ஹலோ With காம்கேர் -79:  கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது?

ஹலோ with காம்கேர் – 79
March 19, 2020

கேள்வி:  கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது?

நேற்று காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு அலுவகம் கிளம்பிச் சென்று பிள்ளையாருக்கு அட்டண்டென்ஸ் கொடுத்தேன். எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அலுவலகம் வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்தபடியே சில முக்கியப் பணிகளை முடித்தேன். பல நாட்களாக மனதுக்குள் உருஏற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு கான்செப்ட்டுக்கு ஸ்டோரி போர்ட் தயாரித்தேன்.

ஆன்லைனில் புரோகிராமர்களுடனும் டிஸைனர்களுடனும் அன்றைய ப்ராஜெக்ட்டுகளில் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து விவாதித்து தேவையான ஆலோசனைகளை கொடுத்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது மதியம் 1 மணியை காட்டியது.

டிராஃபிக் அதிகமில்லை. திடீரென காலச்சக்கரம் 20 வருடங்களுக்கு முன்பு சென்றுவிட்டதோ என்று எண்ணும் வகையில் சாலைகளில் வாகனங்களும் நிதானமாக  சென்றுகொண்டிருந்தன. பல கடைகள் மூடப்பட்டிருந்தன.

மருதாணி இலைகள் கிடைக்காததால் மருதாணிப் பவுடர் வாங்கிவரச் சொல்லி இருந்தார் அம்மா. வழியில் காதி கிராஃப்ட்டில் காரை நிறுத்தினேன்.

அந்தப் பிரிவில் பணியில் இருந்த சேல்ஸ்மேனுக்கு ஐம்பது வயதிருக்கும். அங்கிருந்த  சுக்கு, வல்லாரை, நிலவேம்பு, கறிவேப்பிலை, புதியனா இப்படி பலதரப்பட்ட பொடிவகைகளை என்னிடம் காண்பித்து  ‘இந்தப் பொடி வகைகளை எல்லாம் சாப்பிடுங்கம்மா… நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்’ என்று சொன்னார்.

இந்தப் பொடிகளை எல்லாம் நாங்கள் வீட்டிலேயே தயார் செய்கிறோமே என்று சொல்ல வாய் எடுத்தேன். ஆனால் அவரை பேச விடுவதற்காக வார்த்தைகளை விழுங்கிவிட்டு அமைதியாக அவர் சொல்வதை காதுகொடுத்து கேட்டேன்.

‘வியாபரத்துக்காக சொல்லவில்லைம்மா, இப்போ கொரோனா பரவுதில்லையா அதில் இருந்து தப்பிக்கணும்னா இதுபோல இயற்கை மூலிகைகளை சாப்பிடணும்மா…’

‘ஓ… அப்படியா?’

‘அப்புறம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பா இருக்க நீங்க என்னென்ன செய்யறீங்க…’

‘கையை எப்பவும் கழுவிக்கொண்டே இருக்கணுமாம்… ஏதோ சேனி… சேனி…. இருக்குமாமில்ல… அதை போட்டு கை கழுவ வேண்டுமாம்…’

சேனிடைசர் என்ற பெயரை சொல்ல தெரியாமல் கண்களை மூடி அந்தப் பெயரை நினைவில் கொண்டு வந்து உச்சரிக்கத் தடுமாறி வார்த்தைகளை முடித்தார்.

சேனிடைசர் என்று நான் சொன்னவுடன், ‘ஆமாமம்மா சேனிடைசர் போட்டு கை கழுவணுமாம். அப்படி இல்லன்னா சாதா சோப்பு போட்டாவது கை கழுவணுமாம்… சோப்பு தானேன்னு மட்டமா நினைச்சுடாம செய்யணுமாம்…’

எனக்கு பில் போட்டுக்கொண்டே ‘இதையெல்லாம்தான் நம் பெரியவங்க சொல்லிகிட்டே இருப்பாங்க… நாம கேட்டோமா… இல்லையே… கை கழுவாம சாப்பிட்டாதான் நோய் எதிர்ப்பு சக்தி வரும், பிறர் கடித்த பிறந்தநாள் கேக்கை அப்படியே நாமளும் எச்சில் செய்து சாப்பிடுவதுதான் சமத்துவம் என்றெல்லாம் பேசிப் பேசியே நம்மள நாமே கெடுத்துக்கிட்டோம். கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுத்தை இப்போ கொரோனா சொல்லிக்கொடுக்குது… நாமளும் வாய் மூடி கேட்கிறோம்…’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

வெள்ளந்தியாக உண்மையை பட்பட்டென பேசிய அவர் பேச்சை கவனிப்பதற்காகவே கொரோனா குறித்து அவரிடம் பேச்சை வளர்த்தி கேட்டுக்கொண்டிருந்தேன்.

அன்று கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுத்தைத்தான் இன்று கொரோனா சொல்லிக்கொடுக்கிறது என்று அவர் சொன்ன வாசகத்தில் ‘அன்பாக’,  ‘பிரம்பெடுத்து அடித்து’ என்ற வார்த்தைகளை சேர்த்து அதை மேலும் அர்த்தமுள்ளதாக்கினேன்.

‘அன்பாக’ கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக் கொடுத்ததை கொரோனா ‘பிரம்பெடுத்து அடித்து’ சொல்லிக்கொடுக்கிறது. நாமும் கட்டுப்படுகிறோம்.

இதையே மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சுத்தம் சுகாதாரத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவோமே. நம் சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை விட்டுச் செல்வதைவிட நம்மால் வேறென்ன சொத்து சேர்த்து வைக்க முடியும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari