இங்கிதம் பழகுவோம்[12] பொதுவான மதிப்பீடுகள் வேண்டாமே! (https://dhinasari.com)

இன்று சென்னை பல்கலைக்கழகம் வரை ஒரு பிராஜெக்ட்டுக்காகச் செல்ல வேண்டியதாக இருந்தது. பிராஜெக்ட் குறித்து சில விஷயங்கள் யோசிக்க வேண்டியிருந்ததால் என் காரை எடுப்பதற்கு பதிலாக ஓலா புக் செய்தேன்.

பல்கலைக்கழகம் செல்லும்போது பீக் அவர், டிராஃபிக், மழைத் தூரல் எல்லாம் சேர்த்து வேளச்சேரியில் இருந்து அங்கு சென்றடைய 1-1/2 மணி நேரம் ஆனது. நான் நினைத்ததைப் போல பிராஜெக்ட் குறித்து யோசிக்கவும் ஒருசிலரிடம் போனில் அது குறித்து பேசவும் நிறைய நேரம் கிடைத்து.

டிஸ்கஷன் முடிந்து திரும்பும்போது திரும்பவும் ஓலா. டிரைவரிடம் கால்டாக்ஸி டிரைவர்கள் நிலை குறித்து பேசியபடி வந்தேன்.

‘நாள் ஒன்றுக்கு 16 மணிநேரம் ஓட்டினால்தான் வண்டி டியூ கட்டவும், டீசல் போட்ட மீதமும் போக மாதம் வீட்டுச் செலவுக்கு சரியாக இருக்கும். இதில்தான் 2 மகன்களை பள்ளியில் படிக்க வைக்கணும், கூட இருக்கும் அம்மா அப்பாவை கவனிச்சுக்கணும், மனைவியை அவ்வப்பொழுது எங்காவது வெளியில் அழைத்துச் சென்று அவளையும் சந்தோஷமா வச்சுக்கணும்… சரியான நேரத்துக்கு தூக்கம், வயிற்றுக்குச் சத்தான சாப்பாடு என்பதை மறந்தே வருடக் கணக்காகிறது… முதுகுத் தண்டு சுருக் சுருக்கென குத்துகிறது….அத வேற டாக்டர்கிட்ட காமிக்கணும்…’ என மூச்சு முட்டப் சொல்லிக்கொண்டே வந்தார்.

மனதுக்குள் பரிதாபம்.

வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ம்’ கொட்டியபடி வந்தேன்.

அதற்குள் ஆஃபீஸ் வந்துவிட ‘எல்லாம் சரியாயிடும்… வேறு வேலை பாருங்க… ஏதேனும் ஒரு நிறுவனத்துல அவங்க ஸ்டாஃப்களுக்கு ஆஃபீஸ் டைம்ல 10-7 இப்படி நிரந்த நேர வண்டி ஓட்ட வேலை தேடுங்க… மனைவி டிகிரி படிச்சிருக்காங்கன்னு சொன்னீங்கல்ல… அவங்களயும் ஏதேனும் நல்ல வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்க…’

என்று என் யோசனையில் சிலவற்றைச் சொல்லிவிட்டு பணம் கொடுத்துவிட்டு ‘ரொம்ப நல்லா வண்டி ஓட்டினீங்க…’ என மனதார பாராட்டினேன்.

டிரைவர் முகம் முழுக்க சந்தோஷம்.

‘வண்டி நல்லா ஓட்டத் தெரிஞ்சவங்க இப்படி மனதாரப் பாராட்ட மாட்டாங்கம்மா… பணம் கொடுத்துட்டு முகத்தைக் கூட பார்க்காம இறங்கி ஓடிடுவாங்க… அவங்க அவசரம் அவங்களுக்கு…’ என திரும்பவும் பச்சாதாபக் குரலில் ஏதோ சொல்ல எனக்கு இந்த முறை பரிதாபம் ஏற்படவில்லை.

மாறாக…

இவர் எப்படி எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது…. என நினைக்கலாம்… பெண்கள் புல்லட்டும், மெட்ரோ ரயிலும் ஓட்டுகின்ற இந்த நாளில் விண்வெளிக்கே பறக்கின்ற புதுயுகத்தில் எப்படி ஒருவரை இப்படி குறைவாக எடைபோடலாம் என்ற கோபமே வந்தது.

‘நான் 45 வருடமா சைக்கிள் ஓட்டறேன். 25 வருடமா பைக் ஓட்டறேன். 20 வருடமா கார் ஓட்டறேன். பெரும்பாலும் எங்கு சென்றாலும் செல்ஃப் டிரைவ்தான். அவசரம் என்றால் மட்டுமே கால் டாக்ஸி.

சென்னை டிராஃபிக்கில் பைக்கும் காரும் ஓட்டுபவர்கள் உலகில் எங்கு சென்றாலும் ஓட்ட முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்… எந்த அளவுக்கு வேகமாக வண்டி ஓட்டுவேனோ அந்த அளவுக்கு பாதுகாப்பாகவும் வண்டி ஓட்டுவேன்…

நான் உங்களைப் பாராட்டியது உண்மையில் உங்களை என்கரேஜ் செய்யவே. நீங்களும் வேகமாக அதே சமயம் கன்ட்ரோலுடன் காரை நன்றாகவே ஓட்டினீர்கள்…

உங்களைப் பாராட்டிய என்னை குறைவாக எடைபோட்டு விட்டீர்களே… பெண்கள் இன்று விண்வெளிக்கே செல்கிறார்கள்… புல்லட்டில் பறக்கிறார்கள், மெட்ரோ ட்ரையினை தைரியமாக இயக்குகிறார்கள். பெண் பைலட்டுகள்கூட இருக்கிறார்கள்…’ என  புரியும்படி எடுத்துச் சொன்னேன்.

‘சாரி மேடம்… என்னை இதுவரை யாருமே பாராட்டியதில்லை…. அதனால் என் டிரைவிங் குறித்து எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு… நீங்கள் பாராட்டியதால் உங்களுக்கு வண்டி ஓட்டத்தெரியாதோ என நினைத்து…’ என தலையை சொரிந்துகொண்டே குற்ற உணர்ச்சியில் வார்த்தைகளை முடிக்காமல் இழுத்தார்.

இவருக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை என நினைப்பவர்கள் அந்த இடத்தில்தான் தவறுகிறார்கள்.

அதாவது மனதளவில் இப்படி எண்ணுபவர்களை அவ்வப்பொழுது சரி செய்யாமல் விடுவதால்தான் அடுத்தவர்கள் குறித்த மதிப்பீடுகளை அவரவர்கள் அவரவர்கள் களத்தில் அப்படியே தொடர்கிறார்கள்.

இப்படி சொல்லிப் புரியவைத்தால் மட்டும் மாறிவிடப் போகிறார்களா என கேட்க வேண்டாம்… முற்றிலும் மாறவில்லை என்றாலும் அடுத்தமுறை மற்றவர்களை எடைபோடும் முன்னர் கொஞ்சமாவது யோசிப்பார்கள். அதற்கு அடுத்த முறை எடைபோடும் முன் இன்னும் கொஞ்சம் தயங்குவார்கள். இப்படி படிப்படியான மாற்றம் நிகழும் அவர்களுக்குள்.

இப்படி யோசிப்பும், தயக்கமும் அவர்களுக்குள் ஏற்பட யாரேனும் ஒருவர் நிதர்சனத்தைப் புரிய வைக்க வேண்டும்.

அந்த வேலையைத்தான் நான் செய்தேன். இது எனக்காக மட்டும் அல்ல. நம் எல்லோருக்காகவும் நான் எடுத்த முயற்சி.

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்தானே?

பெரும்பாலும் பிறரை குறைவாக, அல்லது மிகையாக மதிப்பிடுவது அனைவருக்கும் வழக்கமாக இருக்கிறது. சரியாக மதிப்பிட தெரியாவிட்டால், யாரையும் எடை போடாமல் பழகும் பழக்கமாவது இருக்க வேண்டும்.

எங்கு சென்றாலும் யாரேனும் ஒருவருக்கு பாடம் எடுப்பதே எனக்கு வேலையாகி விட்டதோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியாமல் ஆஃபீஸுக்குள் நுழைந்தேன்…

சர்வர் பிரச்சனை…. லாஜிக் எங்கோ மிஸ்ஸிங்… கோடிங் கம்பைல் ஆகவில்லை… டிஸைன் ஃபைனல் செய்யணும் என ஆளுக்கொரு வேலையாக என்னிடம் நீட்ட இன்றைய பொழுது பிசியானது.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 25, 2018

தினசரி டாட் காமில்  லிங்க்…https://dhinasari.com/?p=65253  

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் டிசம்பர் 25, 2018  

 

(Visited 90 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon