பெயர்

நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக…

‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது?  – இதுதான் கேள்வி.

‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்…

25 வருடங்களுக்கு முன்பு பத்திரிகை தர்மம் எப்படி இருந்தது என்பதற்கு ஓர் உதாரணம்.

1990-ம் ஆண்டு…

‘அம்மா பொய் சொல்கிறாள்’ –   இந்தத் தலைப்பிலான என் கதையை  ராஜம் பத்திரிகையில் பிரசுரம் செய்தவர் திருமிகு. சந்திரா ராஜசேகர். அப்போது அவர்தான் அந்த பத்திரிகையின் எடிட்டர்.

இந்தக் கதைக்கு நான் வைத்துள்ள ‘அம்மா பொய் சொல்கிறாள்’ என்ற தலைப்பு குறித்து, ‘தலைப்பு கொஞ்சம் நெருடலாக இருக்கிறதே… அம்மா பொய் சொல்வாரா… வேறு மாற்றி விடலாமா?’ என்று கேட்டு தன் கைப்பட கடிதம் எழுதி இருந்தார் அவர்.

அதற்கு நான், ‘அந்தக் கதையே சிறுமியின் பார்வையில்தான் செல்கிறது… அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை அம்மா பொய் சொல்வதாகவேபடுகிறது… எனவே மாற்ற வேண்டாம்’ என சொல்லி கடிதம் எழுதி இருந்தேன்.

அவரும் அதற்கு மதிப்பளித்து என் கதைக்கு அதே தலைப்பையே வைத்து பப்ளிஷ் செய்தார்.

ஒரு படைப்பின் தலைப்பைக் கூட மாற்றம் செய்ய அனுமதி கேட்ட காலம் அது.

என் பெரும்பாலான படைப்புகளுக்கு இதுபோல கடிதம் வரும். ‘எழுத்தாளர்களின் படைப்புகளில் மாற்றம் செய்ய எடிட்டருக்கு உரிமையுண்டு’ என்ற விதிமுறையை பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே பிரிண்ட் செய்திருந்தாலும் என் படைப்புகளில் ஏதேனும் ஒரு வார்த்தையை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும்கூட என்னிடம் பர்மிஷன் கேட்ட பிறகே மாற்றம் செய்வார்கள்.

12 வயதில் எழுதத்தொடங்கி என் 21 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் எழுதி அவற்றில் பல முன்னணி பத்திரிகைகளில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றன.

அதன் பின்னர் 21 வயதில் தொழில்நுட்பத்தை என் பணியாக எடுத்துக்கொண்டவுடன் என் கிரியேடிவிடியை தொழில்நுட்பம் பக்கம் மடைமாற்றினேன்.

‘புவனேஸ்வரியாக’ கதைகள் எழுதி வந்த நான் 1992-ம் ஆண்டு காம்கேர் நிறுவனம் தொடங்கியவுடன் என் பெற்றோரிடம் கலந்தாலோசித்து ‘காம்கேர் புவனேஸ்வரியாக’ என் பெயரை மாற்றியமைத்தேன்.

என் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக நான் பெறும் அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள், 30-க்கும் மேற்பட்ட வாழ்வியல் புத்தகங்கள், 3000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கட்டுரைகள், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஸ்க்ரிப்ட்டுகள், 200-க்கும் மேற்பட்ட அனிமேஷன் படைப்புகளுக்கான ஸ்கிரிப்ட்டுகள், 50-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகள் என எழுதி இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன்…

தவிர…

எங்கள் காம்கேர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுள் ஒரு பணியாக 2003-ஆம் ஆண்டில் இருந்து சில ஆண்டுகள் ஒரு தொழில்நுட்ப பத்திரிகைக்கு எடிட்டராகவும் இருந்திருக்கிறேன்.

இப்படியாக அந்த நேர்காணல் சென்றது…

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 9, 2019

(Visited 94 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon