எத்தனையோ நேர்காணல்கள். என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன். அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன்.
‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது?’
நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே. இவை இரண்டையும் அஸ்திவாரமாக்கி உழைப்பை உரமாக்கினேன்.
என் திறமை ‘எழுதுவது’ மட்டுமே என நினைத்துவிடாதீர்கள். கற்பனை, எழுத்து, பேச்சு, வரைதல், மிமிக்கிரி செய்தல், பாடுதல் இப்படி எதையுமே என்னால் நேர்த்தியாக செய்ய முடிவது இறைவனின் கருணை, இயற்கையின் அருள்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் வரவே யோசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொழில்நுட்பத்துக்காகவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதால் தொழில்நுட்பத்தை நம் மக்களுக்கு புரிய வைக்கவே நிறைய காலங்கள் தேவைப்பட்டன எனக்கு.
என்னைச் சுற்றி இயங்கிய பள்ளி கல்லூரி முதலான கல்வி நிறுவனங்களில், மளிகைக் கடைகளில், மருந்துக் கடைகளில், மருத்துவ மனைகளில், வங்கிகளில், நிதி நிறுவனங்களில் என தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததோடு அவர்களை கம்ப்யூட்டரை வாங்கச் செய்து அவர்களுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை (Software) எளிமையாகத் தயாரித்துக் கொடுத்து அவற்றை சில காலங்கள் இலவச வெர்ஷன்களாகவே அவர்களை பயன்படுத்த அனுமதி அளித்து… இப்படியாக ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்பதற்கிணங்க நானும் வளர்ந்து என்னைச் சார்ந்த இந்த சமுதாயத்தையும் உயர்த்தியதில் பெரும்பங்கு வகிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
தமிழ் உட்பட பல இந்திய மொழிகளுக்கான ஃபாண்ட்டுகள் (Font) தயாரித்து, சாஃப்ட்வேர்களை (Software) வடிவமைத்ததில் முதன்மையாக எங்கள் காம்கேர் நிறுவனம் இருந்தது என சொல்லிக்கொள்வதிலும் பெருமகிழ்ச்சியே.
Computer Based Tutorial – CBT
தொடக்கமாக CBT எனப்படும் Computer Based Tutorial நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். கம்ப்யூட்டரில் படிக்கும்படி நான் எழுதுகின்ற தொழில்நுட்ப புத்தகங்களை அழகாக வடிவமைத்து, பின்னணி குரல் கொடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் புத்தகத்தை ஆடியோவாகவும் கேட்கும் வசதியை ஏற்படுத்தினோம். இதனை சிடிக்களில் வெளியிட ஆரம்பித்தோம். இந்த நுட்பத்திலும் எங்கள் காம்கேர் நிறுவனமே முதன்மையாக இருந்தது.
Web Based Tutorial – WBT
இன்டர்நெட் நம் நாட்டில் எட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் WBT எனப்படும் Web Based Tutorial என்ற நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப புத்தகங்களை வெப்பக்கங்களுக்கு ஏற்ப வடிவமைத்ததிலும் எங்கள் காம்கேர் நிறுவனமே முன்னணியில் இருந்தது.
E-Content
அதைத் தொடர்ந்து இ-கன்டென்ட் (E-Content) நுட்பத்தில் நுழைந்தோம். கல்வி நிறுவனங்களுக்கான பாட புத்தகங்களை அனிமேஷனுடனும், பேராசிரியர்களின் உரைகளை லைவாக ஷூட்டிங் எடுத்தும், படங்கள் வரைந்தும் வடிவமைத்து இ-கன்டென்ட் சிடிக்களிலும் புதுமைகளை புகுத்தினோம்.
Animation
அனிமேஷனில் (Animation) தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்திப் பாடல்கள், இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம், கந்தர் சஷ்டிக் கவசம் என ஏராளமாக வெளியிட்டுள்ளோம்.
Multimedia
திருவாசகம், திருக்குறள், மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு என மல்டிமீடியா (Multimedia) படைப்புகளையும் வெளியிடத் தொடங்கினோம்.
Youtube
அதைத்தொடந்து யு-டியூப் (Youtube) மூலம் வீடியோ பாடதிட்டங்களை வெளியிடத் தொடங்கினோம். மைசூர் பல்கலைக்கழகத்துக்காக அவர்களின் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை வகுப்புகளை யு-டியூப் சேனலில் முதன் முதலில் அறிமுகப்படுத்தினோம். அவற்றில் சில யு.ஜி.சி சேனலிலும் வெளியாகியுள்ளன.
E-Book
அடுத்து எங்கள் நிறுவனம் வாயிலாகவே இ-புத்தகங்களை (E-Book) தயாரித்து வெளியிடத் தொடங்கினோம். இப்போதுதானே அமேசான் போன்ற தளங்களில் இ-புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளது. நான் இ-புத்தகங்களை அறிமுகப்படுத்தியதாகச் சொல்வது பத்து வருடங்களுக்கு முன்பு.
APP
கால மாற்றத்துக்கும் முன்னேற்றத்தும் ஏற்ப இப்போது மொபைல் ஆப்பில் (APP) கவனம் செலுத்தி வருகிறோம்.
பன்மொழிகளில்!
சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் படைப்புகள், புத்தகங்கள் எதுவானாலும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என பன்மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
24 இந்திய மொழிகளில் வெளியான ஓர் இணைய இலக்கிய இதழுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறேன்.
கிரியேட்டிவிட்டிக்கும் அங்கீகாரம்
இந்தக் கதையெல்லாம் எதற்காக என்றால்…
எழுதுவது என் திறமைகளுள் ஒன்று. அவ்வளவே. அது மட்டுமே என் திறமை அல்ல.
அதை தொழில்நுட்பத்துடன் இணைத்து Font, Software, CBT, WBT, E-Content, Animation, Multimedia, You Tube, E-Book, APP என பல்வேறு தளங்களில் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது கொஞ்சம் நிறைவாகவே உள்ளது.
இந்த 27 வருடகால நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் தொழில்நுட்பப்பணி சார்ந்து எத்தனையோ விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. இன்றும் தொடர்கிறது.
தொழில்நுட்பம் தவிர்த்து, என் அடிப்படை திறமையான கிரியேட்டிவிட்டிக்கும் அவ்வப்பொழுது விருதுகள் கிடைத்துள்ளன.
அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அலையன்ஸ் பப்ளிகேஷன் திரு. சீனிவாசன் அவர்களுக்கு ’சிறந்த பதிப்பாளர்’ விருதும், எனக்கு ‘சிறந்த எழுத்தாளர்’விருதும் கிடைத்தது. ஒரே மேடையில் விருது பெற்றது இன்றளவும் நினைவில் நிற்கிறது.