காந்தலஷ்மி சந்திரமெளலி

காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு எழுத்தாளர். இதோ இவர் எழுதிய கடிதம்!

புவனா என்று நான் அன்புடன் அழைக்கும், நான் பெரிதும் மதிக்கும் பெண்மணி காம்கேர் புவனேஸ்வரி.

முதன்முறையாக அவரை சந்தித்த நிகழ்வு இன்றும் என் நெஞ்சில் ‘பளிச்’ என்று பதிந்து இருக்கிறது. பூரம் சிறுகதை மன்றம் எனும் ஓர் இலக்கிய நிகழ்வை எங்கள் வீட்டில் ஒருவருட காலம் நிகழ்த்திய காலகட்டம் அது. மறைந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவரது தலைமையில் வாராவாரம் எங்கள் இல்லத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை காம்கேர் புவனேஸ்வரி வந்திருந்தார்.

இவரை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அறிமுகப்படுத்தியவர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள். பார்த்த மாத்திரத்திலேயே மிகவும் பிடித்துவிட்ட ஒரு சிநேகிதியாக மாறிவிட்டார் காம்கேர் புவனேஸ்வரி.

இவருடைய சாதனைகள் பற்பல. கணினி கற்க ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று எண்ணி மக்கள் தயங்கிய காலகட்டம் அது. ‘அப்படி எதுவும் தேவையில்லை’ என்று அடித்துக்கூறி தமிழையும், கணினியையும் இணைத்த முதல் பெண்மணி எனும் பெயர் பெற்றவர். கணினித் தொழில்நுட்பத்தில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். எண்ணற்றப் புத்தகங்கள் எழுதியவர். இன்றும் எழுதி வருபவர். இவை அனைத்தையும் கணினி உலகம், பத்திரிகை உலகம், இலக்கிய உலகம் மற்றும் அனைத்து மீடியாக்களும் அறிந்தவைதான்.

இத்தகைய சாதனைகளை எல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமிக்க பெண்மணியாக இவர் வாழ்ந்து வருவதை பலமுறை கண்டு வியந்திருக்கிறேன்.

பலாப்பழத்தில் வெளியில் முள்ளும் உள்ளே இனிமையான சுளையும் இருப்பதுபோல பார்ப்பதற்கு சற்றே இறுகிய முகத்துடன் இருக்கும் புவனாவிற்குள் அன்பு, பாசம், நேர்மை, தர்மம், பணிவு என்று அனைத்து நற்குணங்களும் இருப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாத மனப்பக்குவம் கொண்டு எண்ணற்றவர்களுக்கு இவர் உதவி செய்துள்ளதை நேரில் கண்டிருக்கிறேன்.

அதே சமயம் பொய், அதர்மம், சூது இவற்றைக் கண்டு பொங்கி எழுவதையும் பார்த்திருக்கிறேன்.

Workalholic என்று சதா உழைப்பவர்கள் பற்றி ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதற்கு மிகப் பொருத்தமானவர் காம்கேர் புவனேஸ்வரி.

தன் நிறுவனத்தின் பெயரையே தன் பெயரோடு இணைத்துக்கொண்டு  உழைப்பு என்பதையே உயிர் மூச்சாகக்கொண்டு இன்று மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாக திகழ்கிறார் என்பதில் மிகையேதுமில்லை.

குடும்பம் இவரது மிகப் பெரிய பலம். தன் தாய் தந்தையை இவர் மதிக்கும் பாங்கைக் கண்டு வியந்திருக்கிறேன். என் உயர்வுக்குக் காரணம் என் தாயும் தந்தையும்தான் என்று ஒரே வாக்கியத்தில் இவர் பேசினாலும் அதுனுள் இருக்கும் ஆழம் இவர் கண்களில் தெரியும். முகத்தில் பிரதிபலிக்கும். தன் தாய் தந்தை பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை ஒன்றை நடத்தி அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்கொண்ட பாரதி கூறிய பெண்தான் காம்கேர் புவனேஸ்வரி. அதே சமயத்தில் ஹிந்து கலாச்சாரம், பண்பாடு, இறை வழிபாடு, பெரியவர்களுக்கு மரியாதை என்று பாரதப் பெண்களுக்கே உரிய நற்குணங்களும் இவரிடம் உண்டு.

ஏழைக் குழந்தைகளைத் தேடிச் சென்று உதவுவது, திறமை இருந்தால் அதற்கு உரியவர்கள் (அது ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு உரிய முறையில் பயன்படுத்துவது என்று இவரிடம் பல அரிய பண்புகளும் உண்டு.

‘புவனேஸ்வரி மேடத்துக்கு கோபம் உண்டு’ என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆம். பொய் புரட்டு, சோம்பேறித்தனத்துக்கான சால்ஜாப்புகள், வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பது என்பதை ஒரு கணத்தில் கண்டுபிடிப்பதையும், மறுகணம் அதைக் களைய கடுமையும், அதற்கடுத்து பணி சிறப்பாக இருக்கப் பாராட்டவும் இவர் தயங்கியதே இல்லை. இவரிடம் உள்ள இந்திய பண்பாட்டோடு கூடிய மேலாண்மைத் திறன் என்னை வியக்க வைத்ததுண்டு.

தமிழ்மொழி மீது இவருக்கு தீராத பற்று உண்டு. தமிழறிஞர்களை பெரிதும் மதிக்கும் இவர், இவருடைய பல பணிகளில் அவர்களது திறமையை உபயோகித்து வருகிறார்.

காம்கேர் புவனேஸ்வரியிடம் நான் கண்டு வியந்த முக்கியமான விஷயம் பற்றி குறிப்பிட வேண்டும். ‘கற்றல்’ என்பதில் சிறிதும் தயங்காதவர். ஆம் கணினித் துறை மட்டுமல்ல பலவிஷயங்களிலும் இவரது கற்றுக்கொள்ளும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ‘கற்பூர புத்தி’ என்று கூறுவார்கள். அது இவருக்குப் பொருந்தும்.

சிறிய நிறுவனமாக ஆரம்பித்து அன்று யாரும் அதிகம் அறியாத கணினித் துறையில் சிறு வயதிலேயே கால்பதித்து, சிறந்த மேலாண்மைத் திறனோடு இவர் தன் நிறுவனத்தை வழிநடத்தி, இன்று உயரிய இடத்தை இந்த 25 ஆண்டுகளில் அடைந்துள்ளார் என்பதை மிகவும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க இவரது பணி! வளர்க இவரது உழைப்பு!

காந்தலஷ்மி சந்திரமெளலி

 

(Visited 377 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon