ஹலோ With காம்கேர் -94: ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 94
April 3, 2020

கேள்வி:  ஆபத்து கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கிறது என்பதாவது தெரியுமா?

‘Objects in the mirror are closer than they appear’ என்று காரின் இரண்டு பக்கவாட்டு கண்ணாடிகளிலும் எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அந்த  கண்ணாடிகள் நம் காருக்கு பக்கவாட்டின் உள்ள டிராஃபிக்கை கவனித்து பத்திரமாக காரை ஓட்டுவதற்காக பயன்படுகின்றன.

ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து அந்த கண்ணாடி மூலம் நாம் பார்க்கும் வாகனங்களும், உருவங்களும் தொலைவில் தெரிவதைப்போல இருக்கும். ஆனால் அவை அருகில் வந்துகொண்டிருக்கும். கவனமாக பார்த்து காரை ஓட்ட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை வாசகமே அது.

அதைப்போல்தான் உலக அளவில் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் மெதுவாக பரவுவதைப் போல தெரிகிறது. நம்மை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது கைக்கு எட்டும் தொலைவில் நம் ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் ‘நாம் எப்போதடா கதவை திறப்போம்’ தொற்றிக்கொள்ள ஆள் கிடைக்காதா என பேயாய் அலைந்துகொண்டிருக்கிறது.

கொஞ்சம் இடம் கொடுத்தாலும் போச்சு. நம்முடன் ஒட்டி உறவாட நம் உடம்பில் வந்து ஒட்டிக்கொண்டுவிடும். பிறகு ‘ஐயோ அம்மா’ என புலம்புவதால் எந்தப் பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை.

ஆனால் ஊரடங்கை பலர் மதிக்காமல் செயல்படுவதும், அந்த சட்டத்துக்கு சாதி மத இன சாயங்கள் பூசுவதாலும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். சட்டம் போட்டவர்கள் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கலாம், அவர்களின் கொள்கைகள் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவர்களும் எங்கும் சென்றுவிடப் போவதில்லை. நாமும் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. எனவே எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு வீட்டு வாசலில் காத்திருக்கும் கொரோனா எமனை விரட்டி அடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்வோம்.

கொரோனாவை விரட்டி அடிக்க ஆராய்ச்சிகள் செய்து மருந்து கண்டுபிடிக்கும் கல்வியும் ஆற்றலும் சூழலும் நமக்கு இல்லாமல் இருக்கலாம். வீட்டு வாசலில் வெறியுடன் காத்திருக்கும் கொரோனாவை வலிய சென்று ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்காமல் இருக்கும் மனவலிமை நம் ஒவ்வொருவரிடமும் உள்ளதே.

ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போதும் ஆபத்து ஊர் எல்லையில் இல்லை, உங்கள் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

YES. ‘Objects in the mirror are closer than they appear’. இது வாகனங்களுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 29 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon