ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1010
அக்டோபர் 6, 2021 | புதன் | காலை: 6 மணி
துடுப்பும், தூண்டுகோலும்!
எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் பலம் தெரிவதில்லை. அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லும்போது அவர்களுக்கே அது பெருமையாக இருக்கும். அந்தப் பெருமையே அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
தன் குழந்தைகளுக்கு அவரவர்களின் குற்றங்களையும் குறைகளையும் அவர்களை உணரச் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு தன் குழந்தைகளுக்கு அவர்களின் பெருமைகளையும் சின்ன சின்ன வெற்றிகளையும் அவர்களை உணரச் செய்வதும் அதிமுக்கியம். அது பெற்றோரின் கடமையும்கூட.
குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கான நமக்குமே கூட நம் பலம் பல நேரங்களில் தெரியாது. மூன்றாவது நபர் அதை எடுத்துச் சொல்லும்போதுதான் நாமே அதை கவனிக்கத் தொடங்குவோம். அதை சரியாக பயன்படுத்துவர்களுக்கு, உன்னிப்பாக உணர்பவர்களுக்கு அந்த விஷயமே வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதற்கான உந்துகோலாகவும் அமையலாம். எனவே எல்லா விமர்சனங்களையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லாமல் அதை நம் உள் நோக்கிய பார்வையாக்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு தன் குழந்தை ஏழாவது எட்டாவது படிக்கும்போதே இந்தியில் அத்தனை உள்ள அனைத்துப் பிரிவிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சர்டிஃபிகேட் வாங்கி விடுவது பெற்றோருக்கு வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். அதனால் அந்த விஷயத்துக்காக அந்தக் குழந்தையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடாமல் இருக்கலாம். காரணம், அந்த விஷயத்தைவிட அவர்களின் எதிர்பார்ப்பு அந்தக் குழந்தையின் வழக்கமான பள்ளி கல்வி மற்றும் அது சார்ந்த உயர்வுகளை நோக்கியே இருக்கும். அதுதான் சரியான அணுகு முறையும் கூட. தவறென்றும் சொல்ல முடியாது.
ஆனால் மூன்றாவது நபராக அந்தக் குழந்தையை கவனிக்கும் நபர்களுக்கு அது பெரும் சாதனையே. அந்த சாதனைக்காக அவர்கள் அந்தக் குழந்தையை பாராட்டலாம். வாழ்த்தலாம். ஏன் அதையே காரணம் காட்டி தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஒப்பிட்டு அவர்களை காயப்படுத்தலாம்.
ஆனால் ஒரு நல்ல உளவியலாளர் அந்த விஷயத்தை எப்படி கையாள்வார் தெரியுமா?
‘அடடா, எத்தனை பெரிய சாதனை இது. இத்தனை சிறிய வயதில் உன்னால் இப்படி இந்தியில் எல்லா நிலைகளையும் ஒரே முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடிந்தது என்றால் உன்னால் முடியாத செயல் இந்த உலகில் கிடையவே கிடையாது. இப்போது உனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் தெரியும். ஆக, நீ மூன்று நபர்களுக்கு சமம்…’
இப்படி அந்தக் குழந்தையை பாராட்டி ஊக்குவிப்பார். அந்த ஊக்குவிப்பே அந்தக் குழந்தையின் ஆகச் சிறந்த பலமாக வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல உதவும் துடுப்பாக மாறவும் செய்யலாம். எது எப்போது யாருக்கு எப்படி பற்றுகோலாக மாறும் என்பதை நாம் யாருமே நிர்ணயம் செய்ய முடியாது.
நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் தவறி விழுந்தால் கிடைக்கும் சிறு துரும்பையும் பற்றிக்கொண்டு கரை சேரவே பார்ப்பார்கள். அந்தத் துரும்பு அவர்களை காப்பாற்றுமா காப்பாற்றாதா என யோசனை எல்லாம் செய்துகொண்டிருக்க மாட்டார்கள். அதற்கான சூழலும், மனோநிலையும் அவர்களுக்கு இருக்காது. காரணம், உயிர் பயம் மட்டுமே அவர்களை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருக்கும்.
உங்கள் பிள்ளைகளும் அதுபோல்தான். அவர்கள் வாழ்க்கை எனும் சூழலில் தட்டுத்தடுமாறி வளர்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அழகான படகை வேண்டுமானால் பெற்றோர்கள் வடிவமைத்துக் கொடுத்து, துடுப்பாக அவர்கள் செயல்படலாம். ஆனால் அவர்கள் தாங்களே தங்களுக்கான பாதையில் செல்வதற்கு தூண்டுகோல் ஒன்று அவசியம். உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் தூண்டுகோல்தான் அவர்கள் பின்னாளில் அவர்கள் நிற்கப் போகும் உயரத்தை நிர்ணயிக்கும்.
படகை செலுத்த உதவுவது துடுப்பு. செல்லும் பாதையில் உற்சாகத் துள்ளளுடன் நடைபோட வைப்பது தூண்டுகோல். இதுதான் துடுப்புக்கும், தூண்டுகோலுக்குமான ஒரே வித்தியாசம்.
எனவே பலவீனத்தை உணர்த்தும் அதே நேரம் பலத்தையும் சரியான கோணத்தில் எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள் அல்லது மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பை சரியான கோணத்தில் எடுத்துச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
கவனம், உங்கள் பிள்ளைகளின் பலத்துக்கானப் பாராட்டுகள் தூண்டுகோலாக மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தலைகனம் உண்டாகாமல் கண்காணியுங்கள். அது வேறு மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அவர்களின் திறமையை அந்த ஒரு பெருமையிலேயே முடித்துக்கொண்டு அதை மட்டுமே காலத்துக்கும் பேசிப் பேசி பெருமை கொள்ளும் மனநிலையும் உண்டாகலாம்.
ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடக்கும் சிறுமியின் சாதுர்யத்துடன் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே தங்கள் பிள்ளைகளை வழிநடத்த முடியும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் விளைவுகள் மோசமாகலாம். கவனம்.
பெற்றோர்களே, துடுப்பாகவும் இருந்து வழிநடத்துங்கள், தூண்டுகோலாக இருந்து ஊக்கப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP