ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1022
அக்டோபர் 18, 2021 | திங்கள் | காலை: 6 மணி
இசைக்கும் ஓவியங்கள்!
கதைக்கு ஓவியம் வரையலாம் என்று தெரியும். இசைக்கு ஓவியம் வரைய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஓவியர் ‘ஸுபா’ (என். சுப்ரமணியன்) எழுதிய ‘இந்திய ஓவியங்கள்’ என்ற நூல் இந்தியாவின் ஓவியக்கலைப் பாரம்பரியங்களை மிக விரிவாகவும் எளிமையாகவும் எடுத்துச் சொல்கிறது. ஓவியங்கள் குறித்து இத்தனை விரிவான நூலை இதுவரை நான் படித்ததே இல்லை.
கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த நூலில் இசைக்கான ஓவியங்கள் குறித்து எழுதியுள்ளதை பகிர்கிறேன்.
கலையை ரசிக்க அந்தக் கலைகள் குறித்த நுணுக்கங்களும் ஆழ்ந்த புலமையும் தெரிய வேண்டும் என்பதில்லை. ரசிக்கத் தெரிய வேண்டும். ரசிக்கக் கற்றுக்கொள்வதற்கு என பிரத்யேகமான படிப்பெல்லாம் கிடையாது. மனம் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தால் போதும், அதுதான் ரசிப்புத்தன்மை.
ஆனால் கலையை படைப்பவர்களுக்கு அந்தக் கலையில் ஆழ்ந்த அறிவு தேவை. அந்தக் கலை குறித்த இலக்கண இலக்கியங்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோராலும் விரும்பப்படும் கலையை படைக்க முடியும் என்று எளிமையாகச் சொல்லி குழந்தையை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாங்கில் தொடங்கியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.
இசைக்கு ஓவியம் வரைய முடியும் என்பதற்கு ‘ராகமாலா’ ஓவியங்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இதற்கு ‘ரங்கமாலா’ என்ற பெயரும் உண்டு.
பாரதத்தில் ராகமாலா ஓவியங்கள் உலகுக்கே ஒரு புதுமையான படைப்புகளாகும்.
ஒரு தேசத்தின் உயர்வைக் காட்டுவது, அதன் மக்களின் தரத்தைக் காட்டுவது, ஆன்மிகத்தை தெரிவிப்பது நாட்டின் கலைகளே ஆகும். தவிர இலக்கியங்களும் தத்துவங்களும் ஒரு நாட்டை அறிய உதவுகின்றன.
பாரதக் கலைகள் பற்றி ரோமேன் ரோலண்ட் கூறுகிறார். ஒரு நாட்டின் கலைகள் அங்கு மட்டுமில்லாமல் சுற்றியுள்ள நாடுகளுக்கும் பரவும். இந்தக் கலை பரிமாற்றம் பல புதிய பாணிகளைத் தோற்றுவிக்கின்றது. இப்போது சங்கீதம் மூலம் ஓவியம் வளர்கிறது. ஓவியம் மூலம் சங்கீதம் வளர்கிறது. கலைகளின் கதவுகள் இறுக மூடிக்கொள்வதில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகவே இருக்கிறது.
மூன்று கலைகளின் சங்கமம்தான் ராகமாலிகா ஓவியங்கள். ஒன்று கவிதை, இரண்டாவது சங்கீதம். மூன்றாவது ஓவியம். 17-ம் நூற்றாண்டில் ராகமாலிகா ஓவியங்கள் பிரசித்திப் பெற்றன. இதுபோன்ற மூன்று கலைகளின் சங்கமத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது.
இந்த ஓவியங்கள் மரபு ஓவியங்களைவிட புதுமையாக இசையை ஓவியக் கலையுடன் கலந்து மனதைக் கவருகின்றன. கவிதையின் கருத்து ராகத்துடன் கலந்து ஓவிய வடிவில் உருவாகிறது. படத்துக்குக் கருத்து கவிதை – கவிதை ஒரு ராகத்தில் பாடப்படுகின்றது. அதனால் ராகமாலிகா ஓவியத்தைப் பார்த்தவுடன் இன்ன ராகத்தில் எழுதப்பட்ட பாடலுக்கான ஓவியம் என்று சொல்லிவிடலாம்.
இந்த நூலை படித்து முடிக்கும்போது ஒவ்வொரு கலையும் அந்தந்த நாட்டின் உயர்வை உலகுக்குக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் அதிசயத்தை உணர்ந்தேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP