ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்

2018  வருட பொங்கல் திருநாளை
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள
குழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர்,
‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா?’ என்று  கேட்டார்கள்.

நான் சொன்னேன்…

‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை…
ஆஸ்ரமத்தில் உள்ள  குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்…
அம்பாக்கள் பாரம்பர்ய முறையில் பொங்கலைக் கொண்டாடி எங்களுக்கு ஆசி வழங்கினார்கள்…
குறிப்பாக வாழை இலையில் அனைவருக்கும் விருந்தளித்து சிறப்பித்தார்கள்…
இந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலாத ஒன்று…’

காலை 9 மணி அளவில் ஆஸ்ரமம் வந்தடைந்தோம். ஏற்கெனவே எனக்கு அறிமுகமான ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா அவர்களின் ஆத்மார்த்தமான வரவேற்புடன்  காலை உணவை  முடித்தோம். அன்பின் கலப்பினால் உணவு கூடுதல் சுவை .

அடுத்து ஸ்ரீசாராதா ஆஸ்ரம கல்லூரி செகரட்டரி ஸ்ரீஅனந்தபிரேமப்ரியா அம்பா, ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா  மற்றும் சில சுவாமினிகளுடன் கலந்துரையாடல்.

10 மணி அளவில் மேள தாளத்துடன் பொங்கல் திருவிழா ஆரம்பமானது. 

ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களுக்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து பொங்கல் திருவிழாவை ஸ்ரீஅனந்த பிரேமப்ரியா அம்பா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.அமைதியான மைதானத்தில் குழந்தைகள் குவிந்தனர். பாட்டிகள் அவர்களுக்கு அரண்போல பின்னால் வரிசையாக அமர்ந்தார்கள்.

அடுத்து செங்கல் வைத்து அடுக்கி, விறகு வைத்து அடுப்பைப் பற்ற வைத்து ஒரு அடுப்பில் வெண் பொங்கலுக்கும், மற்றொன்றில் சக்கரை பொங்கலுக்கும், திருநீரால் பட்டைப் போட்டு மஞ்சள் சுற்றி சந்தன குங்குமமிட்ட பானைகளை ஏற்றி தண்ணீர் விட்டு அரிசியை போட்டு பொங்கல் பொங்கும் வரை குழந்தைகளுடன் பாட்டிகளும் பஜன் பாடியபடி இருந்தனர்.

 

பொங்கல் பொங்கியதும் குழந்தைகள், பாட்டிகளுடன் சேர்ந்து அம்பாக்களும் கரகோஷமிட்டு சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்.

அடுத்து குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

பாட்டிகள் மட்டும் என்ன சும்மா உட்கார்ந்திருந்தினரா? அவர்களும் மன மகிழ்ச்சியோடு ஆட்டம் பாட்டம் என சொல்லனா மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தனர்.

 

குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரியப்பட, பாட்டிகளும் உற்சாகமாகி சிரித்தபடி ‘போஸ்’ கொடுக்க கொண்டாட்ட மனோபாவம் தொற்றிக்கொள்ள அம்பாக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

அனைவருக்கும் இனிப்பும் காரமும் வழங்கி மகிழ்ந்தோம்.

மதியம் வாழை இலையில் விருந்து.  அதை முடித்து அம்பாக்களுடன் உரையாடல் என நேரம் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள்  மாட்டுப் பொங்கல் மிக சிறப்பாக இருக்கும்  எனச் சொல்லி  தங்கிச் செல்ல வற்புறுத்தினார்கள்.  அவர்கள் அன்பில் நனைந்து பிரியா விடைபெற்று ஒரு வருடத்துக்கான சந்தோஷ நினைவுகளைச் சுமந்து சென்னையை நோக்கிப் பயணமானோம்.

இந்த ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் இந்த குழந்தைகள் பெரும்பாலும் அப்பா அம்மா இருவரையும் இழந்தவர்கள். ஒருசிலருக்கு   ‘சிங்கில் பேரண்ட்’. இருப்பினும் அவர்களுக்குள் எவ்வளவு ஆனந்தம். ஆரவாரம். மகிழ்ச்சி…

காரணம்.  ஸ்ரீசாரதா ஆஸ்ரம அம்பாக்களின் அன்பும், அரவணைப்புமே!

(Visited 231 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon