பார்வையற்றோருக்கான தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி @ பிரசிடென்சி கல்லூரி (2014)

சென்னை மாநிலக் கல்லூரி (பிரெசிடென்சி கல்லூரி) தமிழ்த்துறையும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இணைந்து நடத்திய உயர்கல்விசார் பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம் மேனிலை தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான சிறப்புப் பயிலரங்கத்தில்  ‘தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி’ என்ற தலைப்பில் பார்வையற்றோருக்காக மார்ச், 3, 2014  அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில்  நான் ஆற்றிய உரை…

கம்ப்யூட்டரின் தந்தையும், முதல் கம்ப்யூட்டர் புரோகிராமரும்

இன்றைக்கு நம் உள்ளங்கையில்  பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும்.

சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து Analytical Engine என்ற முதல் ப்ஹுஎன்று அழைக்கப்படுகிறார்.

இவர் கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. அதன் எடை ஆயிரம் கிலோ. அந்தக் கம்ப்யூட்டரின் வேகமும் மிகவும் குறைவு. ஆனால், தற்போதைய சாதாரண கம்ப்யூட்டர்களில் நினைவாற்றல் அந்த முதல் கம்ப்யூட்டரின் நினைவாற்றலை விட 10 லட்சம் மடங்கு அதிகம்.

 

 

 

அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘ அடா பைரன் லவ்லேஸ்’ என்பவர்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் அடா பைரன் லவ்லேஸ்(1816-1852). இவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள். லவ்வேஸ் சிறுவயதிலிருந்தே தனது தந்தைப் போல கவிஞராகவும் தனது தாயான அன்னபேலே போல கணித வியலாளருமாக சிறந்து விளங்கினார்.

எழுத்து, கணிதத்தோடு இசைத்துறையிலும் சிறந்து விளங்கிய அடா லவ்வேஸ் தனது 18 வயதில் சார்லஸ் பாபேஜ் உடன் இணைந்து “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பின் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அதோடு அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார். இதுவே உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமாகக்  கூறப்படுகிறது. அக்கால கம்ப்யூட்டர் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவியது அடா எழுதிய புரோகிராம்கள் எனவும் சொல்லப்படுகிறது.

கம்ப்யூட்டர் துறையில் நீங்காத இடத்தைப்பெற்ற அடா லவ்வேஸ் கம்ப்யூட்டர்கள் மூலம் இசையமைக்க இயலுமென அப்போதே கூறினாராம்.

தொழில்நுட்ப துறையில் பெரிதும் ஆர்வம்காட்டி சாதனைகள் புரிந்த அடா லவ்வேஸ் தனது 36-வது வயதில் நவம்பர் 27-ல் 1852 ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பெண்களின் முன்னோடியாக திகழ்ந்த அடா லவ்வேஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் படைத்த சாதனைகளை கொண்டாடும் விதமாக அடா லவ்வேஸ் தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கம்ப்யூட்டர் லாங்குவேஜ் ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1984ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 வெப்பிரவுசரின் பிறந்த நாள் (1991 February 26)

கம்ப்யூட்டரை வைக்க மிகப்பெரிய அறை தேவைப்பட்ட காலம் போய் அதை ஒரு டேபிள் மீது வைத்துப் பயன்படுத்துகின்ற டெஸ்க்டாப் கம்ப்யூட்டரானது. அதை ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

ஒரே இடத்தில் இருக்கின்ற ஒன்றுக்கும் மேற்பட்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை  லோக்கல் ஏரியா நெட்வொர்க் மூலம் இணைத்து அவற்றில் உள்ள ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

அதைத் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் இயங்குகின்ற கம்ப்யூட்டர்கள் வைட் ஏரியா நெட்வொர்க் மூலம் தொலைபேசி இணைப்புகளால் இணைக்கப்பட்டு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இப்படியே நெட்வொர்க் இணைப்புகள் ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு, உலகளாவிய அளவில் அனைத்து கம்ப்யூட்டர்களும் இணைக்கப்பட்டு மிகப்பெரிய நெட்வொர்க்கானது. அது தான் இண்டர்நெட். இதற்கு WWW – World Wide Web என்று பெயர். அதை லண்டனைச் சேர்ந்த டிம் பெர்னேர்ஸ்-லீ  என்ற கம்ப்யூட்டர் விஞ்ஞானி  கண்டுபிடித்தார். இதனால் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன.

இதன் மூலம் தகவல் பிரபஞ்ஞம் நம் முன் பிரமாண்டமாய் எழுந்து நின்றது. அதில் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த ஒரு வசதி தேவைப்பட்டது.

உதாரணத்துக்கு இண்டர்நெட்டை பஸ்கள் போல கருதாலம். அவற்றைப் பயன்படுத்தி எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் பஸ்ஸை ஓட்டிச் செல்ல டிரைவர்கள் தேவையல்லவா? டிரைவர் இல்லை என்றால் எப்படி பஸ்ஸை பயன்படுத்துவது? அதுபோல உலகளாவிய அளவில் கம்ப்யூட்டர்களை இணைத்தாயிற்று. தகவல்களை தேடிப் பயன்படுத்துவது எப்படி? அதற்கு பிரவுசர் என்ற சாஃப்ட்வேரையும் டிம் பெர்னேர்ஸ்-லீ தான் கண்டுபிடித்தார்.

1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இவர் கண்டுபிடித்த பிரவுசரின் பெயர் நெக்சஸ். இது தான் உலகின் முதல் வெப்பிரவுசர்.

இப்போது இண்டர் எக்ஸ்புளோரர், நெட்ஸ்கேப் நேவிகேடர், கூகுள் குரோம் போன்று பல வெப்பிரவுசர்களை நாம் பயன்படுத்துகிறோம்.

கிளவுட் கம்ப்யூட்டிங்

பத்து வருடங்களுக்கு முன்னர், தமிழ் புலவர் ஒருவர், ஒரு நிகழ்ச்சியில், இன்டர்நெட்டைப் பற்றி சொல்லி, அதை ஏதோ ஒரு இலக்கிய நிகழ்வோடு ஒப்பிட்டுப் பேசினார். இன்டர்நெட்டில் தகவல்கள் எல்லாம் வெப்சர்வரில் பதிவாகி இருக்கிறது என்பதை நம்முடைய தகவல்கள் எல்லாம் ஆகாயத்தில் பதிவாகியுள்ளன. அதில் இருந்து தான் நம் கம்ப்யூட்டர்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன என்று சொன்னர். அன்று கிளவுட் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் எல்லாம் செயல்படுத்தப்படவே இல்லை. அவை அண்மைகால தொழில்நுட்ப வசதி. அன்று அப்புலவர் தனக்குத் தெரிந்த அளவில் இன்டர்நெட்டைப் பற்றி புரிந்து வைத்துக் கொண்டு பேசினார். அன்று அது தவறான செய்தியாக(தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல்) இருந்தாலும், இன்று அது புத்தம்புது தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது.

ஆம். கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஆகாய கம்ப்யூட்டர் என்று பொருள்படும். உலகளாவிய சர்வர். அதில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். அந்த சாஃப்ட்வேர்களை அங்கிருந்தபடி பயன்படுத்திக் கொள்ளலாம். நம் கம்ப்யூட்டரில் அந்த சாஃப்ட்வேர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல நம் ஃபைல்கள், ஃபோல்டர்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் என அனைத்தையும் அந்த சர்வரிலேயே பதிவாக்கிக் கொள்ளலாம். இதனால் நம் கம்ப்யூட்டரில் /லேப்டாப்பில் /ஐபேடில்/டேப்லெட்டில்/மொபைல் போன்றவற்றில் இன்டர்நெட் தொடர்பை மட்டும் வைத்திருந்தால் மட்டும் போதும். தகவல்களையும், சாஃப்ட்வேர்களையும் கிளவுட் கம்ப்யூட்டரில் இருந்தே பெற முடியும். ஆகாயம் எப்படி நாம் செல்லும் இடங்கள் எல்லாம் வருகிறதோ, அதுபோல நாம் செல்லும் இடங்களில் எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடிவதால் தான் ஆகாய கம்ப்யூட்டர் என்று பொருள்படும் வகையில் பெயர் சூட்டியுள்ளார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் என்றால் அது முறையாக வேலை செய்ய என்னவெல்லாம் தேவை என்று யோசித்துப் பாருங்கள். கம்ப்யூட்டரோ, லேப்டாப்போ அல்லது அதை அடுத்து வந்துள்ள டேப்லெட், ஐபேட் இப்படி எந்த ஒரு சாதனமாக இருந்தாலும் சரி, அவை அனைத்துமே  ஹார்ட்வேர்கள் தான். அவை முறையாக இயங்குவதற்கு ஆபரேட்டிங் சிஸ்டம்(OS-Operating System) என்ற சிஸ்டம் சாஃப்ட்வேர் அவசியம் தேவை. அதன் பிறகு நம் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை செயல்படுத்துவதற்கு அததற்கான சாஃப்ட்வேர்கள் அவசியமாகிறது. உதாரணத்துக்கு டைப் செய்ய எம்.எஸ்.வேர்ட், படம் வரைய ஃபோட்டோஷாப் இப்படி. இவை எல்லாம் கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கில் பதிவாகி இருக்கும். ஆக, கம்ப்யூட்டரில் ஹார்ட்டிஸ்க், அது இயங்க ஆபரேட்டிங் சிஸ்டம், அதில் நமக்குத் தேவையான சாஃப்ட்வேர்கள் இவை அனைத்தும் இருந்தால் தான் கம்ப்யூட்டர் பயனுள்ளதாக இருக்கும்.

இது போல தான் கிளவுட் கம்ப்யூட்டரை  மிகப்பெரிய கம்ப்யூட்டராகவும், அதில் அதிகமான கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் இருப்பதைப் போலவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அந்த ஹார்ட் டிஸ்க்கில் நமக்குத் தேவையான இடத்தை வாங்கிக் கொள்ளலாம். அதில்  நமக்குத் தேவையான ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் அல்லது பொதுவாக பதிவாக்கப்பட்டிருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நம் கம்ப்யூட்டரில் நாம் பதிவாக்கி வைத்திருக்கும் அத்தனை தகவல்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து கொள்ளலாம். நாம் நம் இருப்பிடத்தில் உள்ள  கம்ப்யூட்டரை பயன்படுத்தி அனைத்தையும் அனுபவிக்கலாம். இது தான் கிளவுட் கம்ப்யூட்டிங். ரொம்ப சிம்பிள்.

உதாரணத்துக்கு,  நாம் நம் அலுவலகத்தில் உள்ள ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில்  ஒரு டாக்குமெண்ட் டைப் செய்து வைத்திருக்கிறோம் அல்லது ஒரு படம் வரைந்து வைத்திருக்கிறோம். அதை முக்கியமாக ஒருவருக்கு அனுப்பியே ஆக வேண்டும். திடீரென பர்சனல் வேலை காரணமாக ரயில் பயணம். அவசரத்தில் அதை பென்டிரைவில் காப்பி செய்து எடுத்து வர மறந்து விடுகிறோம். லேப்டாப்பை மட்டும் எடுத்துக் கொண்டு ரயில் ஏறி விடுகிறோம். ஸ்…என்று மறதிக்காக நம்மையே நொந்து கொள்கிறோம்.

இதுபோன்ற சூழலில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. நாம் கம்ப்யூட்டரில் செய்கின்ற வேலைகளை அதை கிளவுட் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்திலேயே செய்யும் போது, பயணம் செய்யும் போது, பஸ், ரயில் நிலையங்களில் காத்திருக்கும் போது, ஓட்டல்களில் இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும், அவற்றை நாம் நம் லேப்டாப்பில் இருந்தே பயன்படுத்த முடியும். கிளவுட் கம்ப்யூட்டர் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மைத் தொடர்ந்து வரும். எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த சாஃப்ட்வேரை வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்மிடம் அவற்றைப் பயன்படுத்த கம்ப்யூட்டர் மட்டும் இருந்தால் போதும்.

நம் மொபைல் சிம்மில் தேவையான போது ரீசார்ஜ்/டாப் அப் செய்து  கட்டணத்தை ஏற்றிக் கொண்டு  பயன்படுத்துகிறோம் அல்லவா? இதற்கு அடிப்படையில் ஒரு மொபைல் சிம் தேவை. அது இருந்தால் போதும் நமக்குத் தேவையான போது, எங்கிருந்து வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். அதுபோல நம்மிடம் ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த சாஃப்ட்வேரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம்.

இதனடிப்படையில் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் மூன்று விதமான வசதிகளைக் கொடுக்கின்றன. 1. Infrastructure as a service , 2. Platform as a service, 3. Software as a service

Infrastructure as a service : கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த  நமக்கு சர்வர் ஏதும் தேவை இல்லை. அந்த தொழில்நுட்பமே நமக்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவு சர்வருக்கான இடத்தைக் கொடுக்கிறது.  அதற்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.  இதில் நமக்குத் தேவையான தகவல்களை பதிவாக்கிக் கொள்ளலாம். இதற்கு Infrastructure as a service என்று பெயர்.

Platform as a service:  கிளவுட்  கம்ப்யூட்டிங் மூலமாக ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை அளிப்பது Platform as a service.

Software as a service:   நமக்குத் தேவையான சாஃப்ட்வேரை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் அளிப்பது Software as a service. இதன் மூலம், உலகத்தில் எங்கிருந்தாலும் நம் மொபைலில் இருந்து ஒரு சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும்.

முக்கியமான ஒரு செய்தி: கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போதும், நமக்கென யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கிடைக்கும். எனவே நம் தகவல்களுக்கான பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படி நம் இமெயில் இன்பாக்ஸ்களில் நம் இமெயில்கள் பத்திரமாக உள்ளதோ, அதுபோலவே கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திலும், நம் தகவல்களுக்கு பாதுகாப்பு உண்டு.

 மைக்ரோசாஃப்ட்டின் புதிய சி.இ.ஓ

இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, உலகின் மிகப் பெரும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேகக் கணினிய தொழில்நுட்பத்தில் சத்யா நாதெள்ளாவுக்கு இருக்கும் அனுபவம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வழிநடத்திச் செல்ல அவருக்கு உதவிகரமாக இருக்கும் என அதன் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாதெள்ளா, நிறுவனத்தின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கு இடையூறாக எந்தத் தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

பில்கேட்ஸ் வகித்து வந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, கடந்த 2000-மாவது ஆண்டு, ஸ்டீவ் பால்மர் தேர்வானார். அதன் பின்னர் சுமார் 13 ஆண்டுகள் கழித்து, மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சத்யா நாதெள்ளாவுக்கு தற்போது 46 வயதாகிறது.

இவர் தனது இளங்கலை படிப்பான எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கை மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மாஸ்டர் டிகிரியை (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. மாஸ்டர் டிகிரியை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.

கூகுள் கிளாஸ்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணன் கேட்டதைக் கொடுக்க வல்லவன்; கூகுள் கிளாஸ் கேட்டதை மட்டுமில்லாமல் கேட்காததையும் சேர்த்தே சேகரித்துக் கொடுக்கவல்லது. இன்றைய தொழில்நுட்பத்தின் நாயகனே கூகுள் கிளாஸ் தான்.

கூகுள் கிளாஸ் – தொழில்நுட்ப உலகில் இன்று பரபரப்பாக பேசப்படும் கண்ணாடி. இது ஒரு கம்ப்யூட்டர் மூக்குக் கண்ணாடி. புளூடூத் கருவியை விட பெரியதாகும். குழந்தைகள் கலர் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பதைப் போல இருக்கும்.

இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடியதாகவும், மனதால் நினைப்பதைக் கூட செயல்படுத்தக் கூடியதாகவும் உள்ளது கூகுள் கிளாஸ்.

கூலிங் கிளாஸ் அணிந்து கொள்வதைப் போல, கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டால், நம் கண்கள் எதையெல்லாம் நோக்குகின்றனவோ, அவற்றையெல்லாம் கூகுள் கிளாஸின் காமிரா நோக்கும்.

உதாரணத்துக்கு தெருவில் நாம் நடந்து செல்லும் போது, நம்முன் செல்லுகின்ற மனிதர்கள், கடந்து செல்கின்ற பஸ், ஸ்கூட்டர், கார் போன்றவற்றை ஸ்கேன் செய்து அவற்றின் தகவல்களை எல்லாம் திரட்டி நமக்கு அளிக்க முற்படும். இதன் பெரிய சிக்கலே, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பற்றியும் தகவல்களை தொடர்ந்து சேகரித்து, பதிவு செய்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் சேகரிக்கப்படும் தகவல்கள் கூகுளில் பதிவாகும். இதை நம்மால் ஜீரணிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி தான்.

நாம் ஏ.டி.எம் மற்றும் நெட்பேங்குகளில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்யும் போது கவனக் குறைவாக கூகுள் கிளாஸை எடுக்காமல் போட்டுக் கொண்டே இருந்து விட்டால், நம் பாஸ்வேர்ட் பதிவாகிவிடும் பேராப்பது உண்டு.

மேலும் கூகுள் கிளாஸை அணிந்து கொள்ளும் போது பார்வைக்கு பாதிப்பில்லாமல் இருக்குமா என்பது அது பரவலாக பயன்பாட்டுக்கு வரும் போது தான் தெரியும்.

ஆக, சைபர் உலகில் இனி நமக்கென்று எந்த ரகசியமும், ஒளிவு மறைவும், அந்தரங்கமும் இருக்காது; எங்கேயும், எப்போதும் நம்  செயல்களை உலகம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கும் பேரபாயம்  உண்டாகி விடுவது சர்வ நிச்சயம். நாம் கூகுள் கிளாஸ் அணியாவிட்டாலும், நம் அருகில் இருப்பவர் அதை அணிந்திருந்தாலும் கூட நம்மைப் பற்றிய தகவல்கள் பதிவாகிக் கொண்டே வருவது உறுதி.

சைபர் வேர்ல்டில் பாதுகாப்புக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் கூகுள் கிளாஸ் ஒருவித புது அச்சத்தை கொண்டு வந்துள்ளது. முன்னை விட இன்னும் அதிகமாக பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத் தேவையில் இருக்கிறோம்.

மூன்றாவது கண் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்ற ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்  சூழலில், நம் கண்ணே நம்மைப் பற்றிய தகவல்களை பதிவாக்கி உலகிற்கு அம்பலப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

கூகுள் கிளாஸ் நினைவுத் திறனைக் குறைத்து விடும் என்ற ஒரு அச்சமும் எழுப்பப்படுகிறது. ஏனெனில், யோசிப்பது, ப்ளான் செய்வது, மழையாக இருக்கே குடை அல்லது மழைகோட் எடுத்துச் செல்ல வேண்டுமா, இன்று அந்த இடத்தில் டிராஃபிக் எப்படி இருக்கும் இதுபோன்று எந்த ஒரு விஷயத்தையும் நம் மூளை செய்ய வேண்டியதில்லை. அதன் செயல்பாட்டை எல்லாம் கூகுள் கிளாஸ் எடுத்துக் கொண்டு விடுவதால் மனித மூளைச் செயல்பாடு குறைந்து போவதை யாராலும் மறுக்க இயலாது.  ஏனெனில் எதையுமே மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறதல்லவா? மேலும் மனைவி/கணவனின் பிறந்த நாள், விருப்பமானவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து இப்படி எதையுமே உணர்வுப் பூர்வமாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போகிறதல்லவா? எல்லாவற்றையுமே கூகுள் கிளாஸ் நமக்கு எடுத்துச் சொல்லி விடுகிறது. இது மனிதனின் செயல்பாட்டை குறைக்கவல்லது என்பதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை.

கடந்து வந்த நம் தொழில்நுட்பப் பாதையை சற்றே திரும்பிப் பார்த்தால், இந்த வலுகட்டாய வளர்ச்சி வியக்க வைக்கிறது.

வலுக்கட்டாய தொழில்நுட்ப வளர்ச்சி, விஸ்வரூப மறுமலர்ச்சி!

ONE DRIVE – SKY DRIVE

PDF EDIT

Sending BIG FILE

Remote Accessing Computer

Macro

Mail Merge

Google Search

 வாட்ஸ்-அப்

இன்று உலகமெங்கும் வாட்ஸ்-அப் மொபைல் அப்ளிகேஷன் மூலம் உலகெங்கிலும் உள்ளவர்களுடன் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை எளிதாகக் குறைந்த கட்டணத்தில் அனுப்பி பயனடைந்து வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தால் 19 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாகியுள்ள ஜான் கூமின் கடந்த கால வாழ்க்கை போராட்டம் நிறைந்தது.

சோவியத் யூனியன் உடைநத பிறகு உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான போலீஸாரின் அடக்கு முறையில் இருந்து தப்பித்து தாயுடம் அமெரிக்காவில் குடியேறிய ஜான் கூம் ஒரு வேளை சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. சாப்பாட்டிற்காக பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். பழைய புத்தகக் கடையில் இருந்து கம்ப்யூட்டர் புத்தகங்களை வாங்கிப் படித்தார். பிறகு ஒரு மளிகைக் கடையில் தரையை சுத்தம் செய்கின்ற பணியை செய்தவாறே கல்லூரிப் படிப்பை முடித்தார். இதற்கிடையில் அவரது தாய்க்கு புற்று நோய் பாதித்தது.

கல்லூரிப் படிப்பை முடித்த பின் சிலிகான் வேலியில் உள்ள ஒரு பாதுக்காப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரையன் ஆக்டன் நண்பரானார்.

ஜான் கூமின் தாய் இறந்த பிறகு ஆக்டன் ஆதரவளித்தார். இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 2007-ல் யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும் வாட்ஸ்-அப் அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.

இந்த தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. எந்த இடத்தில் தன் தாயுடன் ஒருவேளை சாப்பாட்டிற்காக கையேந்தி வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

16 வயதில் இருந்து போராடத் தொடங்கிய ஜான்கூம் தன் 38 வயதில் கோடீஸ்வராகி சாதித்துள்ளார்.

Telegram APPS

வாட்ஸ் அப் போலவே இப்போது Telegram APPS வந்துள்ளது. வாட்ஸ் அப்பை விட இந்த அப்ளிகேஷனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

காரணம் மொபைலில் மட்டுமில்லாமல் கம்ப்யூட்டரிலும் இந்த அப்பிளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப்பை விட வேகமாக சாட் செய்ய இதில் வசதிகள் உள்ளன.

குரூப்  உருவாக்கி 200 நபர்கள் வரை சாட் செய்ய முடியும்.

மேலும் சீக்ரெட் மெசேஜ் அனுப்பலாம் வேணும்கிறவங்களுக்கு. நீங்க ஒருத்தருக்கு பர்ஸனலா மெசேஜ் அனுப்புனும்னா என்கிரிப்ட் முறையில் அனுப்பலாம்.அதை வேறு யாரும் பார்க்க முடியாது.

அது போக நீங்க ஒருவருக்கு அனுப்பின மெசேஜை நம் மொபைலில்  இருந்தே அழிக்கலாம். இதுபோல இன்னும் பல விஷயங்கள் இருக்குனு சொல்கிறார்கள்.

வைபர் அப்ஸ்

இலவச அழைப்புகளை மேற்கொள்ளவும், சாட் செய்யவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் வைபர் அப்ஸ் உதவுகிறது. மேலும் High Definition Quality Audio – உயர்தரத்திலான ஒலியையும் உணர முடிகிறது. இதற்குத் தேவை இண்டர்நெட் தொடர்பு மட்டுமே. இச்சேவை முற்றிலும் இலவசம். இதனை கம்ப்யூட்டரிலும் பதிவாக்கிக் கொண்டு செயல்படுத்த முடியும்.

 

பார்வையற்றவர் வீணை மற்றும் பாடல் பாடுவதில் சாதனை

‘என்னமோ ஏதோ’ படத்திற்காக டி.இமான் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் பாடியுள்ளார். கண்பார்வை அற்றவரான இவர் காயத்ரி வீணை மீட்டுவதிலும் வல்லவர்.

 

 

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

 

மீடியா செய்திகள்

 

(Visited 203 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari