ஹலோ With காம்கேர் -87:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது?


ஹலோ with காம்கேர் – 87

March 27, 2020

கேள்வி:  உள்ளே, வெளியே என்னதான் நடக்கிறது?

தொழில்நுட்பத்துறையில் இருக்கிறீர்கள், கடவுள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களே என சிலர் உண்மையான ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். ஒருசிலர் தங்கள் மனதில் இருக்கும் கிண்டலை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாக காட்டிக்கொள்வதைப் போல கேட்பார்கள்.

எந்தத் துறையில் இருந்தால் என்ன, நம்பிக்கை என்பது அவரவர்கள் பிறந்து வளர்ந்த சூழலையும், வாழ்க்கைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களையும் பொருத்தது. எல்லாவற்றையும் தாண்டி நம்பிக்கை என்பதே ஒரு நம்பிக்கைத்தானே.

‘If can’t go Outside, Go Inside’ என்று ஒரு பொன்மொழியை படித்தேன். அதற்குப் பொருத்தமாக தியானம் செய்யும் நிலையில் உள்ள ஒரு மனிதனின் புகைப்படம் வரையப்பட்டிருந்தது. இன்றைய சூழலுக்கு அது மிகவும் பொருத்தமாக இருந்தது.

நித்தம் நமக்கு உள்ளேயும் வெளியேயும் பல அற்புதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கு உள்ளே நடக்கும் அற்புதங்களுக்கு நம் நம்பிக்கை மட்டுமே சாட்சி, நமக்கு வெளிய நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு நம் அறிவே சாட்சி.

கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு உள்ளே நிகழும் அற்புதம். அதற்கு அந்த நம்பிக்கையே சாட்சியாகும். அந்த நம்பிக்கைக்கு உருவகம் கிடையாது. அதனால் அவரவர்கள் உணர்ந்தால்தான் உண்டு. அதை நிரூபணமும் செய்ய முடியாது.

ஆனால், நம் உடலுக்கு வெளியே நடக்கும் பலவற்றுக்கு அறிவு சாட்சியாகும்.

உதாரணத்துக்கு,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குட்டிக் குட்டி குழந்தைகள் அற்புதமாக பாடுவதைப் பார்க்கும்போது அவர்களின் குரல் வளமும் அபார தன்னம்பிக்கையும் அந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியும் நம்மை வியக்க வைக்கிறதல்லவா. பலருடன் போட்டி போட்டு ஒவ்வொரு நிலையாக வென்று முன்னேறி வருவதுதான் அந்தக் குழந்தை திறமைசாலி என்பதற்கு சாட்சி.

ஒரு கைராசி மருத்துவருக்காக தினமும் அவர் க்ளினிக் வாசலில் ஒரு கூட்டமே காத்திருப்பதை பார்க்கிறோம். அந்தக் கூட்டமே அந்த மருத்துவர்  திறமைசாலி என்பதற்கு சாட்சி.

இதையெல்லாம் நம் அறிவு எடுத்துச் சொல்லி நம்ப வைக்கும்.

இதுபோல கடவுள் இருக்கிறார் என்பது நாம் உள்ளுக்குள் உணரும் அற்புதம். அதை நம்மால் மட்டுமே உணர முடியும். நம் அறிவைக் கொண்டோ அல்லது பிறரது அறிவாலோ அதை நிரூபணம் செய்ய முடியாது. சுருங்கச் சொன்னால், அதற்கு நம்பிக்கையைத் தவிர வேறு எதனாலும் நிரூபணம் செய்யும் சக்தி கிடையாது.

வாழ்க்கையில் ஏதேனும் ஒருசில விஷயங்களையாவது கேள்விகள் கேட்டு, ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பிடிப்பு இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் கேள்வி, எல்லாவற்றிலும் ஆராய்ச்சி, எல்லாவற்றுக்கும் விவாதம் என்றிருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்து இயந்திரங்களாகி விடுவோம்.

கொரோனோ எனும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், காற்றிலும் இருப்பான், நீரிலும் இருப்பான்’ என நம் ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. நாமும் கட்டுப்படுகிறோம்.

நம் கண்களுக்குத் தான் தெரியவில்லையே. பிறகு எதற்காக கட்டுப்பட வேண்டும் என எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம்தானே.  உயிர் பயம் நம் கண்களுக்குப் புலப்படாத வைரஸ் இருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறது.

கொரோனா நமக்கு உள்ளேயும் வெளியேயும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

கிடைத்திருக்கும் இந்த விடுமுறை காலத்தை நம் அகத்தை செம்மைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துவோமே!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari