வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! (நம் தோழி)

ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்!

ஒரு தொலைபேசி அழைப்பு. வேலூரில் இருந்து  ஒரு வாசகி பேசுகிறார் என சொல்லி என் உதவியாளர் போனை கனெக்ட் செய்தார்.

போனில் பேச ஆரம்பித்த பெண் நான் எழுதிய ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகத்தில் விவேகானந்தர் கொள்கைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு எழுதி இருந்ததையும் குறிப்பிட்டு அழகான ஒரு புக் ரிவ்யூவையே போனில் பகிர்ந்துவிட்டார். நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழுமப் பதிப்பகம் வாயிலாக வெளியானப் புத்தகம் அது.

15, 17 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். சுயமாக பிசினஸ் செய்யும் கணவன். அவர்கள் ஊர் பள்ளியில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கியதாகவும், அவ்வப்பொழுது புத்தகங்கள் வாங்கி தன் மகள்களுக்கு கொடுப்பதாகவும் சொன்னார்.

இப்போது 40 வயதில் இருக்கும் இவர், தன் 30 வயதுக்கு மேல் ஒரு டிப்ளமா ஒரு டிகிரி முடித்து தற்போது  பி.எட் படித்துக்கொண்டிருக்கிறார். இடையில் இரண்டு வருடம் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி. பி.எட் முடித்து டீச்சராகவே பணி புரிய வேண்டும் என்பதும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுக்க வேண்டும் என்பதும் தன் கனவு என்றார்.

உற்சாகத்துடன் பேசியவரிடம் பெயரை கேட்டேன்.

‘வேண்டாமணி’ என்றார்.

நான் மீண்டும் கேட்டேன்.

அவர் ‘வேண்டாம் மணி’ என பொறுமையாக சொன்னார்.

ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என கேட்டேன்.

முதலில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்களாம் அவர் பெற்றோர். மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்ததால் இப்படி பெயர் வைத்துவிட்டார்களாம். இவருக்குப் பிறகு நான்காவதாகப் பிறந்ததும் பெண்தானாம். ஆனால் அவருக்கு அழகான பெயரை வைத்துள்ளார்கள்.

இவரைத்தவிர மற்ற மூவரும் எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்டவில்லையாம்.

இவரது பெயர் குறித்து சிறுவயதில் இவருக்கிருந்த தாழ்வுமனப்பான்மையை இவரது படிப்பும் வேலையும் விரட்டிவிட்டது என்றார்.

‘கவலையே படாதீங்க வேண்டாமணி மேடம். நீங்கள் இந்த சமுதாயத்துக்கு வேண்டும் மணி’ என்று மனதார வாழ்த்தினேன்.

அவர் நெகிழ்ச்சியில் கண்கலங்கியது குரலில் தெரிந்தது.

‘நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடல்… தன்னம்பிக்கைப் பெண்மணி… உங்களைப் பற்றி நான் நிகழ்ச்சிகளில் எங்கேயேனும் பேசும்போது குறிப்பிடலாமா?’ என்று கேட்டபோது  அழுதே விட்டார்.

‘இதற்கு நான் எவ்வளவு கொடுப்பினை செய்திருக்க வேண்டும்… ரொம்ப நன்றி மேடம்’ என்றார்.

இதுவரை அவர் நெகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் இயல்பாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கடைசியில் அவர் சொன்ன ஒரு தகவலில் நான் நெகிழ்ச்சியானேன். அவர் இயல்பானார்.

‘ஏதோ என் பெயரை மட்டும் இப்படி வைத்துவிட்டார்களே தவிர என் அம்மா அப்பா ரொம்ப நல்லவர்கள்தான் மேடம்…’

இதுதான் மகள்களின் பாசம்.

சென்ற வருடம் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு நிகழ்ச்சிக்காக குழந்தைத்தனம் விலகி பருவ மாற்றம் ஏற்படும் பதின்மவயதில் உள்ள 9–ம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்திருந்தோம்.

அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், பெண்களைப் பற்றிய புரிதல் மேம்பட வேண்டும், ஆண் பெண் புரிதல் இன்னும் இணக்கமாக வேண்டும், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இணக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்…

அம்மா என்பவள் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடவும், உடைகளை துவைத்து இஸ்திரி செய்யவும், படிப்பு சொல்லித்தரவும், வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் சம்பாதித்துக் கொண்டுவரவும் மட்டுமே இயங்குகின்ற ஒரு ஜீவன் என்ற உணர்வில் இருந்து வெளிவந்து அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கிலும்…

இதுபோன்ற உணர்வுப்பூர்வமான உண்மைகளை புரிந்துகொள்ளும் விதத்தில் கல்வியும், புரியவைக்கும் விதத்தில் வீடுகளும் அமையப்பெற்றால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கிலும்…

‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீங்களும் நம் குடும்பத்தாரும் என்ன மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்?’ என்ற தலைப்பைக் கொடுத்து எழுதச் சொன்னோம். இது குறித்து அம்மாவிடமே கேட்டறிந்து எழுதி அவரவர்கள் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தோம்.

இந்தப் போட்டியில் 300 மாணவ மாணவிகளுக்கும் மேல் கலந்துகொண்டார்கள். கட்டுரைப் போட்டிக்காக வார்த்தை அலங்காரங்களைத் தேடி எழுதாமல் பெற்றோரிடம் கலந்தாலோசித்து சிறப்பாக எழுதிய 10 மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்தோம்.

இந்த நிகழ்ச்சி ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் என்ன மனநிலை, பெண் குழந்தைப் பிறந்தால் என்ன மனநிலை என்பதற்காக எடுத்த ஒரு சர்வே போல ஆகிவிட்டது.

பெண் குழந்தைகள் கருவில் இருக்கும்போதும், பிறந்தவுடனேயும், வளரும்போதும் வளர்ந்தபிறகும் சந்திக்கும் பிரச்சனைகளை இனியும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

மாணவிகளின் கட்டுரைகள் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் குரலாக அமைந்திருந்தது.

மாதிரிக்கு சில…

‘இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதே என என் அப்பாவுக்கு மிகவும் வருத்தம். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டாராம் என்னைப் பார்க்காமலேயே. ஒரு மாதம்வரை அம்மாவுடன்கூட பேசவே இல்லையாம்… இப்போதும் என் அக்காவைத்தான் அப்பாவுக்குப் பிடிக்கும். என்னைப் பிடிக்காது…’

‘முதல் குழந்தையே பெண்ணாகப் பிறந்துவிட்டதால் என் பாட்டி என்னை ஒரு வருடம்வரை தூக்கவே இல்லையாம்….’

‘முதல் குழந்தை ஆணாக இருப்பதற்கு திருப்பதிக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்து ஆண் குழந்தைக்காகக் காத்திருந்த என் பெற்றோர் நான் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனராம். எனக்கு தம்பி பிறந்தபோதுதான் வீடே கலகலப்பாக இருந்ததாம்…’

இந்த பெண் குழந்தைகளின் உணர்வுகளில்தான் எத்தனை ஏக்கம்.

இந்த நூற்றாண்டில்கூட பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே வேதனையின் உச்சம்தான்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜூலை 2, 2019

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (ஜூலை 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 4

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி – ஜூலை 2019

(Visited 162 times, 1 visits today)
error: Content is protected !!