கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (2013)

ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சென்னை ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செப்டம்பர் 28, 2013 நடைபெற்றது. அதில் விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்…

ஒரு ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை/தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.

‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் கொண்டு இருப்பாள்; அதே சமயம் எப்போதும் அன்பை பொழிந்து கொண்டே இருப்பாள்.’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த வரிகளை எவ்வளவு முறை படித்தாலும், படிக்கின்ற ஒவ்வொரு முறையும் மனதில் நெகிழ்ச்சி உண்டாவதை தவிர்க்க இயலவில்லை. அற்புதமான உணர்வுப் பூர்வமான கருத்தை இதை விட அழகாய் வேறு யாரால் சொல்லிவிட முடியும் சுவாமிஜியைத் தவிர.

இரவு, பகல் என்ற கணக்கில்லாமல் 24 மணிநேர வேலை; அம்மா, மனைவி, சகோதரி, மகள், மருமகள் பலதரப்பட்ட ரோல்கள்; சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட  வேலை, நர்ஸ், டீச்சர் இப்படி சகலகலாவாணி போல எல்லா வேலைகளையும் செய்யும் திறமை கொண்டவள்; வார விடுமுறை, மாத விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று ஒருநாள் கூட ஓய்வே இல்லாத வேலை; இது தான் நம் இந்திய பெண்களின் நிலை. இன்றைய நவீன பெண்களுக்கு இன்னும் கூடுதல் சலுகையாக இரட்டிப்பு பணிச்சுமை; ஆம். அலுவலகம் வீடு என இரண்டையும்  நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்ற நிலை போய், அச்சுதந்திரமே இரட்டிப்பு சுமையை பெண்களின் தலையில் சுமக்கச் செய்கின்ற சூழல் இன்றைக்கு.

பெண்களின் பலமும், பலவீனமும்

அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்த பேருண்மை அவளுக்கு தெரிகிறதா என்று யோசித்துக்  கொண்டிருந்த போது என் கண்களில் ஒரு கதை தென்பட்டது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு மாதபத்திரிகை ஒன்றில் வெளிவந்த ஒரு கதை.

கடவுள் பெண்ணைப் படைத்துக் கொண்டிருந்தார். ஒரு வார காலம் ஆகியும் படைத்து முடிக்கவில்லை. வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை கடவுளிடம் கேட்டது. ‘ஒரு பெண்ணைப் படைக்க நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?’. அதற்கு கடவுள்  பதில் சொன்னார்:

‘நீ என்ன இவளை சாமான்யப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் முன்னூருக்கும் மாறுபட்ட பாகங்களைப் பொருத்த வேண்டும்…

வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் மிச்சம் மீதியை சாப்பிட்டுக் கொண்டும் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்…

ஒரே சமயத்தில் மூன்று நான்கு குழந்தைகளை மடியில் தவழ விட்டுக் கொள்பவளாக இருக்க வேண்டும்…

அவளின் ஒரே ஒரு பாச முத்தத்தினால் குழந்தைகளின் அழுகை, ஆத்திரம், ஆங்காரம், கோபம், பிடிவாதம் போன்று எல்லா விதமான உணர்வுகளுக்கும் வடிகாலாக இருக்க வேண்டும்…

ஆனால் இதை அத்தனையையும் செய்வதற்கு அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்….

கடவுள் சொல்லிக் கொண்டே போக தேவதை ஆச்சர்யத்தினால் விழியை விரித்துப் பார்த்தது. உடனே கடவுள் சொன்னார், ‘என்ன இதற்கே மலைத்து விட்டாயா…இன்னும் கேள் இவளைப் பற்றி…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

‘அவள் தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்…’

‘ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து உழைப்பாள்…’

‘இவள் பார்வைக்கு மிருதுவானவள்…ஆனால் மனதளவில் வலிமையானவள்…இவளது எதையும் தாங்கும் சக்தியை உன்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது…’

‘சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்…’

இதற்குள் தேவதை கடவுள் படைத்துக் கொண்டிருந்த பெண் உருவத்தின் கன்னத்தில் வழிந்த ஈரத்தை கவனித்தது. தொட்டுப் பார்த்து விட்டு பதறியது. ‘கடவுளே…இங்கு பாருங்கள் ஈரக் கசிவு… மெதுவாக படையுங்கள்…’.  கடவுள் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.

‘அது ஈரக் கசிவு இல்லை தேவதையே…அது தான் பெண்ணின் கண்ணீர் துளி…அந்தக் கண்ணீர் துளி தான் அவளது ஒட்டு மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு…அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த் துளிதான் வெளிப்படுத்துகிறது…’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதைக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம். கடவுள் மேலும் தொடர்ந்தார்.

‘பெண்ணால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில் கூட அழகாய் சிரிக்கவும், பாடவும் முடியும்.’

‘அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான சூழ்நிலையிலும் சிரிக்க முடியும்.’

‘அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும்.’

‘அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக தான் பட்டினி கிடக்க முடியும்.’

‘அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும்.’

‘அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களை பாதியாக்க முடியும்.’

‘தன் குழந்தைகளின் சாதனைக்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும்.’

‘ஐயோ…என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை எதிர் நோக்க முடியும்.’

கடவுள் பெண்ணின் பெருமையை இப்படி அடுக்கிக் கொண்டே போக, தேவதை கேட்டது.  ‘அப்படியானால் நீங்கள் படைக்கின்ற பெண்ணிடம் குறை ஏதும் இல்லையா?’. இதற்கு கடவுள் சொன்னார்.

‘இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்…தன்னிடம் இருக்கின்ற அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்…’

தேவதைக்கு புல்லரித்தது. ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்றது. தேவதைக்கு மட்டுமல்ல படித்துக் கொண்டிருக்கும் நமக்கும் புல்லரிக்கிறது தானே. இக்கதையில் சொல்லியிருக்கின்றபடி, பெண்ணைப் பற்றிய உண்மையை நம்மில் யாராலாவது மறுக்க முடியுமா? முடியாதல்லவா?

சுவாமி விவேகானந்தரும் இதைத் தானே ‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள்’ என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

பெண்களின் பலத்தின் மீதும், ஆற்றலின் மீதும் சுவாமிஜி கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை விளக்குவதற்கு ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இந்துமதப் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலகட்டம். எந்நேரமும் அவரைச் சுற்றி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆண்,  பெண் இளைஞர் கூட்டம் கூடியிருக்கும்.

அவர்களுடைய ஆன்மீக ஆற்றலை உணர்த்தவே சமயத்தில் சுவாமிஜி அவர்களுடன் ஒரு தாயின் அன்போடும் இருப்பார்.சமயத்தில் தந்தையின் கண்டிப்போடும், சில நேரங்களில் நண்பனின் குதூகலத்தோடும் அந்த வெளிநாட்டுச் சீடர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார்.

சுவாமிஜி சில நேரங்களில் தம் சீடர்களுடன் சேர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நாடிச் செல்லத் தொடங்குவார்.

அன்றும் அதேபோல சுவாமிஜி தனது சிஷ்யைகளான சகோதரி கிறிஸ்டைன் மற்றும் வேறு சிலருடன் ஒரு மலை மீது ஏறிக்கொண்டிருந்தார்.

சுற்றிலும் லேசாக பனி படர்ந்திருந்தது. சுவாமிஜி செங்குத்தான பாறைகளைத் தாண்டி மின்னல் வேகத்தில் மலையுச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய சிஷ்யைகளுக்கு மலையேறுவது அவ்வளவு எளிதாக இல்லை.     மலையின் ஈரத்தில் அவர்களின் பாதங்கள் வழுக்கின. அங்கிருந்து விழுந்தால் அதோகதி தான். ஆதலால் அவர்கள் தைரியமில்லாமல், மிகவும் சிரமப்பட்டு மலையேறினார்கள்.

சுவாமிஜி இவற்றையெல்லாம் பார்த்தாலும் அந்தப் பெண்களுக்கு அவர் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அது அந்த பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. சுவாமிஜி என்ன ஈவிரக்கம் அற்றவரா?

மலையுச்சியை அடைந்தவுடன் அந்த சிஷ்யைகள் தங்கள் மனத்தாங்கலை குருவிடம் வெளியிட்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் பெண்களின் பலத்தையும், அதனால் அவர்கள் அடையும் சுதந்திரம் பற்றியும் கூறத் தொடங்கினார்.

‘நீங்கள் வயதானவர்களாகவோ, பலவீனர்களாகவோ, ஆதரவற்றவர்களாகவோ இருந்தால் நான் உங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும். ஆனால், யாருடைய உதவியும் இல்லாமலேயே உங்களால் இந்தக் கடினமான பாதையில் தாண்டிக் குதித்து ஏற முடியும். அதற்கான வல்லமை உங்களிடம் உள்ளது.

என்னைப் போன்றே நீங்களும் பலமுள்ளவர்கள். பின் எதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டும்? நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?

ஆண்கள், பெண்களுக்கு உதவ முற்படுவதெல்லாம், ஆசைகளை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் பெண்களிடம் காட்டும் வெற்று வீரம் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் வித்தியாசமான இந்த உபதேசத்தைக் கேட்ட அந்தப் பெண்களுக்கு சில உண்மைகள் தெளிவாயின.

பொதுவாக, பெண்களுக்குப் பரிந்து பேசுபவர்கள், பெண்களை பலவீனர்கள் என்றே சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பெண்களின் உடலையோ மனதையோ மட்டும் தான் காண்கிறார்கள்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் பெண்களிடம் மட்டுமல்ல, அனைத்து மக்களிடமும் உடல்,  உள்ளம் பலங்களோடு ஆன்ம பலத்தையும் கண்டவர். அவர் அன்று அந்தப் பெண்களுக்கு ஆன்ம ஆற்றலை உணர்த்தவே, மலையில் உதவவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சி அது.  ஹெல்மெட் அவசியமா? இல்லையா? என்பது தான் டாப்பிக். பைக் ஓட்டிச் செல்லும் போது ஹெல்மெட் போடாமல் செல்ல நேரிட்டு போலீஸில் மாட்டினால் எப்படி ஃபைன் கட்டாமல் தப்பிப்பீர்கள் என்று இளம் பெண்களிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு 18, 19 வயதுமிக்க ஒரு பெண் எழுந்து நின்று ஆக்‌ஷனுடன் சொல்லிக் காண்பித்தாள். நீங்களே ஆக்‌ஷனை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

‘ஸார்…தலைமுடி கொட்டுது ஸார்…தலை முழுக்க வேர்வையாகுது…தலைவலி வேறு வருது…தலை வழுக்கையாகுது ஸார்…’ என்று சொல்வேன். ‘அப்புறம் என்ன ஸார்…போலீஸ் ஆஃப் ஆகி விடுவார்…போம்மா போ..போ..’ என்று என்னை சந்தோஷமா வழி அனுப்பி வைப்பார் என்று அப்பெண் தலையை சொரிந்து கொண்டே ஆக்ஷனுடன் சொல்லிக் காண்பிக்க அவையே கரகோஷத்தில் மிதந்தது. அப்பெண் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. ஆனால் எனக்கு நாராசமாக இருந்தது. என்னைப் போல எத்தனை பேருக்கு அப்பெண்ணின் எண்ணம் நாராசத்தைக் கொடுத்திருக்கும் என்று தெரியவில்லை.

ஒரு பெண் ‘தான் பெண்’ என்பதையே ஆயுதமாக்கி தண்டனையில் இருந்து தப்பிப்பது எத்தனை பெரிய அசிங்கம். எனக்கு அந்த எண்ணமே அருவருப்பாக இருந்தது.

சுமார் 15 வருடங்களுக்கு முன், ஒரு சமயம் ஏதோ ஒரு அலுவலக டென்ஷனில் சென்னை மவுண்ட் ரோடில், சிவப்பு சிக்னல் விழுந்ததை கவனிக்காமல் பைக்கில் ரோடை கடந்து விட்டேன். நான் பைக்கை ஓரம் கட்டுவதற்குள் பைக்குகள் போராளிகள் போல என்னை நெருங்கி விட தவறை உணர்ந்தேன். இதற்குள் டிராஃபிக் போலீஸூம் என்னை கவனித்து விட்டு வந்தார். வண்டியை ஓரம் கட்ட உதவி செய்து டிராஃபிக்கை ஒழுங்குபடுத்தி விட்டு என்னிடம் பேச வந்தார்.

‘என்னம்மா…ஒழுங்கா கைகால் இருக்கிறது புடிக்கலையா…கைகால் ஒழுங்கா இருந்தாலே கல்யாணம் நடக்கிறது கஷ்டம்…’ என்று பேச ஆரம்பித்தார். அந்த காலகட்டம், வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரம். அதனால் தான் அந்த அட்வைஸ் எனக்கு.

நான் தெரியாமல் செய்திருந்தாலும், சிவப்பு சிக்னல் விழுந்த பிறகு ரோடை க்ராஸ் செய்தது தவறு என்பதால் ஃபைன் கட்டி விட பரபரத்தேன். நான் பெண் என்பதால் அவர் எனக்கு சலுகைக் காட்டிவிடக் கூடாது என்பதில் என் கவனம் சென்றது தான் என் பரபரப்பிற்குக் காரணம். ‘எவ்வளவு சார் ஃபைன்’ என்று கேட்டு ஃபைன் கட்டி விட்டு நகர்ந்தேன். இதில் எள்ளளவும் மிகைப்படுத்தல் இல்லை. உண்மை நிகழ்வு.

எந்த சூழலிலும் பெண், பலவீனமானவள், பாவம், பரிதாபம், தவறே செய்தாலும் பெண் என்பதால் விட்டு விடலாம் என்றெல்லாம் சலுகைகள் கிடைப்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது.

அப்படிப்பட்ட சலுகைகளும், பரிதாபங்களும் பெண்களின் பலத்தை பலவீனமாக்கும் என்ற சுவாமிஜியின் கருத்து சிறுவயதிலேயே என் மனதில் வேரூன்றிப் போனதால், அந்தக் கருத்தில் இன்றளவும் நான் உறுதியாக இருக்கிறேன்.

பால் வேற்றுமை பாராட்டுவது சரியல்ல

எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மா தான் உள்ளது என்று வேதாந்தம் கூறுகிறது. எனினும் இந்த நாட்டில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையில் இவ்வளவு அதிகமான வேறுபாடுகள் ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த ஆண், பெண் வேறுபாட்டு உணர்ச்சியை தூர எறியுங்கள். எல்லாமே ஆன்மா தான், பால் வேற்றுமை பாராட்டுவது சரியல்ல என்று அறிவுறுத்தி சொல்லி இருக்கிறார் சுவாமிஜி.

எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி, சமூக அந்தஸ்து போன்றவற்றால் இணையாக நடத்தப்படுகிறார்களோ அந்த நாடு பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கும் என்பதை மேலைநாடுகள் பல நிரூபணம் செய்கின்றன.

இன்றைய சூழலில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு அவ்வளவாக காட்டப்படுவதில்லை. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் நம் சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை கொண்டாடிய அளவுக்கு பெண் குழந்தைகளை கொண்டாடியதில்லை. சாதாரண வீடுகளில் பெற்றொர்களே தங்கள் குழந்தைகள் மீது பாகுபாடு காட்டினார்கள். சாப்பாடு விஷயத்தில்; உடை விஷயத்தில்; தின்பண்டங்கள் வழங்கும் விஷயத்தில்; விளையாட அனுமதிக்கும் விஷயத்தில்; இப்படி அன்றாடம் விழித்து எழுந்து இரவு படுக்கும் வரையிலான சின்ன சின்ன விஷயங்களில் இருந்து படிப்பு, வேலை, திருமணம் போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பெரிய விஷயங்கள் வரை  ஆண், பெண் பாகுபாடு காட்டப்பட்டு வந்தன.

ஆனால், அந்த காலகட்டத்தில் கூட எங்கள் பெற்றோர் என்னையும், என் தம்பி, தங்கையையும் ஒரே மாதிரியே வளர்த்தார்கள். மூவருக்கும்  ஆண், பெண் பாகுபாடின்றி அவரவர்களுக்கு உரிய சுதந்திரத்தைக் கொடுத்தார்கள். அறிவுரைகளைக் கூட அன்பாக நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டி கதைபோல சொல்லி எங்களையே உணர வைத்தார்கள். இதன் காரணமாய் நம்பிக்கை என்கின்ற கயிற்றால் எங்களை கட்டி அதன் ஒரு நுனியை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, எங்களை சுதந்திரமாய் இவ்வுலகில் பழக அனுமதித்தார்கள். ஏதேனும் ஆபத்து என்றால், எங்களைக் காப்பாற்ற, கயிறு அவர்கள் கையில் தானே உள்ளது. அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே நாங்கள் அவர்களிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வழிவகுத்தது என்று சொல்லலாம்.

சுவாமி விவேகானந்தர், பெண்களை கல்வி கற்க அனுமதிப்பதோடு நின்று கொள்ள வேண்டும். அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தலையிடும் உரிமை யாருக்குமே இல்லை. கல்வி கற்ற பெண்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் சக்தியைப் பெற்று விடுவார்கள் என்றார்.

சுவாமிஜி சொன்னதைப் போல எங்கள் பெற்றோர் எங்கள் மூவருக்கும் நல்ல கல்வியைக் கொடுத்தனர். அவரவர்களுக்கான திறமையை கண்டறிந்து வளரச் செய்தார்கள். இந்த வேலைக்குத் தான் செல்ல வேண்டும், இப்படித் தான் வாழ வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தியதே இல்லை.

ஆனால் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதற்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதுபோல செய்கின்ற வேலையை நேசிக்கவும், சுவாசிக்கவும் தாங்களே முன்மாதியாக இருந்தார்கள். தான் வாழ பிறரை அழிக்காத மேன்மையான குணத்தை எங்களுக்குள் விதைத்தார்கள். நம்மை நல்ல முறையில் வெளிப்படுத்த திறமை என்ற அணிகலன் போதும்; திறமை இல்லாதவர்கள் தான் பிறரை ஈர்க்க ஆடை, அலங்காரம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்பதையும் புரிய வைத்தார்கள். அதே சமயம் நமக்கு தன்னம்பிக்கைக் கொடுக்கும் வகையிலும், பிறர் கண்களுக்கு உறுத்தாமலும்  கம்பீரமாக உடை அணிந்து கொள்ளும் நாகரிகத்தை எங்களுக்குள் செலுத்தினார்கள். இந்த குணங்கள் போதாதா நிம்மதியான வாழ்க்கை வாழுவதற்கு?

நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உள்ள என் அம்மா சேகரித்து வைத்திருக்கும் பத்திரிகை தகவல்களை புத்தகமாக்குவது தான் அந்த நாட்களில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’. எங்கள் கைகளால் நாங்களே தைத்த புத்தகங்களை பார்க்கின்ற போது எங்களுக்குள் புதைந்து கிடந்த திறமைகள் வெளிவர ஆரம்பித்தன. எனக்குள் இருந்த எழுத்தாளரும், என் தங்கைக்குள் இருந்த ஓவியரும், என் தம்பிக்குள் இருந்த கார்ட்டூனிஸ்ட்டும் தானாகவே எந்த ஒரு பெரிய முயற்சியும் இன்றி வெளிவந்தனர். காரணம் எங்கள் பெற்றோர் எங்கள் மூவரையும் ஒன்று போல பாவித்து வளர்த்ததே என்று சொன்னால் அது மிகையாகாது.

உணவு, உடை, படிப்பு, திருமணம் இப்படி எல்லா விஷயங்களிலும் அவரவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்தார்கள். அதுகுறித்து ஆலோசனைகள் மட்டுமே சொல்லி, முடிவை எங்கள் கைகளிலேயே ஒப்படைத்தார்கள். அதனால் எங்களால் எங்கள் பொறுப்பை உணர முடிந்தது.

இன்று நாங்கள் மூவரும் அவரவர்கள் துறையில் நல்ல சிறப்பானதொரு உயரிய நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் பாலின வேறுபாடு காண்பிக்காமல் எங்களை ஒன்று போல வளர்த்த எங்கள் பெற்றொரின் பெருந்தன்மையே ஆகும். அதுவும்,  ‘ஆசைக்கு ஒரு பெண் குழந்தை, ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை’,  ‘ஆம்பிளை சிங்கம்டா’ என்றெல்லாம் வார்த்தைகளிலேயே ஆணாதிக்கம் தெறிக்கும் ஆணாதிக்க மனப்பாங்கு மேலோங்கி இருந்த அந்த நாட்களில் எங்கள் பெற்றோரின் வளர்ப்பு சந்தேகமே இல்லாமல் பாராட்டுகுரியது தான்.

எங்கள் பெற்றோரே எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக விளங்கினார்கள். என் அப்பா ஆண் என்ற ஈகோ பார்க்காமல் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்வார். என் அப்பா சமையல் செய்கின்ற நாட்களில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர் வந்தால்  ‘இன்று சமையல் வீட்டில் இல்லை போலிருக்கு. சமையல் அறை சுத்தமா பளிச்சென்று இருக்கு’ என்று சொல்லும் அளவுக்கு சமையல் அறை சுத்தமோ சுத்தமாக இருக்கும். அத்தனை நேர்த்தி இருக்கும் அவர் செய்கின்ற வேலைகளில்.

அதுபோல என் அப்பா, அம்மா இருவருமே தொலைபேசி துறையில், இரவு, பகல் என்று 24 மணிநேர சுழற்சி வேலையில் இருந்ததால், யாருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலை இருக்கும். அம்மாவுக்கும் இரவு நேர பணி இருக்கும். இந்நாட்களில் இரவு நேர பணி என்பது சகஜம். ஆனால் அன்று அது ஆரம்பம். என் அம்மா பணி செய்கின்ற அலுவலகத்துக்குச் சென்று பார்த்திருக்கிறேன். ஜே..ஜே என்று எங்கும் பெண்கள் பம்பரமாய் சுழன்று, சிரித்த முகத்துடன், சுறுசுறுப்பாய் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

எங்கள் அம்மா, அப்பா இருவரும் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைத்ததை  நாங்கள் பார்த்து வளர்ந்ததால் கடுமையான உழைப்பு என்பது எங்களுக்கு பெரிய விஷயமாக தெரியவே இல்லை.

ஒரு நாளும் இருவரும் வேலை செய்கின்ற இடத்தைப் பற்றியும், செய்கின்ற வேலையைப் பற்றியும் முகம் சுளித்தோ, சலிப்பான வார்த்தைக் கொட்டியோ, திட்டியோ பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் தீபாவளி, பொங்கல் என்றால் கூட இருவரும் சேர்ந்து வீட்டில் இருக்க முடியாது. யாரேனும் ஒருவர் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒருவர் தான் வீட்டில் இருப்பர். இருவருக்கும் சேர்ந்து என்று விடுமுறை கிடைக்கிறதோ அன்று தான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் தினம்.

எங்கள் அப்பா, அம்மா இருவரில் ஒருவர் இருந்தாலே இருவரும் இருக்கின்ற ஒரு உணர்வை இரண்டு பேராலேயும் எங்களுக்குக் கொடுக்க முடிந்தது. அப்பா மட்டும் வீட்டில் இருக்கின்ற நாட்களில் என் அப்பா தாயுமானவராகவும், அம்மா மட்டும் வீட்டில் இருக்கின்ற நாட்களில் என் அம்மா தந்தையுமானவராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகென்ன…பாலின வேறுபாடு காண்பிக்காமல் அவர்கள் எங்களை வளர்த்தில் ஆச்சர்யம் ஏதுமில்லை தானே?

எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி, சமூக அந்தஸ்து போன்றவற்றால் இணையாக நடத்தப்படுகிறார்களோ அந்த நாடு பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கும்-இது சுவாமிஜியின் கூற்று. இது நாட்டுக்கு மட்டும் அல்ல. வீட்டுக்கும் பொருந்தும். எந்த வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் பாலின வேறுபாடு காண்பிக்காமல் வளர்க்கப்படுகிறார்களோ, அந்த வீட்டுக் குழந்தைகள் கல்வி, வேலை, திருமணம், சமுதாய பங்களிப்பு என்று எல்லா விஷயங்களிலும் சுபிக்‌ஷமாகவே விளங்குவார்கள் என்பதற்கு எங்கள் வீடே ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஏனெனில் பாகுபாடு காண்பிக்காமல் வளர்க்கப்படும் போது, மனப்பக்குவம், மனதிடம், மனஅரோக்கியம் மேம்படுகிறது. சகோதர சகோதரிகளுக்குள் வேற்றுமை ஒரு துளியும் இல்லாத ஒற்றுமை பலப்படுகிறது. இதன் காரணமாய் செயல்திறன் கூடுகிறது. பெற்றோரிடம் எதையும் பேசலாம்;அவர்கள் நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள்; நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்;நமக்கு நல்லதையே செய்வார்கள் என்ற உறுதியான மனோதைரியம் உண்டாவதால் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வெளியில் வழி தேடி அலையாமல், வீட்டிற்குள்ளேயே வழி கிடைத்து விடுவதால் நல்ல ஆரோக்கியமான உறவுமுறை உண்டாகிறது.

நம்பிக்கையான உறவு முறை உண்டாக பாலின வேற்றுமை இல்லாத வளர்ப்பு காரணமாகிறது. நல்ல ஆரோக்கியமான வீடாகத் திகழ ஆண், பெண் வேறுபாடற்ற வளர்ப்பு அவசியமாவதைப் போல, நல்ல ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பெண்களும் ஆண்களுக்கு இணையாக எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும்.

‘ஒரே ஒரு இறக்கையுடன் ஒரு பறவை பறக்க இயலுமா? பெண்குலம் சிறக்காமல் உலகத்திற்கு நல்ல காலம் இல்லை’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

 கல்வி

பொதுவாகவே கல்வி ஒன்று தான் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட ஒரே வழி. அதுவும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை சுவாமிஜி ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.  கல்வியுடன் இணைந்து நன்மைப் பயக்கின்ற விஞ்ஞானம் மற்றும் பிற விஷயங்களையும் கற்பிக்க வேண்டும். அவர்கள் கற்றுக் கொள்ளும் கல்வியும் அதைச் சார்ந்த அத்தனை  விஷயங்களும் அவர்களுக்கு மட்டுமில்லாமல் இந்த சமூகத்துக்கே நன்மை தரும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பெண்களுக்கு கல்வி பயில வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவுடன், ஆண்கள் அவர்கள் விஷயத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்;  அவர்களே சிந்தித்து தங்களுக்கு நன்மை அளிப்பதை தேர்ந்தெடுக்கட்டும்; அவர்களுக்கு என்ன சீர்திருத்தம் வேண்டுமென்று அவர்கள் கூறுவார்கள்; கல்வி கற்ற பெண்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் தங்கள் கணவர்களை சிறந்தவர்களாக்குவார்கள்; வீரம் மிக்க பிள்ளைகளுக்கு தாயாக விளங்குவார்கள்; கல்வி கற்ற பெண்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியும்; இந்த விஷயத்தில் இந்தியப் பெண்கள் உலகில் பிறரைப் போல் திறமையுடையவர்களே – என்ற கருத்தில் தீர்மானமாக இருந்தார் சுவாமிஜி.

சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை. விதவைகளையும், பெண்களையும், குழந்தைகளையும் நான் காப்பேன் என்று யாரேனும் சொன்னால்… சுவாமிஜி அவர்களிடம் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்:   ‘விதவைகளையும், பெண்களையும் ஆள்வதற்கு நீங்கள் என்ன எல்லாம் வல்லக் கடவுளா? விலகி நில்லுங்கள்! அவர்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள்’. எவ்வளவு பெருந்தன்மையான கருத்துக்கள். 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமூக சூழலில், சுவாமிஜியைத் தவிர வேறு யாரால் பெண்களுக்காக இப்படி உயர்வாக சிந்திக்க முடியும்?

 பக்தியும் ஞானமும்

சுவாமிஜி வாழ்ந்த காலத்தில் பெண்கள் பக்திமார்க்கத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள் பக்தியும் ஞானமும் அடைவதற்குத் தகுதியில்லாதவர்கள் என்று எந்த சாஸ்திரத்தில் உள்ளது? பெண்கள் வேத மந்திரங்களை இயற்றியதோடல்லாமல் அத்யயனம் செய்தார்கள் என்பது வேதமே ஒப்புக் கொள்ளும் அளப்பரிய உண்மை. அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள் என்பதைத்தான் அத்யயனம் என்பர்.

இந்த பெண்கள் தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது பெண்களுக்காக மட்டும் கூட்டங்களுக்காக கூட்டினர்.

கார்க்கி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின்  மனைவி மைத்ரேயி போன்றோர்கள் பிரம்ம ஞானத்தைப் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டு தங்கள் திறமையினால் ரிஷிகளுக்குரிய சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் அந்த காலத்திலேயே ஆன்மிக வாழ்வில் அனுமதித்துப் போற்றப்பட்டிருக்கும் போது, இந்த காலத்தில் ஏன் அந்த உரிமையை மறுக்க வேண்டும்?

எந்த நாடு, எந்த இனம், பெண்களை மதிக்கவில்லையோ, அவை ஒரு போதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை. அடையவும் அடையாது. நம் இனம் இவ்வளவு இழிந்துள்ளததற்கு முக்கியக் காரணம் பெண்களுக்கு நீங்கள் மரியாதை அளிக்காதது தான்….

எந்த நாட்டில், எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ, அந்த நாடும், குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. எனவே அவர்களை முதலில் உயர்த்த வேண்டும் என்கிறார்.

 வீரம்

பெண்கள் எதற்கெடுத்தாலும் அழத் தொடங்கி விடுகிறார்கள். இதுவரை அப்படித் தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. வீர உணர்வை அவர்களுக்கு போதிக்க வேண்டும். இந்த காலத்தில் தற்காப்பு முறைகளைக் கூட அவர்கள் அறிய வேண்டியுள்ளது – இவ்வாறு பெண்களை வீரமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதை வலியுறுத்திய விவேகானந்தர், ஜான்சிராணியை உதாரணமாகக் கூறுகிறார்.

ஜான்சிராணி லட்சுமிபாய் அவர்களின் வீரத்தின் பின்னணியைத் தெரிந்து கொண்டால், அது  நம்மை சிலிர்ப்படைய வைக்கும்.  இந்தியாவில் ஆங்கில ஆட்சி வலுப்பெற வேண்டுமானால், வாரிசில்லா இந்திய ராஜ்ஜியங்களை ஆங்கில ராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொள்ளும் சட்டத்தை நடைமுறையாக்கியது ஆங்கில அரசு.

இது நம் நாட்டு மன்னர்களுக்கு பெருத்த கவலையை உண்டு பண்ணியது. நம் நாட்டு மன்னர்களின் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்றால் தத்து எடுத்துக் கொள்கின்ற முறை இருந்து  வந்தது.  அதற்கும் ஆங்கில அரசு முட்டுக்கட்டைப் போட்டது. அதாவது தத்து எடுத்துக் கொள்வதற்கு, ஆங்கில அரசின் ஒப்புதல் பெற்று தான் தத்து எடுக்க வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாமல் தத்து எடுத்துக் கொண்டால், அந்த ராஜ்ஜியம் ஆங்கில ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டு விடும் என்பதே அந்த சட்டம். ஆனால், ஆங்கில அரசிடம் ஒப்புதல் கேட்டால் அது மறுக்கப்பட்டு உடனடியாக அந்நாடு ஆங்கிலேயருக்கு சொந்தமாகி விடும்.

இந்த காலகட்டத்தில் தான்  காசியை மராத்திய பேஷ்வாவாகிய பாஜிராவ் ஆண்டு வந்தார். அவரிடம் பணிபுரிந்து வந்த மெளரி பந்தர் மற்றும் பாகிரீதி அம்மாளின் மகளாகப் பிறந்தார் மணிகர்ணிகா என்றழைக்கப்பட்ட லட்சுமிபாய். இவர் சிறு வயதிலேயே மன்னர் பாஜிராவின் மகன் நானா சாகிபுடன் சேர்ந்து போர்ப் பயிற்சிகளை கற்று தேர்ந்தார்.

இவருக்கு ஜான்சியை ஆண்டு வந்த இந்திய மன்னர் கங்காதரராவ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.  இருவருக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்து சிறு வயதிலேயே இறந்து விட்டது. இதன் காரணமாய் லட்சுமிபாய், கங்காதரராவ் தம்பதியினர் தாமோதரராவ் என்ற ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர். சிறிது காலத்தில் கங்காதரராவ் நோய்வாய்ப்பட்டு இறந்து  விடுகிறார்.

இச்சூழலில் அன்றைய ஆங்கிலேய சட்டப்படி வாரிசில்லா நாடான ஜான்சியை ஆங்கில அரசுடன் இணைத்துக் கொண்டு, லட்சுமிபாய்க்கு ஓய்வூதியம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் லட்சுமிபாய் ஓய்வூதியம் பெறவும், ஜான்சியை ஆங்கில அரசுடன் இணைக்கவும் மறுத்து, ஆண் உடை உடுத்திக் கொண்டு கையில் வாள் ஏந்தி சிங்கம் போல ஆங்கில அரசை எதிர்க்கப் புறப்பட்டார்.

அவளது வீரமும், ஆளுமையும் ஆங்கில அரசை மிரட்டினாலும், தன் படை பலத்தினால் ஜான்சியைக் கைப்பற்றியது ஆங்கில அரசு. ஆனாலும் விடாமல் போரிட்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினார் லட்சுமிபாய். தன் நாட்டு சுதந்திரத்துக்காக ஆங்கில அரசுடன் போரிட்டு பலரை வெட்டி சாய்த்தார். ஆனால் தந்திரமாக ஆங்கில அரசு தனி ஆளாக நின்று போரிட்ட லட்சுமிபாயை தன் படையால் சுற்றி வளைத்து கொன்றது.

தன் உரிமைக்காகவும், தன் நாட்டு சுதந்திரத்துக்காகவும் தனி ஆளாக நின்று போரிட்டு, வீர மரணம் எய்த  ஜான்சிராணி லட்சுமிபாயின் செயலில் இரண்டு  குணங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று அவரது விவேகத்துடன் கூடிய வீரம். இரண்டாவது தன் நாட்டின் மேல் அவருக்கிருந்த பற்று.

இந்த விடுதலைப் போராட்ட கால நிகழ்ச்சி அன்றைய காலகட்ட பெண்களின் நிலையை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறதல்லவா?

இதுபோன்ற வீரத்துடன் இந்திய நாட்டுப் பெண்கள் திகழ வேண்டும் என்று விரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

 வேலை/தொழில்

தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் சுவாமிஜி வலியுறுத்துகிறார். அதற்கு அடிப்படையாக நல்ல கல்வி கொடுக்கப்பட வேண்டும். நல்ல கல்வி அறிவை வளர்க்கும். அந்த அறிவைக் கொண்டு தானும் வளர்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைப்பார்கள் பெண்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார் சுவாமிஜி.

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்பது நம் இந்தியப் பெண்களைப் பற்றி பொதுவாகக் கூறப்படும் கருத்து. ஆனால், இன்றைய பெண்கள் அந்த நிலையையும் மீறி தன்னையும் வெற்றிபெறச் செய்து கொண்டு, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் வெற்றியடையச் செய்கிறாள் என்பது தான் உண்மை.

நமது நாட்டுப் பெண்கள் மேலைநாட்டுப் பெண்கள் போன்ற அறிவு பெற வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் தூய வாழ்வை இழக்க வேண்டும் என்றால் அந்த அறிவு தேவையில்லை என்பதையும் வலியுறுத்துகிறார்.

மேலை நாட்டவர்கள் தங்கள் பெண்களை மதிப்பதால் அவர்கள் சுகமாக, கற்றறிந்தவர்களாக, சுதந்திரர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். நாம் பெண்களை இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், தூய்மையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடுகிறோம். விளைவு? நாம் மிருகங்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவர்களாக,  ஏழைகளாக இருக்கிறோம்.

சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவது தான் என்று ஆணித்தரமாக உரைக்கிறார்.

இந்தியாவை ஆன்மிகமயமாக்க 500 ஆண்கள் முயன்றால், அதற்கு 50 வருடங்கள் ஆகலாம். அதையே 500 பெண்கள் முயன்றால் ஒருசில வாரங்களிலேயே சாதித்து விடலாம்.

பெண்கள் – நேற்று, இன்று, நாளை

கிறிஸ்துவுக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வழி சமூகமே இவ்வுலகில் ஆட்சி செய்துள்ளது. காடுகளில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்த காலங்களில் பெண்களின் இராஜ்ஜியமே நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. அன்றைய பெண்கள் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு தலைவி போல முன்னே செல்ல, அவர்கள் குழுவில் உள்ள பிற பெண்களும், ஆண்களும் அவள் பின்னே சென்று விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். பெண்கள் தங்கள் இனத்தைக் காக்கும் மாபெரும் சக்தியாக அன்று விளங்கி இருக்கிறார்கள். அவளின் சக்திக்குக் கட்டுப்பட்டு பின்னால் செல்ல அன்றைய சமுதாயம் தயாராக இருந்தது.

அன்றைய பெண்களுக்கு தண்ணீரில் நீந்தத் தெரியும்; மரத்தில் ஏறத் தெரியும்; மரம் வெட்டத் தெரியும்; வேட்டையாடத் தெரியும்; உணவு சமைக்கத் தெரியும்; ஆடை நெய்யத் தெரியும்; வீடு கட்டத் தெரியும்; போரிடத் தெரியும்; வேகமாக ஓடத் தெரியும்; ஆடவும், பாடவும் கூடத் தெரியும்; அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை எனலாம்.

இப்படி ஆதிகாலத்தில் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பெண்களின் நிலை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆண்களுக்கு இணையாக சரிநிகர் சமானமாக வாழ்ந்து வந்த அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டு, அவர்களை வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக்கி போகப் பொருளாக்கி, அவர்கள் ஆண்களின் உடைமைப் பொருளாக ஆக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பால்யவிவாகம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி போன்ற கொடுமைகளுக்கும் பெண்கள் ஆட்படுத்தப்பட்டனர். பின்னாளில், அவற்றுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டு, அக்கொடுமைகள் பெருமளவில் குறைக்கப்பட்டன.

ஆனால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட கருவிலிருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதை அழிக்கத் துடித்த பெற்றோரும் இருந்து தான் வந்தனர். அதனால் தான் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சட்டம் இயற்றப்பட்டது.

அப்படியே கருவறையில் இருந்து தப்பித்து வெளிவந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து சாகடிக்கும் கொடூரச் செயல்களும் நம் நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருந்ததை நாம் அறிவோம்.

கருவில் ஜனித்த நாளில் இருந்து பிரச்சனைகளைச் சுமந்து பிறந்த பெண்குழந்தைகளுக்கு எல்லா விதங்களிலும் பிரச்சனைகளும், சோதனைகளும் தொடர்ந்து வந்தன. ஆண்களுக்கு இணையாக உணவு, உடை, ஆசாபாசங்கள் இப்படி சின்னச் சின்ன அடிப்படை விஷயங்களில் இருந்து கல்வி, திருமணம், வேலை என்று எல்லா விஷயங்களிலும் போராட்டம், போராட்டம் தான்.

சென்ற நூற்றாண்டு பெண்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்த வரதட்சணை கொடுமை கொஞ்சம்(கொஞ்சம் தான்…) விலகிய இன்றைய காலகட்டத்தில், பாலியல் வன்முறை தலைதூக்கி, தன் கோர பற்களை காட்டி பயமுறுத்தி வருகிறது. நடக்கத் தெரிந்த 2 வயதேயான கற்றுக் குட்டி பெண் குழந்தைகள் முதல் வயோதிகத்தினால் நடை தப்பிய 70-80 வயது பாட்டிகள் வரை ஒவ்வொரு பெண் ஜீவனுமே இன்று சமுதாயத்தில் எச்சரிக்கை உணர்வோடு தான் வாழ வேண்டியுள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்று பயந்தபடி உஷ்ண மூச்சு விட வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறோம்.

இவற்றை எல்லாம் மீறி இன்றைய பெண்களின் நிலை பெரிய அளவில் முன்னேறியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் கல்வி. ஆம். ஒருபக்கம் பெண்களின் கல்வியறிவு, மறுபக்கம் அயல்நாட்டு நிறுவனங்களின் தயவால் பெருக்கெடுத்த வேலைவாய்ப்புகள். அறிவார்ந்த படிப்பும், கைநிறைய சம்பளமும் பெண்களுக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

படிப்பு, வேலை, திருமணம் என்று அனைத்துமே ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப என்ற நிலை உருவாகியுள்ளது. இதைத் தானே சுவாமிஜியும் விரும்பினார். பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வீரம், திருமணம், வேலை மற்றும் தொழில் என அத்தனையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். 150 வருடங்களுக்கு முன்பு அவர் ஆசைப்பட்ட கனவு சுவாமிஜி கண்ட கனவு இன்று நனவாகி வருகிறது.

சில சமூக நெருக்கடிகளினாலும், பொறுப்புகளின் சுமைகளினாலும், பல்வேறு அடக்குமுறைகளினாலும் ஆங்காங்கே பெண்மைக்குள் புதைந்து கிடக்கும் வன்மம் வெளியே வந்து கொண்டிருப்பதை தவிர்க்க இயலாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பூமிமாதாவே பொங்கி எழுந்து சீறுகின்ற அவலத்தை நம்மால் தடுக்க முடிகிறதா? பூமிமாதாவிற்கே இந்த நிலை எனும்போது உயிரும், உடலுமாய் வாழ்கின்ற பெண்களுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அழுத்தங்களும் வெளிவந்து தானே ஆக வேண்டும்?

பெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாக சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிதைக்கப்படும் போது பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

மீண்டும் ஒருமுறை சுவாமி விவேகானந்தர் சொன்னதை நினைவு கூர்கிறேன். அதை மட்டும் நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்லதொரு விடியல் வெகுதொலைவில் இல்லை. இதோ நம் கைகளுக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளது.

பெண்களுக்கான பொற்காலம்

குறிப்பாக பெண்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடி பெற்ற இந்த சுதந்திரக் காற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அதுபோல கட்டுப்பாடு என்பது நம்மை அடிமைப்படுத்துவது என்றும் பொருளல்ல. கட்டுப்பாடு என்பது நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் ஒரு சங்கிலி. அது இல்லா விட்டால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவாகி விடும். கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை, திருடனுக்கு சிறை தண்டனை இப்படி எதற்காக சட்ட திட்டங்கள் இருக்கின்றன? தவறுகள் நடக்காமல் இருப்பதற்குத் தானே. தண்டனைகளே இல்லை என்றால் கொலைகளும், திருட்டுகளும், பலாத்காரங்களும் இன்ன பிற குற்றங்களும் பெருகி தானே வளரும்.

அதுபோல தான் ஆண், பெண் இருபாலருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் நம்மை நெறிபடுத்தி செம்மையான பாதையில் செல்ல வைக்க உதவும். எனவே கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்தாமல் நீங்களே உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாடுகளை பிறர்  திணித்தால் அது அடிமைப்படுத்துவதைப் போலவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதைப் போலவும் இருக்கும். ஆனால் நாமே விதித்துக் கொண்டால், கொள்கை பிடிப்புள்ள ஒழுக்கமான நபர் என்கின்ற மரியாதையைப் பெற்றுத் தருவதோடு,  நமக்கே இரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும்.

இன்று பெண்களுக்குப் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம்  கிடைத்தவுடன் சுதந்திர ஆண்கள் அன்று(இன்றும்) என்னவெல்லாம் செய்தார்களோ அவை அத்தனையையும் இந்த நூற்றாண்டுப் பெண்கள் செய்கிறார்கள். புகைக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் புரிகிறார்கள்.

ஆக, சுதந்திரம் என்ற ஒரு சக்தி கிடைத்து விட்டால் எல்லோரையும் எல்லாவற்றையும் செய்யத் தூண்டும் என்பது கண்கூடான உண்மையாகிறது. எனவே கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் ஆபத்தானதே ஆகும்.

எந்த ஒரு தவறானாலும் அது ஆண்களும் செய்யக் கூடாது, பெண்களும் செய்யக் கூடாது. குற்றம் என்பதை இருபாலருக்கும் பொதுவாக்க வேண்டும். ஆண் செய்தால் சரி, பெண் செய்தால் தவறு என்பது மாறி, நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பதைப் போல தவறான செயலை யார் செய்தாலும் அது தவறு தான் என்ற பொதுவான நிலை உருவாக்கத் தான் நாம் பாடுபட வேண்டும். அதை விட்டு, ஆண் செய்கின்ற அத்தனை தவறுகளையும் பெண்களும் செய்வது தான் ஆணுக்கு இணையாக நாம் பெற்ற சுதந்திரம் என்றெண்ணி செயல்படுவது ஆரோக்கியமானது இல்லை.

ஒரு ஆணை அவனது பலம் மற்றும் திறமையாலும், பெண்ணை அவளது அழகு மற்றும் கவர்ச்சியினாலும் எடை போடுவது தான் காலம்காலமாக நடந்து வருகிறது. அந்த மனோபாவம் மாற வேண்டும்.

      ஒரு பெண் தன்னுடைய திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும். உடலின் எடை, உயரம், கலர் மற்றும்  இன்ன பிற கவர்ச்சிகளினாலோ, ஆடை, அணிகலன்களினாலோ, வெளிப்புற அலங்காரத்தினாலோ,  அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது. எந்த ஒரு பெண், இந்த மனோநிலையை எப்போது அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே மிகவும் சுதந்திரமான பெண் என்பது என் ஆழமான அனுபவமான கருத்து.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

(Visited 531 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari