ஹலோ With காம்கேர் -93:  எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே?

ஹலோ with காம்கேர் – 93
April 2, 2020

கேள்வி:  எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே?

உடல் உபாதைகள், குடும்பச் சூழல், சமூக பாதிப்புகள் இப்படி எத்தனையோ சூழல்களினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்களை கேள்விப்படும்போது, நமக்கெல்லாம் இதுபோல சூழல் வந்தால் அவ்வளவுதான் தாங்கவே முடியாது என்றோ போய் சேர்ந்திருப்போம் என்று நினைப்போம்.

ஆனால் அது அப்படியல்ல.

நம் எல்லோருக்குமே எல்லா சூழலையும் எதிர்கொள்ளும் தாங்கும் சக்தி தானாகவே வந்துவிடும். இயற்கை அப்படித்தான் நமக்கு உடல் வலிமையையும், மன வலிமையையும் கொடுத்துள்ளது.

இதை இந்த வீட்டடங்கு / ஊரடங்கு / உலகடங்கு காலகட்டம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது.

நன்றாக கவனித்துப் பார்த்தால் எந்த அடையாளங்களும் இல்லாமல் சாதாரணமாக வாழ்ந்து வருபவர்களைவிட தன்னம்பிக்கைக்காக(வே) குரல் கொடுத்துவருபவர்களும் சாதனையாளர்கள் என்று பெயரெடுத்தவர்களும் பிரபலங்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டவர்களும் சட்டென ஒடிந்துவிடுகிறார்கள் சில சந்தர்பங்களை எதிர்கொள்ள முடியாமல்.

காரணம், முன்னவர்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து மீள்வது குறித்தே யோசிப்பார்கள். அதனால் அதற்கானத் தீர்வு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள்.

பின்னவர்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து மீள்வதைவிட தங்கள் இமேஜ்களில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்கவே பிரயத்தனப்படுவார்கள். அது முடியாதபோது அவர்களைப் பொறுத்தவரை பிரச்சனைகள் இயல்பைவிட பூதாகரமாகிறது.

மனஉறுதி உள்ளவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்ற உளவியல் அடிப்படையிலும், படித்தவர் படிக்காதவர் இளைஞர்கள் முதியோர்கள் ஏழைகள் பணக்காரர்கள் என எந்த பாகுபாடின்றியும், சாதி மத இன பேதமின்றியும் அத்தனை பேரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரஸ்.

இப்படியாக இயற்கை நம் அனைவரையும் ஒருதுளி பேதமின்றி ஒரே தராசில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது.

கொஞ்ச நாள் ஓய்வு வேண்டுமே என ஏங்கிக்கொண்டிருந்த பூமித் தாய்க்கு வலுக்கட்டாயமாக கொரோனா அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அமைதியான நிலம், மாசில்லா வானம், சுத்தமான காற்று, கலங்கப்படுத்தப்படாத நீர்நிலைகள் என புது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கின்றன பஞ்ச பூதங்களும்.

கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் கோயில்போல, நம்மைத் தாங்கும் இந்த  பூமியும் புத்தம் புதிதாய் புத்துணர்வுடன் புது மெருகுடன் இயங்குவதற்கு கோலாகலமாய் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களினால் மன இறுக்கம் உண்டாகி தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உண்டாவதாய் பல தரப்பில் இருந்தும் கேள்விப்படுகிறோம்.

சமூக வலைதளங்களிலும் இறுக்கமான பதிவுகளையே அதிகம் காணமுடிகிறது.

இப்படி எதிர்மறையான எண்ணங்களை பிரதிபலிக்கும் சூழலில் பளிச்சென இரண்டே இரண்டு வரிகளில் நேற்று ஒரு பதிவு கவனத்தை ஈர்த்தது.

‘இன்னும் 14 நாள் மட்டும்தானே பாக்கி இருக்கு! திரும்பவும் அதே வேலை, அதே ஃபைல்…’

இந்த உலகமே அழிந்துவிடப் போகிறது என்ற நோக்கில் பயந்துகொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இந்தப் பதிவை எழுதியவரின் (@ கோபி சரபோஜி) தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்.

கடினமான இன்றைய நிலைமை கூடிய விரைவில் சரியாகி இயல்பு நிலைக்குத் திரும்பப் போகிறது என்பதை இதைவிட வேறெப்படி சொல்லிவிட முடியும்.

அந்தப் பதிவை எழுதியவர் எந்த நோக்கத்தில் எழுதினாரோ, எனக்கு அதைப் படிக்கும்போது எனக்குள் பாசிட்டிவ் வைப்ரேஷனே நிரம்பியது.

அப்போ உங்களுக்கு?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 7 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari