நோ காம்ப்ரமைஸ்

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

சில மாதங்களுக்கு முன்னர் மின்னம்பலம் டாட் காமில் நான் எழுதிவந்த ‘கனவு மெய்ப்பட’ என்ற கட்டுரைத் தொடரில் No Compromise என்ற கட்டுரையை எழுதி இருந்தேன்.

அதில் தங்கள் கொள்கைகளை எதற்கும் காப்ரமைஸ் செய்துகொள்ளாமல் சிறப்பாக செயல்பட்டுவரும் வெவ்வேறு துறைசார்ந்த மூன்று பெண்களின் சாதனைகளைக்  குறிப்பிட்டிருந்தேன்.

அவர்களுள்  டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் குறித்து நான் எழுதியிருந்த பகுதி உங்கள் பார்வைக்கு….

முழுமையான கட்டுரைக்கு…நோ காம்ரமைஸ் – கட்டுரை

ஒரு பெண்ணின் ஆளுமையை வீழ்த்த அவர்களைக் குறை கூறச் செய்திகள் எதுவும் இல்லாதபோது, அவர்கள் தோற்றத்தை வைத்துச் சாடுவதுதான் பெரும்பாலானோரின் மனோநிலை.

அழகை வைத்துப் பெண்களை போற்றுகிறார்கள் அல்லது தூற்றுகிறார்கள்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அவர்களை அவரது நிறத்தையும், சுருட்டை முடியையும், உருவத்தையும் வைத்து எத்தனை மீம்ஸ்களில் அவமதித்திருப்பார்கள்.

ஆனால், அத்தனையையும் அவர் சட்டை செய்யாமல் ஒருசில நேரங்களில் அவற்றுக்கு நகைச்சுவையாகக்கூட பதிலளித்திருக்கிறார்.

சுருட்டை முடி குறித்த மீம்ஸ் பற்றி கேட்டபோது தமிழிசை சிரித்துக்கொண்டே, “என் முடி சுருட்டை. அதனால் நான் அதைச் சுருட்டி முடிபவள். பொதுப் பணத்தைச் சுருட்டி முடிபவள் அல்ல” என்று கூறினார்.

சமீபத்தில் தமிழிசை, அவர் கணவர் சவுந்தராஜன் இருவரின் பேட்டி ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

இவர் தன் தந்தையின் காங்கிரஸ் கட்சியில் சேராமல் பிஜேபியில் இணைந்தபோது, இவர் தந்தை இவருடன் ஆறு மாதம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதை மிக நெகிழ்ச்சியாக எடுத்துச் சொன்னார்.

பொதுவெளிக்கு வரும் பெண்களுக்குக் குடும்பமும், திருமணமும் தடையாக இருக்கும் எனக் காலம் காலமாகப் பேசப்பட்டுவரும் சூழலில், ஒரு பெண் மனது வைத்தால் தன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காமல், தன் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் பயணம் செய்ய முடியும் என்பதற்கு அவர்கள் இருவர் முகத்திலும் நேர்காணல் தொடங்கிய நிமிடம் முதல் முடிவு வரை நிலவிய மகிழ்ச்சியே சாட்சியானது.

சாதனைப் பெண்கள் திறமையானவர்களாக, நேர்மையானவர்களாக, எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத மன உறுதியும் இருந்தால் போதும். பண பலமோ, அரசியல் பின்புலமோ, பிறர் வரையறுத்து வைத்திருக்கும் அழகோ தேவையில்லை.

பெண்ணியம் குறித்த பார்வைகள் மாறுபடலாம். ஆண்களை எதிர்ப்பது பெண்ணியத்தின் நோக்கம் இல்லை. தன்னைப் புரியவைக்கும் சாதுர்யம், நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறைச் சுட்டிக்காட்டும் மேன்மை, பாரபட்சம் காட்டாத அன்பும் அரவணைப்பும், தன் கருத்தில் உறுதியாக இருப்பது, தனது உரிமை குறித்த பிரக்ஞை இவையெல்லாம் பெண்ணியத்தின் பண்புகள்.

முக்கியமாக நாம் நாமாக வாழும் பக்குவம் இருந்துவிட்டால் சந்தேகமே இல்லாமல் நாம் பெண்ணியவாதியே.

யோசிப்போம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 1, 2019

(Visited 6 times, 1 visits today)
error: Content is protected !!