ஹலோ With காம்கேர் -77:  நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா?

ஹலோ with காம்கேர் – 77
March 17, 2020

கேள்வி:  நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா?

‘கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். ரொம்ப சுலபம்’  என்று நான் எழுதி இருந்த ஒரு பதிவுக்கு நண்பர் ஒருவர், ‘வாழ்க்கை ஒற்றைப் படையானது அல்ல. லாஜிக் என்பது 1 அல்லது 0. Yes or No. தர்க்கங்களால் அணுகுவது சரியாகாது. தொழிலை வேண்டுமானால் அவ்வாறு அணுகலாம். உறவுகளை, நட்பை, காதலை அன்பை அப்படி வரையறுக்க இயலாதே. தர்க்கரீதியாக யோசிப்பவர்களுக்கு தர்ம ரீதியான நியாயங்கள் புலப்படாது என்பது என் கருத்து’ என பின்னூட்டமிட்டிருந்தார்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் லாஜிக்  என்பதே  விடை கிடையாது. விடை வேண்டுமானால் 0 அல்லது 1 என கிடைக்கலாம். லாஜிக் அப்படி கிடையாது. விடை காணும் முயற்சியே லாஜிக். லாஜிக் என்பது கம்ப்யூட்டர் மொழிகளில் எழுதப்படும் புரோகிராம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அபிர்ப்பிராயங்கள் இருக்கும். அதுதான் சரி என அனைவருமே நினைத்துக்கொண்டிருப்போம். அதற்கு நாம் வளரும் சூழல், நம் அனுபவங்கள் இப்படி பல்வேறு காரணிகள் இருக்கலாம். அந்த அபிர்ப்பிராயங்களின் அடிப்படையில் நாம் சில கணிப்புகளுடன் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாண்டு பயணித்துக்கொண்டிருப்போம். அந்த அபிர்ப்பிராயங்களும் அதன் அடிப்படையிலான கணிப்புகளும் அதனைத் தொடர்ந்த முயற்சிகளுமே நம் வாழ்க்கைக்கான லாஜிக் எனலாம்.

நம் லாஜிக் சரியில்லை என்றால் வீட்டில் உள்ள உறவுகளிடம் ஆலோசனை கேட்போம். அப்போதும் தெளிவாகவில்லை எனில் நண்பர்களிடம். அப்போதும் தீர்வு கிடைக்காத நிலையில் கவுன்சிலிங் செய்பவர்களை அணுகுவோம். ஒரே பிரச்சனைக்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தீர்வுகள் இருக்கும். அவற்றில் நம் பிரச்சனைக்கு தர்மம் நியாயத்தின் அடிப்படையில் எது சரியாக பொருந்துகிறதோ அதன்படி நடக்க வேண்டியது நம் கடமை. இப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விஷயமே லாஜிக். அதற்கு கிடைக்கும் தீர்வுதான் 0 அல்லது 1.

கம்ப்யூட்டரின் ஆரம்பகால மொழிகளில் கோபால் (COBOL) மொழியும் ஒன்று. 2000-ம் வருடம் அந்த மொழி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. காரணம் Y2K பிரச்சனை. 2000-ம் ஆண்டு கம்ப்யூட்டரில் பதிவாக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற புரளியுடன் Y2K பிரச்சனை உருவானபோது அந்த பிரச்சனைக்கான தீர்வுகாண கோபால் மொழியே உதவி செய்தது.

அதில் லாஜிக் எழுதும் போது பக்கம் பக்கமாக புரோகிராம் எழுத வேண்டியிருக்கும்.  கோபால் மொழியில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்கும்போது வஞ்சனை இல்லாமல் 500 600 தவறுகளைக்கூட காண்பிக்கும். ஒரு புள்ளி, கமா விட்டிருந்தாலே மானிட்டர் முழுக்க தவறுகளை  அள்ளி வீசும். பிரமாண்டமாக எழுதப்பட்டிருக்கும் புரோகிராமில் டைப் செய்யும்போது எங்கேனும் தவறுதலதாக ஒரு புள்ளியையும் சேர்த்து டைப் செய்திருப்போம் அல்லது கமாவை டைப் செய்யாமல்விட்டிருப்போம். அது எங்கு என கண்டுபிடிப்பதே பெரும் சாதனைதான்.

இதுவே சி, சி++ போன்ற மொழிகளில் லாஜிக் எழுதும்போது புரோகிராம் சிறியதாக இருக்கும். தவறுகளும் அத்தனை காண்பிக்காது. அதை கண்டுபிடித்து சரி செய்துவிட்டால் விடை சரியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் லாஜிக் என்பது விடை காண முயலும் புரோகிராம்.  ஒரு முறையிலேயே அல்லது முயற்சியிலேயே சரியான லாஜிக் கிடைக்காது.  ரிசல்ட் தவறாக வந்தால் சரியாக வரும்வரை  லாஜிக்கை மாற்றி மாற்றி முயற்சிப்பதே கம்ப்யூட்டரின் அடிப்படை.

நான் சொல்லும் வாழ்க்கை லாஜிக்கும் இதுபோல்தான்.  தோல்வியையும் வெற்றியின் சிறு தடங்கலாக பார்க்கும் மனோபாவத்தையே லாஜிக் என்கிறேன். வாழ்க்கையிலும் நம் தவறுகளை, இடர்களை சரி செய்ய முயற்சித்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

குட்டைபோல் ஓரிடத்தில் தேங்கிவிடாமல் அருவிபோன்ற ஆர்பரிப்புடனும் ஆறு போல் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மனோபாவத்துடன் வாழ்வதே வாழ்க்கையின் லாஜிக்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

இன்றைய பதிவுக்கான கேள்வியை கேட்டவர்
உயர்திரு. கே. எஸ். சுரேஷ்குமார்

 

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon