வாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)

கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு உள்ளே நிகழும் அற்புதம். அதற்கு அந்த நம்பிக்கையே சாட்சியாகும். அந்த நம்பிக்கைக்கு உருவகம் கிடையாது. அதனால் அவரவர்கள் உணர்ந்தால்தான் உண்டு. அதை நிரூபணமும் செய்ய முடியாது.

ஆனால், நம் உடலுக்கு வெளியே நடக்கும் பலவற்றுக்கு அறிவு சாட்சியாகும். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற பாடகர் ஒருவரின் கச்சேரிக்கு கூட்டம் அலைமோதுகிறது. அந்தக் கூட்டமும், பாடகரின் திறமையும் அவர் திறமைசாலி என்பதற்கு சாட்சி. நம் அறிவு அதை எடுத்துச் சொல்லி நம்ப வைக்கும்.

இதுபோல கடவுள் இருக்கிறார் என்பது நாம் உள்ளுக்குள் உணரும் அற்புதம். அதை நம்மால் மட்டுமே உணர முடியும். நம் அறிவைக் கொண்டோ அல்லது பிறரது அறிவாலோ அதை நிரூபணம் செய்ய முடியாது. சுருங்கச் சொன்னால், அதற்கு நம்பிக்கையைத் தவிர வேறு எதனாலும் நிரூபணம் செய்யும் சக்தி கிடையாது.

நம்பிக்கையில் பற்று வைத்து வாழ்க்கையில் ஏதேனும் ஒருசில விஷயங்களையாவது கேள்விகள் கேட்டு, ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பிடிப்பு இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் கேள்வி, எல்லாவற்றிலும் ஆராய்ச்சி, எல்லாவற்றுக்கும் விவாதம் என்றிருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்து இயந்திரங்களாகி விடுவோம்.

எது கர்மா?

நாம் செய்கின்ற நல்ல செயல்களுக்கான பலன் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நேரடியாக உடனுக்குடன் அப்போதே கிடைக்காவிட்டாலும் எப்போதேனும் வேறு ஏதேனும் ஒரு வகையில் நம்மை வந்தடையும். இது கர்மா. இதில் இருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது.

அதுபோலதான் நாம் செய்கின்ற தீமை ஒரு துளியானாலும் அதற்கான பலனும். சந்தித்துத்தான் ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.

கடவுளை நம்புபவர்கள் அதற்கு இறைசக்தி என்றும், இயற்கையை நம்புபவர்கள் அதற்கு கர்மா என்றும் அவரவர்கள் வசதிக்கு ஏற்ப பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

நேற்றுமுன் தினம் நானும் அப்பாவும் இரவு அலுவலத்தில் இருந்து வீடு திரும்பினோம். அம்மா கதவைத் திறந்துவிட்டு நகர்ந்தபோது பக்கத்தில் இருந்த ஸ்டூல் தடுக்கி கீழே விழுந்துவிட்டார். பெரிய அடி ஏதும் இல்லை.

நாங்கள் பதறி ‘பாத்தும்மா…’ என்று சொல்லி அம்மாவை தூக்கிவிட்டோம் என்றாலும், பிறகு நான் விளையாட்டாக ‘எங்களைப் பார்த்து ஏன் இத்தனை பயம்?’ என கிண்டல் செய்தேன்.

பலன் நேற்று தண்ணீரே இல்லாத தரையில் கால் வழுக்கியது. கொஞ்சம் சுளுக்கு. என்னைப் பொறுத்தவரை எனக்கெல்லாம் பலன்  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் லாஜிக்கின்படிதான்.

இதுபோல நடப்பது முதன்முறை அல்ல.

நான் மனதறிந்து செய்யாத சின்ன சின்னத் தவறுகளுக்குமான (செயல்களுக்குமான) தண்டனை மிகக் குறுகிய காலத்திலேயே கிடைப்பதெல்லாம் வரம்தான்.

அப்போது நான் நினைத்துக்கொள்வேன். எனக்கு நடக்கின்ற எல்லா நன்மைகளுக்கும் நான் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற நல்ல செயல்களே காரணம் என்று.

இதுதான் கர்மா!

அக்கவுண்டன்சியில் டெபிட் கிரெடிட் பேலன்ஸ் ஆகி கணக்கு டேலி ஆவதைப் போல அவ்வப்பொழுது கிடைக்க வேண்டியவை கிடைக்கப்பெற்று நான் சீராகவும் சரியாகவும் செயல்பட இயற்கை எனக்கு உதவுவதை நினைத்து சற்றே பெருமைதான்.

நீங்களும் உங்களை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்… உங்களுக்கு நடக்கின்ற நல்லவற்றுக்கும், தண்டனைகளுக்குமான காரணத்தை உங்களாலேயே உணர முடியும்.

நாம் நம் செயல்களை கண்காணிக்காவிட்டாலும் இயற்கை கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. இயற்கையிடம் இருந்து தப்பிக்க முடியாது.

சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்காக ராணிப்பேட்டைக்குச் சென்றிருந்தேன். கார் பயணங்களின்போது பசுமைக் காட்சிகளை புகைப்படமும் வீடியோவும் எடுப்பேன். ஆனால் இந்தமுறை காய்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் ஓலைகளுடன் தென்னை மரங்களையும், பனை மரங்களையும் வரண்ட பூமியையுமே வழிநெடுக பார்க்க முடிந்தது. வறட்சி மிக கொடூரம்.

நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சி விடுகிறோம். கிடைக்கும் மழை நீரையும் சேகரிக்காமல் விட்டு விடுகிறோம். அரசாங்கம் வலியுறுத்திய மழை நீர் சேமிப்பு திட்டத்தை அரசியல் பேசியே நிராகரித்தோம்.

விளைவு…

தண்ணீர் பஞ்சம். தண்ணீரை எப்படியெல்லாம் சேகரிக்கலாம், எப்படி சிக்கனமாக பயன்படுத்தலாம் என இப்போது யோசிக்கிறோம். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல்தான் என்றாலும் இப்போதாவது சிந்திக்கிறோமே… அதுவரை மகிழ்ச்சிதான்.

இப்படியே நிலத்தடி நீரை உறுஞ்சி பூமியை வரளச் செய்தால் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீர்கேடுகளையும் சந்திக்க நேரிடும்.

இதுவும் ‘கர்மா’தான்.

Each action has equal and opposite reaction – Newton’s Third Law. It is also called as KARMA.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதே இயற்கை நமக்குக்கொடுத்துள்ள OTP.

எது ஆன்மிகம்?

ஆன்மிகம் என்றால் என்ன… என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

பொதுவாக நமக்கு நாம்தான் ஹீரோ; ஆனால் காதலிக்கும்போது நம்மைவிட மற்றொருவர் நமக்கு ஹீரோவாகிறார்.

எப்போது நம்மைவிட மற்றொருவர் அதிமுக்கியமாகிப் போகிறாரோ அந்தக் கணத்தில் நம் உள்ளிருக்கும் ‘நான்’ என்ற உணர்வு முழுமையாகவோ அல்லது பார்ஷியலாகவோ சிதையத் தொடங்கும். அந்த உணர்வே காதல்.

நம் மனதுக்குப் பிடித்தவருக்காக நம் பழக்க வழக்கங்கள், பிடித்தது பிடிக்காதவைகள் என அனைத்தையும் மாற்றிக்கொள்ள முயற்சிப்போம்.

இதையே ‘காதலில் விழுந்தேன்’, Falling in Love என்றெல்லாம் சொல்வார்கள்.

நம்மால் மற்றொரு உயிர் மீது அதீதமான அன்பு செலுத்த முடியும் என்றால், நம்மால் விருப்பப்படுகிறவர் நன்றாக வாழ வேண்டும் என்று மட்டுமே நினைக்கத் தோன்றும்.

ஒருவேளை காதல் திருமணத்தில் முடியவில்லை என்றால்கூட அவர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் அல்லது மற்றவரை துன்புறுத்தவோ / சிதைக்கவோ மாட்டார்கள். மாறாக தாம் அன்பு செலுத்தியவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்றே பிரார்த்திப்பார்கள்.

காதலில் ‘அதீத அன்பை’ என்ற உணர்வை மீறி, அதீத ‘எதிர்பார்ப்பு’ என்ற உணர்வு மிகும்போது… காதல் திருமணத்தில் முடியாத சூழல் உருவானால் அவர்களுக்குள் இருக்கும்  எதிர்பார்ப்பு என்ற உணர்வு சிதையத் தொடங்கும்.  அதுவே மற்றவர்களை சிதைக்கும் மனோநிலைக்குக் காரணம்.

‘எதிர்பார்ப்பு’ – என்ற உணர்வுக்கு மட்டுமே மற்றவர்களை சிதைக்கும் சக்தி உண்டு. அன்புக்கு  சிதைக்கும் சக்தி கிடையாது.

தன்னையும், தான் நேசிக்கும் மற்ற உயிரையும் ஏதேனும் ஒரு வகையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் செய்யும் சர்வ வல்லமை பெற்றது அன்பு.

ஒரே ஒரு உயிர் மீது அதீதமாக அன்பு செலுத்தும்போது இத்தனை அழகான உணர்வு நமக்குள் தோன்றுவதைப்போல நம்மால் உலகில் உள்ள எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த முடியும் என்றால், எத்தனை அழகான உணர்வுகள் நமக்குள் தோன்றும்; எத்தனை ஆரோக்கியமான சூழல் உண்டாகும்.  இதற்குப் பெயர்தான் ஆன்மிகம். இதுவே ஆன்மிகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் OTP.

எது குற்றம்?

எது குற்றம், யார் மீது தவறு என்பதை உணர்த்துவதற்கு ஒரு சிறிய கற்பனை கதை.

ஒரு அரசர் தன் நாட்டு மக்களுக்கு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வானத்தில் கழுகு ஒன்று தன் பசிக்காக பாம்பை கவ்விக்கொண்டு பறந்து சென்றது.

பாம்பு கழுகின் பிடியின் வலி தாங்காமல் வாயில் இருந்து விஷத்தைக் கக்கியது.

அந்த விஷம் அன்னதான உணவில் சொட்டியது. அது தெரியாமல் அந்த உணவை சாப்பிட்ட மக்கள் பலர் மடிந்து போனார்கள்.

இந்த நிகழ்வில்…

மன்னர் தர்மம்தான் செய்துகொண்டிருந்தார். அவர் தவறு செய்யவில்லை. தன் உணவுக்காக பாம்பை கவ்விக்கொண்டு பறந்த கழுகும் குற்றம் ஏதும் செய்யவில்லை. வலி தாங்காமல் விஷத்தைக் கக்கிய பாம்பும் பாதகம் செய்யவில்லை.

இந்த சுழற்சியில் யார் மீதும் தவறில்லை என்பதால் எமதர்ம ராஜாவுக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது என்று குழப்பமாக இருந்தது.

இது நடந்து சில நாட்கள் கழித்து அந்த நாட்டின் வேறொரு பகுதியில் இருந்து அரசரிடம் உதவி கேட்பதற்காக வந்திருந்த சிலர், அரண்மனைக்கு வழி தெரியாததால் ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் வழி  கேட்டார்கள்.

அந்தப் பெண் அரண்மனைக்கு வழியை மட்டும் சொல்லி இருந்தால் பரவாயில்லை. என்ன சொன்னார் தெரியுமா?

‘உங்களுக்கு விஷயமே தெரியாதா… சில நாட்களுக்கு முன்னர்தான்  மன்னர் சாப்பாட்டில் விஷம் வைத்து சிலரை கொன்றார்… எனவே அவரிடம் உதவிக்குச் செல்லாதீர்கள்… அவர் கொலைகார ராஜா…’ என தனக்கு உண்மை எதுவென்றே தெரியாத தகவலை சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார்.

இப்போது எமதர்ம ராஜாவுக்கு இருந்த குழப்பம் தெளிந்தது. தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை தெரிந்ததைப் போல சொல்லி, குற்றமே செய்யாத ஒருவர் மீது அவதூறாக பழி சுமத்திய அந்த பெண்தான் குற்றவாளி அவருக்கே தண்டனை கொடுப்பது என முடிவு செய்து தன் நாட்குறிப்பில் அவருக்கான விதியை எழுதினார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சமூக வலைதளங்களும் ஊடகங்களும் பெருகியுள்ள இந்நாளில் குற்றங்களைவிட அவை குறித்த தவறான பரப்புரைதான் மக்கள் மனதில் எளிதாக சென்றடைகின்றன.

குற்றங்கள் குறையாமல் பல்கிப் பெருகுவதற்கு இதுபோன்ற தவறான பிரசாரங்களும் ஒரு காரணம்.

குற்றங்கள் பெருகாமல் இருப்பதற்கு தவறான பிரசாரங்களை ஒழிப்போம். இதுவே குற்றங்கள் குறைவதற்கான OTP.

எல்லோருக்கும் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்’ என்ற குறளின்படி அலசி ஆராயவெல்லாம் நேரம் இருப்பதில்லை. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் ஷேர் என்று கைக்குள் உள்ள மொபைலில் வந்துகுவியும் தகவல்களை ஏற்றுக்கொண்டு கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

நடக்கின்ற நிகழ்வுகளைவிட அவை குறித்த தவறான பகிர்தலே பயங்கரமானது. நிகழ்வுகள் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அவை பூதாகரமாக்கப்பட்டு பரவுவதால் செய்திகள் உண்மைதன்மையை இழக்கின்றன.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

கர்மாவாகட்டும், இறை நம்பிக்கை ஆகட்டும் எல்லாவற்றின் அடிப்படையும் ‘நம்பிக்கை’ எனும் ஒற்றை வார்த்தைதான். கர்மாவாவது, கடவுளாவது என்று தர்க்கம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு எது சரி எனப்படுகிறதோ அதன் மீது நம்பிக்கை வையுங்கள். ஏதேனும் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்போம். அப்போதுதான் வாழ்க்கையில் பிடிப்பு இருக்கும்.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 13
ஆகஸ்ட் 2019

(Visited 166 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon