மாயன் என்கிற ஆர்.கே

இன்றைய பொழுது பேரன்பில் நனைந்தது. நன்றி ஆர்.கே சார். இவர்களைப் போன்ற பெரியோர்கள் பலரில் உள்ளார்ந்த அன்பினால்தான் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து  என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது.

2017 – காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு.

நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்பா அம்மாவின் பணி நிமித்த மாற்றல் காரணமாக, நான் வளர்ந்தது திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம் என பல்வேறு ஊர்களில். இதனால் எனக்கு ஒரு குறிப்பிட்ட ஊர் பாசம் என்பது வருவதில்லை. எந்த ஊரில் வசிக்கிறோமோ அந்த ஊர் பிடித்துப்போனது(போகிறது).

பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் திருச்சி இந்திரா காந்திக்கல்லூரியில் படித்தேன். எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில்.

கல்லூரி கடைசிவருட பிராஜெக்ட்டை நுங்கம்பாக்கம் ஹைரோடில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் செய்தேன். அப்போதுதான் சென்னை வந்த புதிது. பஸ், ரயில், மனிதர்கள் எல்லாமே அதிசயங்கள். அன்று மிக அபூர்வமாக பைக்கில் செல்லும் பெண்களை ஆச்சர்யமாகப் பார்த்தபடி பயணித்திருக்கிறேன். இத்தனைக்கும் கியர் வைத்த வண்டிகூட ஓட்டக் கற்றுக்கொடுத்திருந்தார் அப்பா. ஆனாலும் சென்னை சாலையில் ஓட்டுவது பிரமிப்புத்தானே.

ரயில் தூரத்தில் வரும்போதே உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஒட்டிக்கொள்ளும். நாம் ஏறுவதற்குள் ரயில் கிளம்பி விடுமோ என்ற பயமே காரணம். இறங்கும் இடம் வரும்வரை நின்றுகொண்டே வருவேன். காரணம் இறங்க வேண்டிய ஸ்டேஷன் சென்று விடுமோ என்ற பயத்தால்.

பஸ்ஸானால் ஏறும்போதே கண்டக்டரிடம் இறங்கும் இடத்தைச் சொல்லச் சொல்லி கேட்டுக்கொள்வேன். ஆனாலும் பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை கண்டக்டர் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன்.

இப்படியாக என் சென்னை வாசம் ஆரம்பமானது. பிராஜெக்ட் முடிந்து பட்டம் (1992) பெற்றவுடன் சென்னையே நிரந்தரமானது.

அப்போதெல்லாம் படித்து முடித்தவுடம் பெண்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று டீச்சர் வேலை. அதிகபட்சமாக பள்ளி/கல்லூரி முதல்வராக இருப்பார்கள். இரண்டாவது வாய்ப்பு திருமணம்.

நான் என் பெற்றோருடன் ஆலோசனை செய்து சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன்.  1992-ல் காம்கேர் உதயமானது.

பணிநிமித்தம் பயணம் செய்ய முதன்முதலில் ‘டிவிஎஸ் சாம்ப்’ வாங்கினோம். சென்னை மவுண்ட் ரோடில் டிவிஎஸ் சாம்ப்பில் சுதந்திரமாக பறந்து(!) செல்வேன். பின்னர் கைனடிக் ஹோண்டா, அதன் பின்னர் ஏவியேட்டர்.

கிட்டத்தட்ட சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் பைக்கிலேயே பயணித்திருக்கிறேன். அடுத்து கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். முதலில் வெள்ளை நிற மாருதி 800, அடுத்து கிரே கலர் சாண்ட்ரோ பின்னர் சிவப்பு நிற i10.

பைக்கைப் போலவே காரிலும் சற்று வேகமாகவே செல்வேன். தன்னம்பிக்கை உச்சத்தை எட்டும். கார் ஓட்டும்போது ஏற்கெனவே இருக்கும் தன்னம்பிக்கை இருமடங்காவதை உணர்வேன்.

இப்படியாக சென்னை மனிதர்களும், வீதிகளும், பழக்க வழக்கங்களும்   எனக்கு பரிச்சியமானது.

சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக்கொண்டு ஆரம்பித்த காம்கேர் நிறுவனத்தில் அனிமேஷன், பப்ளிகேஷன், ஆவணப்படங்கள் என பல்வேறு பணிகளை அறிமுகப்படுத்தினேன். என் படிப்பை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு உண்மை, உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை இவற்றுடன் பயணம் செய்து வந்தேன்.

24 வருடங்கள் ஓடிவிட்டன. இதோ 2017-ல் 25-வது வருடத்தில் எங்கள் காம்கேர் நிறுவனம். ஏராளமான புத்தகங்கள், சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகள் என வளர்ந்திருந்தாலும் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காட்டுவது என் எழுத்துக்கள்தான்.

கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வசிப்பவர்கள் மட்டுமே நான் தமிழில் எழுதும் தொழில்நுட்பப் புத்தகங்களை வாங்கி படித்து வருகிறார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்த போது, அது அப்படி இல்லை நாங்களும் வாங்கிப் படிக்கிறோம் என சொல்லி போன்கால்கள் வர ஆரம்பித்தன.

ஐ.ஐ.டி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சென்னை முதலான மாநகரங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள், அமெரிக்கா முதலான வெளிநாடுகளில் ஐடி துறையில் பணிபுரியும் இந்தியர்கள் என அனைத்துப் பிரிவினரும் என் புத்தகங்களின் வாசகர்களாக உள்ளனர். தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் நான் எழுதிய புத்தகங்கள் இருப்பதை அவ்வப்பொழுது என்னை தொடர்புகொள்ளும் வாசகர்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.  இன்றும் பல பல்கலைக்கழகங்களில் என் புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன.

ஒரு குடும்பத்தின் 3 தலைமுறையினருக்கு என் புத்தகங்கள் பயனுள்ளதாக இருப்பதாக அண்மையில் தொலைபேசியில் பேசிய வாசகர் ஒருவர் கூறினார். அவரும் அவரது மனைவியும் என் புத்தகங்களை வாசித்து மொபைல் கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவதாகவும், அவரது மகனும் மகளும், தங்கள் பள்ளி கல்லூரி படிப்புக்காக வாசிப்பதாகவும் , அவரது தந்தை என் புத்தகங்களைப் படித்துத்தான் இமெயில் வாட்ஸ் அப் எனப் பழகுவதாகவும் சொன்னபோது ‘இதைவிட வேறென்ன வேண்டும் இந்தப் பிறவிக்கு’ என்ற உணர்வே ஏற்பட்டது.

சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் காம்கேர் நிறுவனம் உதயமாக காரணகர்த்தா என் பெற்றோர் திருமிகு. கிருஷ்ணமூர்த்தி, திருமிகு. பத்மாவதி.  ‘காம்கேர்’ என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?

நிறுவனத்துக்கு பெயர் வைப்பதற்கு என் அப்பாவுடன் தொலைபேசித்துறையில் AE ஆகப் பணிபுரிந்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி (ஆர்.கே) அவர்களும், DE ஆகப் பணிபுரிந்த திரு. பலராமன் அவர்களும் காரணமாவர். இவர்கள் எங்கள் நலன்விரும்பிகளும்கூட. இவர்களில் பலராமன் அவர்கள் அண்மையில் காலமாகிவிட்டார்.

இவர்கள் இருவரோடும் நான் அப்பா அம்மா தம்பி தங்கை இணைந்தமர்ந்து பேசி முடிவெடுத்தோம். காம்கேர் – COMPCARE என்ற பெயரை உருவாக்கினோம். Computer Care என்பதன் சுருக்கமே COMPCARE.

ஒருசில வருடங்களில் எங்கள் காம்கேர், காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமெடெட் (Compcare Software Private Limited) நிறுவனமானது.

இன்று தன் 80-வது வயதில் அதிகம் நடக்க முடியாமல் வீட்டில் ஓய்வெடுக்கும் ஆர்.கே அவர்களை நான் அப்பாவுடன் நேரில் சென்று பார்த்து அவரை கவுரவித்து ஆசி வாங்கி வந்தேன்.

‘இன்னும் இருபது 5 வருடங்கள் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என தன் வழக்கமான சிலேடை வார்த்தைகளில் வாழ்த்தினார். அதாவது 20 * 5 = 100 வருடங்கள் சிறப்பாக செயல்பட உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்தினார். வாழ்த்தியதை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டு சிறிய அன்பளிப்பையும் வழங்கினார். மாயன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவது இவரது சிறப்பு.

மறக்காமல் இன்னமும் நினைவில் வைத்திருந்து நேரில் வந்து சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சியாக இருந்ததை நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

இன்றைய பொழுது பேரன்பில் நனைந்தது. நன்றி ஆர்.கே சார்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி

23-04-2017

(Visited 6 times, 1 visits today)