ஹலோ With காம்கேர் -24: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 24
ஜனவரி 24, 2020

கேள்வி: எத்தனை உழைத்தும் அங்கீகாரமே கிடைக்கவில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

ஐந்து நிமிட வீடியோ. காட்டுப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் வாத்து ஒன்று ஏகாந்தமாக விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென நான்கு புலிகள் ஆற்றுக்குள் வேகமாக பாய்ந்தன. வாத்து சட்டென தண்ணீருக்குள் தலையை மறைத்துகொண்டது. புலிகள் நான்கும் சுற்றும் முற்றும் தேடின. வாத்து தண்ணீருக்கடியிலேயே நீந்தி சற்று தொலைவுக்குச் சென்று திரும்பிப் பார்த்தது. புலிகள் நான்கும் மீண்டும் அதை நோக்கி தண்ணீரில் தடுமாறி ஓடிச் சென்றன. கண்ணாமூச்சி ஆட்டம்போல வாத்து திரும்பவும் தண்ணீருக்கடியில் மறைந்து கொண்டது. புலிகள் ஏமாற்றமாய் அங்கும் இங்கும் தேடின. வாத்து தண்ணீருக்கடியில் நீந்தி வெகுதொலைவிற்கு சென்று திரும்பிப் பார்த்தது. ‘You are king in your territory. This is my area, I am the king’ என்று அந்த வீடியோ நிறைவடைந்தது.

‘நீங்கள் உங்கள் பிரதேசத்தில் ராஜாவாக இருக்கலாம், இது எனது இடம், இங்கு நான்தான் மன்னன்!’ – எத்தனை தன்னம்பிக்கைக் கொடுக்கும் வாசகம் இது.

இந்த மனநிலை இருந்துவிட்டால் நாம் எல்லோருமே மன்னர்கள்தான் அவரவர் இருக்குமிடத்தில்.

தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என பலரும் என்னிடம் புலம்பக் கேட்டிருக்கிறேன்.

அங்கீகாரம் என்பது பிறர் கொடுத்து வருவதில்லை. நம்மை நாம் மதிப்பதுதான் உயரிய அங்கீகாரம்.

நாம் யாருமே பிறருக்கு உழைப்பதற்காகவே பிறப்பெடுப்பதில்லை. நமக்குப் பிடித்திருந்தால் மட்டுமே எந்த ஒரு பணியையும் முழு மனதுடன் செய்கிறோம். அப்படி முழு மனதுடன் ஈடுபாட்டுடனும் செய்யும்போது அந்த செயல் தெய்வீக சக்தி பெற்றுவிடுகிறது. அப்படி தெய்வீக சக்தியுடன் இயங்குகின்ற எந்த ஒரு செயலும் பிறருக்காக(வும்) செய்யப்படுகின்ற சேவையாகவும் அமைகிறது. இதுதான் லாஜிக்.

நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணிக்கு எழுந்து என் பணிகளைத் தொடங்குகிறேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். இது என் சிறுவயது பழக்கம். என்னை யாரும் மூன்று மணிக்கு எழுந்திருக்க சொல்லி வற்புறுத்தியதில்லை. எனக்குப் பிடிப்பதால், என்னால் முடிவதால் இது சாத்தியமாகிறது.

படித்து முடித்து காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்து என்னை நன்கறிந்தவர்கள் என் மேலுள்ள அக்கறையில் ‘உங்கள் வாழ்க்கையே சேவையாக மாறிவிட்டதே, உங்கள் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லாமல் போய்விட்டது’ என்று ஆதங்கப்படுவார்கள்.

நான் சிரித்துக்கொண்டே, ‘நான் எனக்காக வேலை செய்கிறேன். அதை மனப்பூர்வமாக சிறிதும் சலிப்பின்றி கொண்டாட்ட மனநிலையில் நேர்வழியில் செய்வதால் நான் எடுத்துக்கொள்ளும் ப்ராஜெக்ட் அத்தனையும் இறைசக்தி பெற்றுவிடுகிறது.

அப்படி இறைசக்தி பெறுகின்ற செயல்கள் அந்த வைப்ரேஷனை தனக்குள்ளேயே வைத்திருப்பதில்லை. அதன் நேர்மறை அலைகளை தன்னைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் பரவவிடுகின்றன.

அதனால் நான் செய்கின்ற ஒவ்வொரு ப்ராஜெக்ட்டும் எனக்கு மட்டுமில்லாமல் இந்த சமுதாயத்துக்கும் பயன்கொடுக்கும் வகையில் அமைந்துவிடுகிறது…’ என்று சொல்வேன்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. நம் மனதுக்குப் பிடிக்கும் எந்த ஒரு செயலையும் நாம் முழுமையாக ஆர்பரிக்கும் மனதுடன் மனப்பூர்வமாக செய்யும்போது நமக்கு நாமே விருது கொடுத்துக்கொள்வதற்கு சமமான மனமகிழ்ச்சி நமக்குள் பிரவாகமெடுக்கும். அந்த நிலையை நாம் எட்டி விட்டால் பிறரது அங்கீகாரம் எல்லாம் நமக்கு தூசிக்கு சமமாகிவிடும்.

நினைவில் வையுங்கள், நாம் செய்கின்ற பணியில் நாம்தான் ராஜா.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari