ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1026
அக்டோபர் 22, 2021 | வெள்ளி | காலை: 6 மணி
வீட்டு சமையல் ருசிப்பது ஏன்?
ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இயங்கி உடல் சோர்வை விரட்டும்.
நம் வீட்டில் அப்பாவோ அல்லது அம்மாவோ சமைக்கும்போது இந்த நுணுக்கத்தை அவர்களை அறியாமலேயே கடைபிடிப்பதால்தான் அவர்கள் சமையலின் ருசி காலத்துக்கும் நம் மனதுக்குள் நிற்கிறது.
மிளகு ரசம் செய்யும்போது தன் மகளுக்கு அது பிடிக்கும் என நினைத்துக்கொண்டும், வெண்டைக்காய் பொறியல் செய்யும்போது அது மகனுக்குப் பிடிக்கும் என்றும் மனதுக்குள் இருக்கும் பாசத்தையும் சமைக்கின்ற பொருட்களுடன் இழைத்து சமைப்பதால்தான் நம் அப்பா அம்மாக்கள் சமைப்பவை நமக்கு ஸ்பெஷலாகின்றன. வீட்டு சமையலுக்கு அத்தனை ருசி.
தினமும் ஓயாமல் ‘ரொட்டீனாக’ அதே சமையல். ஆனாலும் அவர்கள் சோர்வில்லாமல் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் செய்கின்ற வேலையை மனதாலும் ரசித்து செய்வதுதான்.
சமையல் என்றல்ல, எந்த வேலையானாலும் மனதாலும் ரசித்து செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP