#USA: வெற்றி என்பது On Going Process! (ஜூன் 25, 2025)

வெற்றி என்பது On Going Process!

அமெரிக்கப் பயணம் குறித்து அன்பர்கள் சிலரின் கேள்விகளுக்கு பதில்கள்:

1. உங்கள் அமெரிக்கப் பயணத்தை கொண்டாடி மகிழ்ந்தீர்களா?

நான் அமெரிக்கா செல்வது இது முதல் முறையல்ல.
அடிக்கடி சென்று வருவதுதான். நம் நாட்டில் பெங்களூரிலும், டெல்லியிலும், மும்பையிலும், தஞ்சையிலும், திருச்சியிலும், கும்பகோணத்திலும், மதுரையிலும், திருநெல்வேலியிலும் உங்கள் உறவினர்கள், உடன்பிறந்தோர் இருந்தால் எப்படி விசேஷங்களுக்கு அங்கு சென்று வருவீர்களோ அதுபோலவே என் உடன்பிறந்தோர் அங்கிருப்பதால் சென்று வருகிறேன். விசேஷங்களுக்கு மட்டுமில்லாமல், எப்போதெல்லாம் அமெரிக்கா சென்றாலும் என் பிசினஸ் சார்ந்தும் பல விஷயங்களை, ப்ராஜெக்ட்டுகளை முன்னெடுத்துச் செல்வேன்.

நீங்கள் குறிப்பிடும் கொண்டாட்டம் என்றால் உடன் பிறந்தோரின் குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பதை சொல்லலாம். அங்கு அப்பாவும் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காரணம் தங்கள் எல்லா குழந்தைகளுடனும், பேரன் பேத்திகளுடனும் இருப்பதால்.

2. இந்த முறை ஏதேனும் ப்ராஜெக்ட் எடுத்துச் சென்றீர்களா?

ஆம். அமெரிக்க தமிழ்ப் பள்ளிகளில் Ai தொழில்நுட்பத்தில் அறம் வளர்ப்போம் என்று நான் உருவாக்கியப் படைப்பை அறிமுகம் செய்ய முயற்சித்தேன்.

அதுபோல அங்கு மாதாமாதாம் திருவாசகம் முற்றோதல் நடைபெறும். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

வயது வித்தியாசம் இன்றி பேசத் தெரிந்த சிறுவர் சிறுமியர் முதல் வயதில் மூத்தவர்கள் வரை ஒன்று கூடி 5 மணி நேரத்தில் 51 பதிகத்தையும் 658 பாடல்களையும் பாடுவார்கள். அங்கு Ai தொழில் நுட்பத்தில் உருவாக்கி உள்ள எங்கள் நிறுவன தயாரிப்பான Ai ல் திருவாகத்தை அறிமுகம் செய்ய முயற்சித்தேன்.

இது மட்டுமல்ல அனுஷம் பூஜை, ஐயப்பன் பூஜை என பூஜைகள் என இங்குள்ள இந்தியக் கோயில்களில் நடந்தவண்ணம் இருக்கும்.

சினிமாவில் காண்பிப்பதைப் போல் யாரும் காலையில் காபிக்கு பதில் ஒயின் எல்லாம் சாப்பிடுவதில்லை. எல்லா நேரமும் குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும், பப்களில் ஆடிக் கொண்டும் இருப்பதில்லை.

நம்மைப் போலவே பாசத்துடனும் நேசத்துடனும் தான் அவர்கள் குழந்தைகளையும் வளர்க்கிறார்கள். பார்த்துக் கொள்கிறார்கள்.

3. உங்கள் ப்ராஜெக்ட்டுகள் அங்கு வெற்றி பெற்றனவா?

என்னைப் பொறுத்த வரை ப்ராஜெக்ட்டுகள் என்பது என் (எங்கள் காம்கேரின்) உழைப்பு. வெற்றி என்பது On Going Process. வெற்றியா தோல்வியா என்பதல்ல.

வியாபார நோக்கம் மட்டும் என்றால் வெற்றியா தோல்வியா என்பதை பணம் கிடைப்பதை வைத்து சொல்லிவிடலாம். தற்சமயம் நான் முன்னெடுப்பது Ai தொழில்நுட்பத்தில் நம் நாட்டு இலக்கியங்களை கொண்டு செல்வது.

4. இவ்வளவு திறமைசாலியான நீங்கள் (!!!) ஏன் அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை?

அமெரிக்காவில் செட்டில் ஆக நினைத்திருந்தால் 30 வருடங்களுக்கு முன்னரே செய்திருக்கலாம். என் நோக்கமும் கனவும் அதுவல்ல.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் அடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, வேலை வாய்ப்பெல்லாம் இல்லாத காலத்திலேயே, என் பெற்றோர் என்னையும் என் உடன்பிறந்த சகோதரியையும், சகோதரனையும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படிக்க வைத்தனர். நிச்சயமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல. கல்வியை சொத்தாக எங்களுக்குக் கொடுத்தார்கள். நாங்களும் பொக்கிஷமாக பற்றிக் கொண்டோம்.

அந்த நாட்களில், அமெரிக்காவில் நம் நாட்டு இளைஞர்களை குறிப்பாக கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படித்தவர்களை சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்தனர். என் உடன்பிறந்தோர் அங்கு ஐடி துறையில் பணிக்குச் சென்றனர். தற்சமயம் உயர்பதவியில் உள்ளனர்.

நான் அப்போது இந்தியாவில் சென்னையில் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி இருந்தேன். நம் நாட்டுக்குத் தேவையான ப்ராஜெக்ட்டுகளை மட்டுமே செய்வது, அவற்றை உலகம் முழுவதும் கொண்டு செல்வது, அது சார்ந்து உலக நாடுகளுக்குப் பயணங்கள் செல்வது என்பதுதான் என் கனவு, நோக்கம், திட்டம் எல்லாமே.

அதனால், அமெரிக்கா மட்டுமில்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளில் ஐடிதுறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு வரும்போதெல்லாம் அந்த வாய்ப்புகளை பிசினஸ் (காம்கேர் சாஃப்ட்வேர்) சார்ந்து பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. அங்கு எங்கள் காம்கேர் நிறுவன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதும் அதன் வாயிலாக நம் நாட்டின் பெருமைகளை தூவிவிட்டு வருவது உண்டு.

பயணங்கள் என்பது தேர்ந்தெடுத்து செல்வதுதான், வருகின்ற அத்தனையையும் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. காரணம் நிறுவனப் பொறுப்பும், ஆராய்ச்சிப் பணிகளும்.

5. நீங்கள் இல்லாதபோது நிறுவனம் எப்படி நடைபெறும்?

1992-ல் நிறுவனம் தொடங்கினேன். 1996-லேயே Work From Home அறிமுகப்படுத்தினேன். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர்களில் விலையும் மிக அதிகம். நாங்களே அசம்பிள் செய்த கம்ப்யூட்டர்களை நான் பயிற்சி கொடுத்த பணியாளர்கள் வீட்டில் கொண்டு வைத்து பணிகளை முடிக்கச் செய்வேன்.

காரணம், அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் படித்தவர்களே மிகக் குறைவு. அதிலும் பெண்கள் மிகக் குறைவு. பெண்களை மட்டுமே வைத்து நிறுவனம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சில வருடங்கள் முயற்சித்தேன்.

அந்த நாட்களில் வெறும் டிகிரி படித்தவர்களை பணிக்கு எடுத்து கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் பயிற்சி கொடுக்க வேண்டி இருந்தது. அப்படி பயிற்சி கொடுத்து முடித்த சில மாதங்களிலேயே அவர்கள் வீட்டில் பிரச்சனை, திருமணம் அதுஇது என ஆயிரம் காரணங்களால் வேலைக்கு வராமல் நின்று விடுவார்கள். நாங்கள் பயிற்சி கொடுத்ததும் வீண், வேலைக்கு திரும்பவும் ஆட்களை எடுத்து வேலைகளை முடிப்பதும் சிரமம் என்பதால் நாங்களே அசம்பிள் செய்த கம்ப்யூட்டர்களை பணியாளர்கள் வீட்டில் கொண்டு வைத்து பணிகளை முடிக்கச் செய்வேன். இப்படியாக உலகிலேயே Work From home முயற்சியை மேற்கொண்டது நானும் எங்கள் காம்கேர் நிறுவனமுமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் 1992-களில் நம் நாட்டில் ஐடி நிறுவனங்களே மிகக் குறைவு. இந்தியாவில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் பொறியாளர் என்ற அங்கீகாரம் பெற்றிருக்கிறேன்.

கொரோனாவிற்குப் பிறகுதானே நம் நாட்டில் Work From Home பிரபலமாயிற்று. அதற்கு முன்பு Work From Home என்று நான் சொன்னால் ஏதோ வீட்டிலேயே சிறு தொழில் செய்கிறேன் என்று பலரும் நினைத்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். சிரமத்துடன் கோபத்தை அடக்கிக் கொண்டு பதில் அளித்து புரிய வைத்திருக்கிறேன்.

தொழில்நுட்பம் அதிகம் வளராத அந்த நாட்களிலேயே Work from Home எல்லாம் செய்திருக்கும்போது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்நாளில் ஆன்லைனிலேயே உலகத்தையே சுற்றி வந்துவிடக் கூடிய அளவில் வாய்ப்புகளும் வசதிகளும் இருப்பதால் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிறுவனம் மிக நன்றாக தொய்வில்லாமல் நடந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் என்ன, இரவு பகல் இல்லாமல் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என் கவனம் எங்கள் காம்கேரில் மீது இருந்துகொண்டே இருக்கும். காம்கேர் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து கனவிலும் காம்கேர் சம்மந்தப்பட்ட விஷயங்கள்தான் ஓடிக் கொண்டிருக்கும் என்பதால் எதுவும் கடினம் அல்ல எனக்கு.

அமெரிக்காவில் திரு. எலான் மாஸ்க்கும், திரு. சுந்தர் பிச்சையும், இந்தியாவில் திரு. நாராயண மூர்த்தியும் பிசினஸ் சம்மந்தமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டா செல்கிறார்கள்?

6. நேற்று நீங்கள் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்போது கிடைத்த விமான பயண அனுபவத்துக்கு ஜோதிட வீடியோவில் என்ன ராசி என்பதை அடித்துவிட்டுப் பகிர்ந்திருந்தீர்களே. காரணம் என்ன?

எந்த காரணமும் இல்லை. அந்த வீடியோ தலைப்பு, நடந்து முடிந்த விமான விபத்து ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பொருத்தமாக இருந்ததுடன், நான் பிரயாணம் செய்யும் அதே நாளை மிகச் சரியாக சொல்லி இருந்ததால் சுவாரஸ்யத்துக்காக அந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பயன்படுத்தினேன்.

மற்றபடி ஜோதிடத்தை குறை சொல்லவோ, கிண்டல் செய்யவோ பயன்படுத்தவில்லை.

ஏனெனில் நாங்கள் ஜோதிட சாஃப்ட்வேர் தயாரித்திருக்கிறோம் (1996 களிலேயே). என் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என அனைவருமே ஜோதிடப் புலமை பெற்றவர்கள். எனவே ஜோதிடத்தை குறைவாக எடை போடவில்லை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூன் 25, 2025

(Visited 25,892 times, 4 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon