அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்!

‘சென்னை சுயாதீன திரைப்பட விழா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தினமலர் புகைப்பட ஜர்னலிஸ்ட் திரு. எல். முருகராஜ் பதிவைப் படித்தேன்… அதில் கடைசி பகுதி மட்டும் இங்கு உங்கள் பார்வைக்கு….

//‛சார் மீடியாவில் இருந்து வரார் உள்ளே கூட்டிட்டு போய் ஓரமா நிற்க வை’ என்றார் ஒருவர், உள்ளே காலி நாற்காலி இருக்கிறதே என்றபோது அது ‛விருந்தினர்களுக்கு’ என்றனர்.

யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்கு சிந்தனையில்லாமல், இன்னமும் இதர வர்த்தக விழாக்களில் நடைபெறுவது போல தெரிந்தவர், புகழ்பெற்றவர், இருக்கப்பெற்றவர் என்ற வித்தியாசம் பார்த்து உட்காரவைப்பதை இந்த விழாவில் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை, நின்று கொண்டு பார்க்க சுயகவுரவம் இடம் தராததால் சுயாதீன படம் ஒன்றை பார்க்காமலே திரும்பினேன்.//

இதைப் படித்தபோது ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு என் அப்பா அம்மா பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளைத் துவங்கி அதில் நான் தயாரித்திருந்த 1-1/2 மணிநேர ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தை  ஒளிபரப்ப சென்னை வாணிமஹாலில் ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட அது ஒரு சினிமாவேதான்.

இந்த நிகழ்ச்சியை சர்ப்ரைஸ் நிகழ்ச்சியாக அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்திருந்தேன். ஆவணப்படம் எடுத்ததோ,  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ ஆரம்பிக்க இருப்பதோ எதுவுமே தெரியாது. சர்ப்ரைஸ். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை முழுசா ரசிக்க… http://compcarebhuvaneswari.com/?p=386

இதெல்லாம் இங்கு முக்கியமல்ல.

அந்த ஹாலில் டீ காபிக்குகூட அனுமதி இல்லை. எனவே பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

நிகழ்ச்சி 3 மணிநேரம் ஆதலால் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமாவது டீ காபி கொடுக்க அனுமதி பெற்று
ஏற்பாடு செய்திருந்தேன்.

இது என் பெற்றோருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.

‘இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்திருக்கும் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்.  டீ காபி கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் யாருக்குமே கொடுக்கக் கூடாது’ என்று சொன்னதோடு  ஹால் மேனேஜரை சந்தித்துப் பேசி ஹாலுக்கு வெளியே சிறப்புவிருந்தினர்கள் உட்பட அனைவரும் சாப்பிட அனுமதி பெற்று, வந்திருந்த 100 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் ‘சிறப்பு விருந்தினர்கள்’ என்ற தகுதிக்கு உயர்த்தினார் என் அப்பா.

அன்றில் இருந்து நான் ஏற்பாடு செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒரு மரியாதை, பார்வையாளர்களுக்கு ஒரு மரியாதை என்றில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற அத்தனை பேருக்கும் ஒரே விதமான மரியாதை என்ற வழக்கத்தை உண்டாக்கினேன்.

இன்னும் சொல்லப்போனால் நிகழ்ச்சி நடக்கின்ற ஹாலில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மரியாதையே.

என்னைப் பொருத்தவரை பேச்சாளர்களாகக் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களாவது ஒருவித கமிட்மெண்ட்டுடன் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். பார்வையாளர்கள்தான் உண்மையில் ‘மெகா’ சிறப்பு விருந்தினர்கள். காரணம் அவர்கள் இல்லை என்றால் நிகழ்ச்சியை யாருக்காக நடத்தப் போகிறோம்? யாருக்காக பேசப் போகிறோம்?

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

பிப்ரவரி 9, 2019

குறிப்பு:

நேற்று நான் எழுதிய  இந்தப்  பதிவுக்கு கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்கள்  ‘சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்’ குறித்து இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது. எனவே அதற்காக தனியாகவே ஒரு பதிவை எழுதி உள்ளேன். லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=3570

 

 

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon