ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1008
அக்டோபர் 4, 2021 | திங்கள் | காலை: 6 மணி
சொல்வன திருந்தச் சொல்!
பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டியது நல்ல பண்புதான். ஆனால் நாம் சொல்ல வருவதை சரியாகச் சொல்லவில்லை என்றால் அது நமக்கே ஊறு விளைவிக்கும். பின்னர் சரி செய்வது மிகக் கடினம்.
சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணி ஆற்றும் ஒருவருக்கு தமிழில் இ-புத்தகம் தயார் செய்துகொண்டிருந்தோம். முழுமையாக வடிவமைத்து அவர் புரூஃப் பார்ப்பதற்காக அனுப்பி வைத்தோம். 300 பக்கம் உள்ள புத்தகத்தில் பத்து பன்னிரெண்டு பிழைகள். அதுவும் அவர் டைப் செய்து அனுப்பியபோது இருந்த பிழைகள்தான். அதை அவர் ஆங்கிலத்தில் எழுதி அவற்றை திருத்தங்கள் செய்ய வேண்டும் என சொல்லி பதில் அனுப்பினார்.
அதாவது இன்ன பக்க எண்ணில் இன்ன பிழை என்பதை தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பி இருந்தார். உதாரணம்: Page 10 l annam enbathil small n pooda veendum. அதாவது ‘10-வது பேஜில் அண்ணம் என்பதை அன்னம் என வரவேண்டும்’ என்பதைத்தான் அவர் தங்கலீஷில் டைப் செய்திருந்தார். இடை இடையே அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் முழுமையாகவும் டைப் செய்திருந்தார். உதாரணம்: In page 25, remove comma and put space in that space. ஆங்கில எழுத்து நடையும் சரியாக இல்லை.
முழுக்க முழுக்க தமிழில் டைப் செய்யப்பட்டிருந்த புத்தகத்தில் பிழை பார்த்து சரி செய்யும்போது அதை இப்படி தங்கலீஷில் பாதி, இங்கலீஷில் மீதி என டைப் செய்தால் படித்துப் புரிந்துகொள்வதற்கே கடினமாக இருந்ததால் அவருடைய ஆங்கிலத்தை குறை சொல்ல வேண்டாம் என நினைத்து நாசூக்காக ‘நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்திருப்பது புரியவில்லை. எனவே முழுமையான தமிழில் டைப் செய்து அனுப்புங்கள்’ என பதில் அனுப்பினோம்.
அதற்கு அவர் என்ன பதில் கொடுத்திருந்தார் தெரியுமா?
‘மேடம் நீங்கள் எவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படித்தவர். பல பல்கலைக்கழகங்களில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் எல்லாம் பாடத்திட்டமாக உள்ளன. ஆனால் நான் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தை புரியவில்லை என்கிறீர்களே? ஆச்சர்யமாக இருக்கிறது’ என தமிழில் டைப் செய்து இமெயில் அனுப்பினார்.
நான் ஒரு நிமிடம் ஆடிப் போனேன். எதிர்பார்க்காத கோணத்தில் ஒரு இமெயில். என்ன ஒரு தன்னம்பிக்கை? தன் ஆங்கில மொழி நடையின் மீது அவருக்கிருந்த அதீத நம்பிக்கையை நினைத்து நினைத்து வியந்தேன்.
அவருடைய மொழி நடையை குறை சொல்ல வேண்டாம் என நினைத்து மறைமுகமாக நாம் வார்த்தைகளைப் பாந்தமாகக் கோர்த்து தகவல் கொடுத்தால், அவர் அதையே நமக்கு எதிரான ஆயுதமாக்கினால் பொறுத்திருக்க முடியாதல்லவா?
பதில் இமெயில் தயார் செய்தேன்.
‘சார், நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் கடிதத்தில் ஏராளமான எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள். நடுநடுவே தங்கலீஷில் வேறு டைப் செய்துள்ளீர்கள். படித்து புரிந்துகொள்வதற்கு கடினமாக உள்ளது. எனவே தமிழில் கடிதம் எழுதுங்கள். அப்போதுதான் உங்கள் தமிழ் புத்தகத்தில் உள்ள பிழைகளை சரியாக சரி செய்ய முடியும். இல்லை என்றால் மேலும் மேலும் தவறுகள் வந்துகொண்டே இருக்கும்…’ என அவருடைய ஆங்கில எழுத்து நடையில் உள்ள சிரமங்களை நேரடியாக எழுதி இமெயில் செய்தேன்.
நிச்சயம் இந்த இமெயில் அவரை புண்படுத்தத்தான் செய்யும். ஆனால் வேறு வழியில்லை.
இப்படித்தான் நாம் சொல்வதை திருந்தச் சொல்லவில்லை என்றால் தவறுகளையும், இயலாமைகளையும், குற்றங்களையும், குறைகளையும் நம் மீது சுமத்திவிட்டு கடந்து சென்றுகொண்டே இருப்பார்கள்.
பல நேரங்களில் இப்படி முகத்தில் அறைந்தாற்போல் சொல்லத்தான் வேண்டியுள்ளது.
‘செய்வன திருந்தச் செய்’ என்கிறது ஆத்திசூடி. ஆனால் செய்வதை மட்டும் அல்லாமல் ‘சொல்வன திருந்தச் சொல்’ என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP