வாழ்க்கையின் OTP-11 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2019)

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை.

பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம்.

முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம்.

காரணம்…

நேரடியாக அணுகும்போது பிரச்சனைக்கான காரணகர்த்தாவும், பிரச்சனையினால் பாதிக்கப்பட்டோரும் தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பார்கள். தீர்வு கிடைப்பதற்கு தாமதமாகலாம் அல்லது தீர்வே கிடைக்காமலும் போகலாம்.

இரண்டாவதாகச் சொன்ன மடைமாற்று முறையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. மதிநுட்பம் மட்டுமே மேலோங்கி இருக்கும். தீர்வு ஏதேனும் ஒரு வகையில் கிடைக்கலாம். இதுவே, சுலபமான தீர்வுக்கான OTP.

ஒரு நிமிடக் குறும்படம் பார்த்தேன். ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் அருகே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து கமெண்ட் அடித்தபடி அவள் அருகே நகர்ந்து நகர்ந்து வருகிறார்கள். அந்தப் பெண்ணும் பயந்தபடி இன்னும் தள்ளித்தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

பள்ளிச் சீருடையில் பன்னிரெண்டு, பதிமூன்று வயதில் இரண்டு சிறுவர்கள் அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கும், இளைஞர்களுக்கும் இடையே அமர்கிறார்கள். இளைஞர்களைப் பார்த்து, ‘அண்ணா, பஸ் அந்தப் பக்கம்தான் வரும்… இந்தப்பக்கம் வராது…அங்கே பாருங்கள் அண்ணா!’ என்று பெண் அமர்ந்திருக்கும் திசைக்கு எதிர்திசையில் கைகளைக் காட்டுகிறார்கள். இளைஞர்கள் சற்றே கில்டியாகி வெட்கப்பட்டு தலைகுனிந்து வேகமாக எழுந்துகொள்ளவும், பஸ் வரவும் சரியாக இருந்தது.

You no need to be a Man to Save some One. You Should be MARD (Man Against Rape and Discrimination) என்ற வாசங்களோடு அக்குறும்படம் முடிகிறது.

நம்மை நாம் செல்ஃபி எடுப்போமே!

நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு கேமிரா இருக்கிறது.

பெரும்பாலும் அந்தக் கேமிராவின் கோணம் நம்முடைய புறத்தை நோக்கியே இருக்கிறது. மற்றவர்களையே படம் பிடிக்கிறது.

‘அவர்கள் இப்படி, இவர்கள் இப்படி’ என சதா மற்றவர்களை எடைபோட்டு அதனடிப்படையில் மனிதஉறவுமுறையில் நட்பை, பந்தத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம் அல்லது முறித்துக்கொள்கிறோம்.

எப்போது நமக்குள் இருக்கும் அந்த கேமிராவின் கோணத்தை நம்மை நோக்கித் திருப்பி நம்மைப் பற்றிய செல்ஃபி எடுக்கத் தொடங்குகிறோமோ அப்போது தெளிவு பிறக்கும்.

பிறர் நம்மை ஏதேனும் ஒருவிதத்தில் காயப்படுத்தி இருப்பார்கள். அதற்கு பதிலாக திரும்பவும் நாமும் ஏதேனும் மற்றொரு விதத்தில் அவர்களைக் காயப்படுத்தி இருப்போம்.

எத்தனை பேரால் தாங்கள்(ளும்) மற்றவர்களைக் காயப்படுத்தியதை உணர முடிகிறது?

அவர் என்னை காயப்படுத்தினார் என்பதை மட்டும் மனம் திரும்பத் திரும்பச் சொல்லி மனதுக்குள் வன்மத்தைக் கூட்டியபடியே இருப்பார்கள் பெரும்பாலும்.

பிறர் நம்மைக் காயப்படுத்தியமைக்கு பதிலாக திரும்பவும் அவரைக் காயப்படுத்தாமல் ‘அவர் செய்த தவறை அவருக்கு உணர்த்த முடிந்தால்’ நம்முள் உள்ள கேமிராவின் கோணத்தை நம் பக்கம் திருப்பி நம்மால் சிறப்பாக செல்ஃபி எடுக்க முடிகிறது எனலாம்.

அப்படிச் செய்யாமல் காயப்படுத்தியவருக்கு அதைவிட பலமடங்கு வேதனையை மட்டுமே நம்மால்(லும்) கொடுக்க முடிந்தால் நாம் செல்ஃபி எடுப்பதில் ‘வீக்’ என்றுதான் பொருள்.

நம்முள் உள்ள கேமிராவை நம் பக்கம் திருப்பி நம் உள்ளுணர்வை செல்ஃபி எடுக்கப் பழகுவோம்.

இதுவே, நம் உணர்வுகள் நம்மை ஆளாமல், அந்த உணர்வுகளை கட்டுக்குள் வைத்து,  நம் உள்ளுணர்வின்படி செயல்பட இயற்கை நமக்குக்கொடுத்துள்ள OTP.

ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளிவர மன்னியுங்கள்!

மன்னிப்பதும், மறப்பதும்கூட நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியில் வருவதற்கான மிகப்பெரிய சக்தி. அப்படிச் செய்யும்போது நம்முள் அமைதியும் இறைத் தன்மையும் தானாகவே புகுந்துகொள்வதையும் உணரமுடியும்.

நம்மை யாரேனும் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றி இருந்தால் அதில் நமக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்க நம்மால் இயன்ற அளவு போரடலாம். சாதகமான முடிவு கிடைக்கவே வாய்ப்பில்லை என்றபட்சத்தில், நமக்கு அவர் ஏமாற்றியது தெரியும் என்ற அளவில் அதை அவருக்கு உணர்த்திவிட்டு மன்னித்து மறந்து அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறி விடுவதுதான் நம் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

இதுவே, விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் இன்னமும் ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் இருப்பதற்கான OTP.

சந்தோஷங்களுக்கு ‘குளோஸ் அப்’ ஷாட்!

சமீபத்தில் டிவியில் ‘அசுரவதம்’ என்ற திரைப்படம் பார்த்தேன்.

படம் முழுவதும் அதன் காட்சி அமைப்பில் எந்த திரைப்படத்திலும் இல்லாத ஓர் அணுகுமுறையை உணர்ந்தேன். லாங் ஷாட், குளோஸ் அப் ஷாட் இரண்டையும் மிக அழகாக கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் குழந்தை (10, 12 வயதிருக்கலாம்) கடைக்குச் சென்று ஏதோ பொருள் வாங்கும்போது, வெளியூரில் பணியில் இருக்கும் அவள் அப்பா மொபைலில் அழைக்க, அதில் பேசியபடி அந்தக் குழந்தை நின்றிருக்கும்போது கடைக்காரன் அந்தக் குழந்தையை சீரழிக்கிறான்.

அந்தக் காட்சியை காண்பிக்கவே இல்லை. போன் ஆனில் இருந்ததால் எதிர்முனையில் அப்பா விவரம் தெரிந்துகொண்டு கதறுவதை மட்டும் காட்டுகிறார்கள்.

குழந்தை இறந்துபோக, மனைவி மனநலம் பாதித்துவிட ஊர் திரும்பிய நாயகன் அந்தக் கடைக்காரனை பழிவாங்குவதாகச் செல்கிறது கதை.

கதையில் எதிரியை நாயகன் வதை செய்கின்ற கோரக் காட்சிகள், கொடூரமான சண்டைக் காட்சிகள், வன்மமான காட்சிகள் அனைத்தும் ‘லாங் ஷாட்டில்’ மட்டுமே காட்டுகிறார்கள். ஒரு இடத்தில்கூட ‘குளோஸ் அப்பில்’ மிரட்டல் இல்லை. என்ன நடக்கிறது என நாமே அனுமானம் செய்துகொள்ளும் காட்சியமைப்புகள் அத்தனையும் அருமை.

ஆரம்பத்தில் கணவன் மனைவி, குழந்தை இவர்களுக்குள்ளான அன்பான குடும்பக் காட்சிகள் அனைத்தும் ‘குளோஸ் அப்பில்’. இதர காட்சிகள் நார்மல் ஷாட்டில்.

இதில் இருந்து நம் வாழ்க்கைக்கான ஒரு கான்செப்ட் கிடைக்கிறது.

சந்தோஷப்பட ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது அவற்றை ‘லாங் ஷாட்டில்’ தூர விரட்டிவிட்டு, துக்கப்படும் சில விஷயங்களை மட்டும் மனதுக்கு மிக அருகில் ‘குளோஸ் அப்பில்’ வைத்துக்கொண்டு சங்கடப்படுவானேன்.

நம் சந்தோஷங்களை குளோஸ் அப்பில் அணைத்துக்கொள்வோம். வருத்தங்களையும் லாங் ஷாட்டுக்கு விரட்டுவோமே.

வாழ்க்கை சுகமாக இல்லையென்றாலும் துக்கமாகாமல் இருப்பதற்கான OTP.

தகப்பன் சாமிகளாய் குழந்தைகள்!

என் உறவினரின் மகள் வகுப்பில் படிக்கின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டுவிட்டதால் பள்ளிக்கு விடுமுறை. அன்று முழுக்க பயத்தில் ஒரே புலம்பல். அழுகை. அவளுக்கு தைரியம் கொடுக்க நான் கொஞ்சம் பேசினேன்.

“நம்முடைய வெற்றிகளுக்கு நம் அப்பா அம்மா ஸ்கூல் நண்பர்கள் ஆசிரியர்கள் வீடு சமுதாயம்  இப்படி பல காரணிகள் உள்ளன.

நாம் ஒரு விஷயத்தில் ஜெயிக்க எப்படி நாம் மட்டுமே காரணம் இல்லையோ, அதுபோல நம் தோல்விகளுக்கும் நாம் மட்டுமே காரணம் அல்ல.

எனவே, எந்த ஒரு சூழலிலும் நாம் இதுபோன்ற முடிவை எடுக்கவே கூடாது. தைரியமாக இருக்க வேண்டும்…”

இப்படி என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன்.

ம்ஹூம். பலனில்லை.

அவள் அழுதுகொண்டே இருந்தாள். நான் அமைதியானேன்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் 12 வயது தம்பி என்னிடம் சொன்னான்:

“ஆண்ட்டி, பெரியவர்களுக்கு எப்போதுமே ஒரே சிந்தனைதான்.

தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் எண்ணமாக இருக்கும்.

ஆனால் குழந்தைகள் எங்களுக்குள் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.

சிலசமயம் குழந்தைத்தனமாக இருக்கத் தோன்றும். சிலசமயம் அழத் தோன்றும்.

சிலசமயம் கொஞ்சத் தோன்றும்.

எங்களின் அப்போதைய மனநிலையைப்  புரிந்துகொண்டு பேசினால்தான் ‘வேவ்லெங்த்’ ஒத்துப்போகும்.

எங்களாலும் புரிந்துகொள்ள முடியும்.

அக்கா அமைதியாக இருக்கும்போதுதான் அவள் மனது நாம் சொல்வதை ஏற்கும் நிலை வரும்”

இதுவே, தகப்பன் சாமியாய் அந்த 12 வயது சிறுவன் எனக்குச் சொன்ன OTP.

நம்மை நாம் சரியாக வெளிப்படுத்துவோமா?

நான் பங்கேற்கும் மேடை பேச்சின் போதெல்லாம் நினைவுக்கு வரும் நிகழ்வு.

ஒரு சமயம் புயலால் பாதிக்கப்பட்ட இடத்தில், எங்கள் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளை மூலம்  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உணவு, உடை கொடுத்து உதவுவதற்காக 200-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்திருந்தோம்.

மாலை சூரியன் மறையும் நேரமும் கூட. வெளிச்சமும் குறைவுதான்.

நான் வழக்கம் போல மெதுவாக பேச ஆரம்பித்தேன். அந்தக் கூட்டம் தன் சத்தத்தை குறைக்கவே இல்லை.

‘கொஞ்சம் அமைதியா இருந்தால்தான் நான் பேசுவது புரியும்…’ என மென்மையாக கூட்டத்தைப் பார்த்துச் சொன்னபோது அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்த சமூக ஆர்வலர் திரு.  சடகோபன் நாராயணன்  அவர்கள்  என்னிடம் சொன்ன கருத்து இன்றும் நான் எப்போதெல்லாம் மேடையில் பேச ஆரம்பிக்கிறேனோ அப்போதெல்லாம் என் மனதில் ஒலிக்கும்.

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு Tag வைத்திருப்போம் அல்லவா. அதுபோலஇவரை நினைவில் வைத்துக்கொள்ள இந்த Tag.

‘இவர்கள் சத்தம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். நீங்கள்தான் குரலை உயர்த்தி சப்தமாகப் பேச வேண்டும்… நீங்கள்தான் சப்தத்தை அமைதியாக்க வேண்டும்’

என்ன ஒரு அருமையான கருத்து. இது மேடைப் பேச்சுக்கு மட்டுமல்ல.

நம்முடைய செயல்களாலும், குணம் மற்றும் பண்புகளாலும் மட்டுமே, வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் சதா நம்மை உற்று நோக்கும் இந்த சமுதாயத்தின் கவனத்தை சரியான பார்வையாக நம் மீது கொண்டுவர முடியும். இல்லை என்றால் இந்த சமுதாயம் தம் போக்கில்தான் நம்மை மதிப்பிட்டுக்கொண்டிருக்கும் என்ற பொருள் அடங்கியதாக எனக்குத் தோன்றியது.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP… பிரச்சனைகளை தள்ளி வைப்போம்… நம் மனதை நாம் செல்ஃபி எடுப்போம்… உள்ளுணர்வுகளின்படி செயல்படுவோம்… மன்னிக்கும் மனோபாவத்தைப் பெற முயற்சிப்போம்… சந்தோஷமும் வெற்றியும் க்ளோஸ் அப்பில் தானாகவே நெருங்கி வரும்!

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 11
ஜூன் 2019

(Visited 187 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari