ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1027: குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1027
அக்டோபர் 23, 2021 | சனி | காலை: 6 மணி

குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!

என்னது, தவறு செய்ய அனுமதிப்பதா? என கொதிக்க வேண்டாம்.

விஷயம் இதுதான்.

மிகவும் பர்ஃபக்‌ஷனிஸ்டாக வளர்க்கப்படும் குழந்தைகளின் பிரச்சனை என்ன தெரியுமா? வளர வளர அடுத்தவர்கள் சிறு தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் போவார்கள். எல்லோரிடமும் ஏதேனும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

‘என் மகன் ரொம்ப சமர்த்து… பேசுவது கூட காதில் விழாத அளவுக்கு மென்மையாகப் பேசுவான்… ரொம்ப அமைதி… தப்பே பண்ண மாட்டான்…’ அப்படி இப்படி என பெற்றோர்களால் புகழப்படும் குழந்தைகளுக்குள் ஒரு பதட்டம் ஒட்டிக்கொள்ளும். தன் அப்பா அம்மா இந்த அளவுக்கு நம் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்களே, நாம் அதிர்ந்து பேசினால் நாம் நல்லவன் இல்லை என்றாகிவிடுமோ, சமர்த்துப் பிள்ளை இல்லை என்று முத்திரைக் குத்தி விடுவார்களோ என தங்களுக்குள் ஏதேதோ கற்பனை செய்துகொண்டு தவிப்பார்கள். தன் வயதை ஒத்த நண்பர்களுடன் பழகவே மாட்டார்கள் அல்லது தவிர்ப்பார்கள்.

ஒரு கட்டத்தில் வெளியில் நல்லவன் வேடம் போட ஆரம்பித்து மறைமுகமாக அவர்கள் வயதுக்கு ஏற்ற விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவார்கள். மறைமுக நண்பர்களை வைத்துக்கொள்வார்கள். வீட்டில் அறிமுகப்படுத்த அஞ்சுவார்கள்.

சரி எப்படித்தான் குழந்தைகளை வளர்ப்பது?

ரொம்ப சுலபம். பிள்ளைகளை சின்ன சின்னதாக தவறுகள் செய்ய அனுமதியுங்கள்.

‘தவறு செய்’ அல்லது ‘தவறாக செய்’ என நாமாகச் சொல்ல வேண்டாம். ஆனால் அவர்கள் செய்கின்ற வேலைகளில் ஏதேனும் குறையோ குற்றமோ இருந்தாலோ அல்லது தவறாகவே ஒரு வேலையை செய்தாலோ அல்லது தப்பான நோக்கத்துடன் ஒரு வேலையை செய்தாலோ அதை சுட்டிக் காட்டி அது தவறு, அதில் பிழை உள்ளது, அப்படி செய்வது தவறு, அது தப்பான எண்ணம் / செயல் என எடுத்துச் சொல்ல மறக்காதீர்கள்.

அப்படிச் செய்யாமல் ‘சரிடா கண்ணா, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… தவறே இல்லை… பார்த்துக்கலாம் விடு’ என்ற கோணத்தில் உங்கள் பிள்ளைகளின் சிறு சிறு தவறுகளை உங்கள் பெரிய மனது செல்லக் கொஞ்சல்களினால் பூசி மொழுகினால் பிற்காலத்தில் அவர்கள் செய்கின்ற பெரிய பெரிய தவறுகளைக் கூட அவர்களால் உணரவே முடியாத அளவுக்கு அவர்கள் மூளை மழுங்கிவிடும். நம் பெற்றோர் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். நம்மை அந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்ற மாயவலைக்குள் சிக்கி அதிதீவிர தவறுகளை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

குழந்தைகளின் அரிய செயல்களைப் பாராட்டுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் தவறுகளை எடுத்துச் சொல்வதும் பெற்றோரின் கடமை. உங்கள் கடமையைத் தட்டிக் கழிக்காதீர்கள். தற்காலிகமாக உங்கள் பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்ள முயற்சித்தால், பின்னாளில் நிரந்தரமாக உங்கள் மனம் கோணும்படி அவர்கள் நடந்துகொள்ளும் சூழல்கள் அமைவதை நீங்களே நினைத்தாலும் தவிர்க்க முடியாது.

ஆம். சின்ன சின்ன தவறுகள்கூட குழந்தைகளைப் பண்படுத்தும். தவறுதல் மனித இயல்பு என்ற பக்குவத்தை உண்டாக்கும். பிறருடன் அனுசரணையாகப் பழகும் பாங்கை அவர்களுக்குள் விதைக்கும்.

அதனால்தான் சொல்கிறேன், குழந்தைகளின் சிறு தவறுகளை அனுமதியுங்கள். அதற்காக அதை ஊக்கப்படுத்தி ஆதரவாக பேச சொல்லவில்லை. அவர்களின் தவறுகளை அவர்களிடம் தவறு என எடுத்துச் சொல்லி புரிய வைக்கச் சொல்கிறேன். தவறுதல் மனித இயல்பு என்ற புரிதலை உண்டாக்குங்கள். தவறே செய்யாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அதை உணராமல் மேலும் மேலும் அதையே செய்துகொண்டிருப்பதுதான் மாபெரும் தவறு என்ற உண்மையை உணர்த்துங்கள்.

உதாரணத்துக்கு, குழந்தைகள் கீழே விழுந்து அழுதால்  ‘இந்தத் தரைதானே உன்னை காயப்படுத்தியது’ என செல்லமாய் தரையை அடித்து அவர்களை சமாதானப்படுத்தாமல் ‘நீதானே தெரியாமல் கீழே விழுந்தாய், இனி பார்த்து நடந்தால் எல்லாம் சரியாயிடும்’ என்றோ ‘நடக்கும்போது கீழே பார்த்து நடக்க வேண்டும்’ என்ற கோணத்திலோ ‘தரையைப் பார்த்து நடடா கண்ணா’ என்றோ அவரவர் வயதுக்கு ஏற்ப மென்மையாக அவர்களின் தவறை எடுத்துச் சொல்லச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

அப்படிச் செய்தால், உங்கள் பிள்ளைகள் மேதைகளாகாவிட்டாலும் மனிதாபிமானம் உள்ள மனிதர்களாக உருவாவார்கள். அது நிச்சயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 101 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon