முகநூலில் நேற்று நான் எழுதிய ‘அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்’ என்ற பதிவுக்கு கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
உங்கள் கருத்துக்கள் ‘சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்’ குறித்து இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது.
இந்த பதிவில் முதலாவதாகப் பேசப்பட்ட நிகழ்வில் உட்கார சீட் காலியாக இருந்தும் ‘அது விருந்தினர்களுக்கானது’ என்று சொல்லி நிற்கச் சொல்லியமை குறித்த செயல்பாடு.
அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது முற்றிலும் தவறு.
இரண்டாவதாக என் அனுபத்தைச் சொல்லி இருந்தேன். அது குறித்து…
நானும் நிறைய மேடைகளில் பார்த்திருக்கிறேன். டீ, காபி, ஸ்நேக்ஸ் என மேடையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் அளிப்பார்கள். மைக்கில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும் டீ, காபி அவர் பேசி முடித்து வந்து அமர்வதற்குள் ஆறி ஆடை படிந்திருக்கும்.
மேலும் பார்வையாளர்களுக்கு முன்பு மேடையில் உட்கார்ந்திருப்பவர்கள் மட்டும் சாப்பிடுவதும் என்னைப் பொறுத்த வரை சங்கடமே. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘எனக்கு’.
சில நிகழ்ச்சிகள் இரவு 9 மணிவரை கூடச் செல்லும். அதுபோன்ற சூழலில் பார்வையாளர்களும் உட்காரத்தான் வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் டீ, காபி, பாலாவது அளிக்கலாம் என்பதுதான் என் கருத்து.
மேலும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பேமெண்ட் செய்தும் அழைக்கிறார்கள். பிரபலங்களைப் பொருத்து அதற்கேற்றாற்போல் பேமெண்ட் உண்டு. (இதில் விதி விலக்குகள் இருக்கலாம்.)
ஏனெனில் மேடையில் சிறப்புரை நிகழ்த்த வரும் பிரபலங்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி வருவதாலும் அவர்களின் பிரபல முகாந்திரத்துக்காகவும் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு வேலையே. அதை நாம் குறை சொல்ல முடியாது.
அதற்கு செலவு செய்யும் தொகையில் கொஞ்சம் செலவழித்து பார்வையாளர்களுக்காகவும் செலவு செய்யலாம் என்பது என் கருத்து. இந்த இடத்தில் நான் சொல்ல வருவது… ‘மனம் இருந்தால்போதும். நம் நிலைக்கு ஏற்ப எதையும் சாத்தியமாக்கலாம்’. மனமிருந்தால் மார்க்கமுண்டு. அவ்வளவுதான்.
இது நாம் ஏற்பாடு செய்கின்ற விழா பார்வையாளர்களின் கூட்டம் இவற்றைப் பொருத்து நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
பெருங்கூட்டங்களில் இது சாத்தியமில்லைதான்.
ஆனால் நான் என் நிறுவனத்தில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் அதை இம்ப்ளிமெண்ட் செய்கிறேன். அவ்வளவுதான்.
இதற்கு மனம் இருந்தால் போதும். நிகழ்ச்சிகளில் நம் ஆசைகளுக்காக, பெருமைக்காக சில விஷயங்களை செய்ய ஒதுக்கி இருக்கும் பணத்தை கொஞ்சம் ப்ளேன் செய்து மேனேஜ் செய்தால்போதும். உபரியாக செலவழிக்க வேண்டியத் தேவையே இல்லை. பார்வையாளர்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினராக்கலாம்.
அப்படி செய்ய முடியவில்லை என்றால் பார்வையாளர்கள் முன் சிறப்பு விருந்தினர்களுக்கு உணவு விஷயங்களில் மேடையில் உபசரிப்பதைத் தவிர்க்கலாம். தனியே அதற்கு ஏற்பாடு செய்யலாம். சில இடங்களில் அப்படித்தான் செய்து வருகிறார்கள். என்னுடைய கருத்து அதுதான்.
சேவாலயா நிறுவன நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்த போது எனக்கு அவர்கள் காட்டிய உபசரிப்பை மறக்கவே முடியாது.
சிறப்பு விருந்தினர்கள் எத்தனை உயரிய பதவியில் இருந்து வந்தாலும், அவர்கள் நிறுவன குழந்தைகள் கொடுக்கும் அன்பான வரவேற்புகு தலைகுனிந்து அவர்கள் காட்டும் அன்புக்கு தலைவணங்கியே ஆக வேண்டும்.
அட்டகாசமான அணுகுமுறை!
2018-ம் ஆண்டு சேவாலயாவில் பாரதியார் விழாவில் நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்ச்சி இன்றும் மனதுக்குள் பேரானந்தமாக உள்ளது.
காரணம் அவர்கள் அணுகுமுறை.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited
பிப்ரவரி 10, 2019
குறிப்பு:
‘அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்’ என்ற நேற்றைய பதிவை தவற விட்டவர்களுக்காக இதோ லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=3561