மேடம் அப்பா மாதிரிடா…

எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் இந்த நேரத்தில், எனக்கு எத்தனையோ வாழ்த்துக்களும், விருதுகளும், கெளரவங்களும் கிடைத்திருந்தாலும், ஒரு பெண்மணியின் ‘நம்பிக்கையும், புரிதலும்’ மனதை விட்டு அகலாமல் நான் இன்றுவரை மென்மேலும் சிறப்பாக செயல்பட உதவி வருகிறது.

யார் அந்தப் பெண்மணி?

தந்தையர் தினத்துக்கான ரேமாண்ட் நிறுவனத்தின் வாழ்த்து வீடியோ ஒன்றை எதேச்சையாகப் பார்த்தேன். ஒரு நிமிட வீடியோதான். அற்புதம். விவரிக்க வார்த்தை இல்லை.

தன் சின்னஞ்சிறு மகனுடன் தனித்து வாழ்ந்துவரும் தாய் (சிங்கிள் மதர்) ஒருவர் தரையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்க, அவருடைய மகன் சோஃபாவில் பாடபுத்தகம் படித்தபடி இருப்பதாக காட்சியை தொடங்கியிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் தலையணைக்குப் பின்  மறைத்து வைத்திருந்த கிஃப்ட்டை எடுத்து அம்மாவிடம் சர்ப்ரைஸாக தள்ளிவிட்டு படிப்பதைப்போல பாவனை செய்வதாகச் செல்கிறது காட்சி. அந்தத் தாய் மகனை அன்பொழுகப் பார்த்தபடி அந்த பரிசை பிரித்துப் பார்க்க,  காபி கப்பையும், அம்மாவின் முகத்தில் பரவசத்தையும் காண்பித்து இருவரும் அன்பின் மழையில் நனைவதாக முடித்துவிட,  ‘இதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என நாம் நினைக்கின்ற மைக்ரோ நொடிப்பொழுதில் காபி கப்பில் உள்ள வாசகத்துடன் அந்த காட்சியை முடித்திருக்கிறார்கள்’.

‘World’s Best Dad’

ஒரே ஒரு நிமிட வீடியோவில் இதைவிட சிறப்பாக ஒரு அருமையான தகவலை நச்சென சொல்லிவிட முடியுமா என்ற ஆச்சர்யத்தை தவிர்க்கமுடியவில்லை. (https://www.youtube.com/watch?v=Bp4tUXc5wZo)

அப்பாவின் இடத்தையும் சேர்த்து பூர்த்தி செய்யும் ஒரு அம்மாவுக்கு இதைவிட உயர்வான ஒரு பரிசு இருக்கவே முடியாது.

இதைப் பார்த்தபோது என் வாழ்க்கையில் நடந்த ஓரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அமைப்பின் மூலம் அவ்வப்பொழுது வாழ்வியல் கருத்தரங்குகள் நடத்துவது வழக்கம். பெரும்பாலும் பள்ளி விடுமுறை தினங்களில் பள்ளி மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோர் அழைத்து வந்து சேர்ப்பது வழக்கம். அதில் ஒரு டீன் ஏஜ் மாணவன் கொஞ்சம் சேட்டை செய்ய நான் சற்றே குரலை உயர்த்த, அவன் கண் கலங்கி சற்று நேரத்தில் விசும்பி அழவே ஆரம்பித்துவிட்டான். எனக்கு கவலையாகிவிட (15 வயது பையன் அழுதால் பதட்டம் வராதா பின்னே?), உடனே அவன் அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசினேன்.

அப்போதுதான் தெரிந்தது அந்த மாணவனின் அப்பா அவன் பிறந்த சில மாதங்களில் இறந்துவிட, தாய் தனித்து வளர்த்து வருகிறார்.

நான் அந்த மாணவனை அழைக்க, அந்தத் தாய் அவனிடம் சொன்ன வார்த்தை இன்றும் என் மனதில் இருக்கிறது.

‘கண்ணா, மேடம் அப்பா மாதிரிடா… பயப்படக்கூடாது. ஏன் சொல்கிறார் என புரிந்துகொள்ள வேண்டும்.’

‘மேடம் அப்பா மாதிரிடா…’ என்பது எத்தனை உயரிய நம்பிக்கை வார்த்தை.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒன்று நம்மை மோட்டிவேட் செய்து நம்மை வழிநடத்திச் செல்லும். அது வார்த்தையாக இருக்கலாம், வாழ்த்தாக இருக்கலாம், செயல்பாடாக இருக்கலாம், நிகழ்வாக இருக்கலாம், புரிதலாக இருக்கலாம்… என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எனக்கு இந்தத் தாயின் புரிதலும், நம்பிக்கையும்!

இந்த நினைவலைகளைத் தொகுத்த இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

அக்டோபர் 1, 2017

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!