேன்.’ என்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தினார்.
இதுதான் அவரது வெற்றி.
எங்கள் வீட்டுக்கு மிக அருகிலேயே உள்ள நாட்டு மருந்துக் கடையை நாங்கள் தவிர்த்ததற்குக் காரணம் அந்த கடை உரிமையாளரின் அணுகுமுறை. கடையில் நாம் கேட்ட பொருட்கள் இருந்தாலும் அவற்றைத் தேடிப் பார்க்க சோம்பல்பட்டுக்கொண்டு ‘இல்லை’ என்றோ ‘பிசியான நேரத்தில் வந்திருக்கீங்களே… இப்பவெல்லாம் வந்து இல்லாத பொருட்களை கேட்காதீங்க… பிறகு வாங்க…’ என்றோ சொல்லி வாடிக்கையாளரை அவசரமாய் வெளியில் அனுப்பவே பார்ப்பார். பல நேரங்களில் நல்ல விஷயங்களுக்காக ஏதேனும் வாங்கச் சென்றிருக்கும் வாடிக்கையாளர்கள் அவரது அணுகுமுறையினால் ‘அபசகுணமாய்’ உணர்வார்கள்.
கடையில் பணி புரிபவர்கள் ‘சார் உள்ளே இருக்கிறது…’ என சொன்னால் ஏதோ தனக்குள் முணகிக்கொண்டே ‘போய் பார், இவருக்குத் தேடிக்கொண்டிருந்தால் அந்த கஸ்டமரை யார் கவனிப்பது?’ என மிரட்டும் தொணியில் பேசுவார்.
அதனாலேயே பெரும்பாலும் நாங்கள் அவர் கடையை தவிர்ப்போம். ஆனால் அவர் கடைக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எப்படிப்பட்ட அணுகுமுறை இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றால் முதலாவதாகக் குறிப்பிட்ட நாட்டு மருந்துக் கடைக்கும், இந்தக் கடைக்கும் என்னதான் வித்தியாசம்?
வித்தியாசம் இல்லாமலா? இருக்கிறது.
முதலாவதாக குறிப்பிட்ட கடை உரிமையாளரின் செய்கையில் தெய்வீகத்தன்மை இழைந்தோடியதை நான் விவரித்ததில் இருந்தே அறிந்துகொண்டிருப்பீர்கள். செய்கின்ற தொழிலில் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் ‘அந்தக் கடை ரொம்ப அதிர்ஷ்டக்காரக் கடை’ என்ற பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. இரண்டாவதாகக் குறிப்பிட்ட கடை உரிமையாளரிடம் அது மிஸ்ஸிங். அவ்வளவுதான்.
‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்று சொல்வார்களே அதுபோல வேறெந்த நாட்டு மருந்துக்கடையும் அந்தப் பகுதியில் இல்லாததால் பின்னவரின் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். வேறொரு நல்ல அணுகுமுறை கொண்ட கடை உரிமையாளருடன் ஒரு கடை அந்தப் பகுதியில் திறக்கப்பட்டால் பின்னவரின் கடைக்கு வாடிக்கையாளர்கள் குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு.
நம் ஒவ்வொருவருக்குள்ளேயுமே கொண்டாட்டமாக வாழும் வழிகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. ‘நானெல்லாம் அதிர்ஷ்டமில்லாதவன்’ என்று புலம்புவதே சுகமாக இருப்பதால் நமக்கு இயற்கை இயல்பாக அளித்துள்ள அதிர்ஷ்டங்களை துச்சமாகக் கருதி ஒதுக்குகிறோம். அவ்வளவுதான்.
நம்மிடம் உள்ள பொக்கிஷங்களைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதும், தேவை இல்லை என துச்சமாகக் கருதி தூக்கி எறிவதும் வெவ்வேறல்ல. ஒன்றுதான்.
சுருங்கச் சொன்னால் நாம் அதிர்ஷ்டக்காரராய் மாறுவதும், துரதிஷ்டக்காரராய் மாறுவதும் நம் கைகளில்தான். உணர்வோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP