ஹலோ With காம்கேர் -137: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன?

ஹலோ with காம்கேர் – 137
May 16, 2020

கேள்வி: வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல். வேறென்ன?

நேற்று சமையலுக்கு காய்கறிகள் நறுக்கி தயார் செய்து வைத்த பிறகு குக்கர் வைக்கும் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிட்டது. புது சிலிண்டரை இணைக்கும்போது கொஞ்சம் பிரச்சனை. சிலிண்டரில் கேஸ் லீக் இருந்தது. அப்பா சில முறை முயன்ற பிறகும் சரி ஆகாததால் ஆஃப் செய்துவிட்டு சர்வீஸ் செண்டருக்கு போன் செய்தார். இரண்டு மணி நேரத்தில் சர்வீஸ் மேன் வருவார் என்றார்கள்.

கொரோனா சிந்தனைகள் எங்களுக்குள் எட்டிப் பார்த்தது. அவரை சமையல் அறை வரை வந்து சர்வீஸ் செய்யச் சொல்ல தயக்கமாக இருக்க அடுப்பையும் சிலிண்டரையும் வீட்டில் வாசலுக்கு கொண்டு வைத்துக்கொண்டோம்.

அவசர சமயத்துக்கு மட்டும் பயன்படுத்தும் ரைஸ் குக்கரையும் இண்டக்‌ஷன் ஸ்டவ்வையும் எடுத்து சமையலுக்கு தயார் செய்தார் அம்மா. ரைஸ் குக்கரில் சாதம் வைத்தார்.

இதற்குள் அப்பா இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் சாம்பாருக்கு தயார் செய்தார். புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, துவரம் பருப்பு பயத்தம் பருப்பு போன்றவற்றை வழக்கமான அளவில் போட்டு கொதிக்க வைத்தார்.

அப்பா நின்றுகொண்டே சாம்பார் கொதிப்பதை பார்த்துக்கொண்டிருந்தார். கமகமவென வழக்கத்துக்கு மாறாக நல்ல வாசனை.

இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் சாம்பார் கடல் அலைபோல உள்சென்று அடங்கி பின்னர் நுரைகளுடன் மேலெழும்பி கொதிப்பது வித்தியாசமாக இருந்தது.

நேற்று கதம்ப சாம்பார். மைக்ரோ வேவ் ஓவனில் பொதுவாக சமைக்க மாட்டோம். அதை அப்பளம் சுடுவதற்கும், காபி போடுவதற்கும் மட்டும்தான் பயன்படுத்துவோம். ஆனால் நேற்று நறுக்கி வைத்திருந்த செள செள, பீன்ஸ், முள்ளங்கி போன்றவற்றை நேரடியாக கொதிக்கும் சாம்பாரில் போட்டால் வேக நேரம் பிடிக்கும் என்பதால் அவற்றை அம்மா மைக்ரோ வேவ் ஓவனில் கொஞ்சம் அரைப்பதத்தில் வேக வைத்துக் கொடுத்தார்.

அப்பா அவற்றை கொதிக்கும் சாம்பாரில் ஏற்கெனவே நேரடியாக வெந்துகொண்டிருக்கும் தக்காளி, குடைமிளகாய், சின்ன வெங்காயத்துடன் சேர்த்துப் போட்டு கொதிக்க வைத்தார். கொதிக்கும்போது அதை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.

சாதாரணமாக குக்கரில் கேஸில் வைத்தால் இத்தனை கவனிப்பு அவசியம் இருக்காது. குக்கரில் இருந்து காய்கறிகளை எடுத்து கொதித்துக்கொண்டிருக்கும் உப்பு புளி மிளகாய்பொடி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு இறக்க வேண்டியதுதான். ஆனால் இண்டக்‌ஷன் ஸ்டவ் என்பதால் பொங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொதிநிலைக்கு ஏற்ப வெப்பநிலையை கூட்டிக் குறைக்க வேண்டும் என்பதால் இத்தனை சோடச உபசாரம்.

சில நிமிடங்களில் சாம்பார் நல்ல பதத்துக்கு வர, கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு பெருங்காயப் பவுடர் தூவி இறக்கி ஓரமாக மூடி வைத்தார்.

இதற்குள் ஓவனிலேயே அம்மா பீன்ஸ் கறிக்கு பயத்தம் பருப்புடன் வேக வைத்திருக்க அதை அப்பா கறியாக வதக்கினார்.

நேற்று சமையலின் சுவை பிரமாதம்.

சாப்பிடும்போது  அப்பாவும் அம்மாவும் சுவாரஸ்யமாக அந்த காலத்து சமையல் முறைகளை சொன்னார்கள். அவர்கள் காலத்தில் அதாவது அவர்கள் அம்மா காலத்தில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. மண் அடுப்பு. ஒற்றை மண் அடுப்பு, இரட்டை மண் அடுப்பு (கொடி அடுப்பு)  இவைதான். இரவே அவற்றை சுத்தம் செய்து அடுப்பின் மேலேயும் விறகு வைக்கும் இடத்தின் முகப்பிலும் கோலம் போடுவார்கள். சிலர் குமுட்டியையும் பயன்படுத்துவார்கள்.

காலையில் சமையலுக்கு முதலில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். அதற்குள் அரிசியை நன்றாக களைந்து எடுத்துவந்து இரண்டு அரிசியை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு கண்களை மூடி ‘ராமா கிருஷ்ணா’ என பிரத்தனை செய்துவிட்டு மீதி அரிசியை போடுவார்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் இரட்டை அடுப்பைப் பயன்படுத்துவார்கள். இரு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பில், ஒரு பகுதியில் அதாவது பெரிய பாத்திரம் வைக்கும் பகுதியில் விறகு நுழைப்பதற்கான வாய் இருக்கும். சிறிய பாத்திரம் வைக்கும் பகுதியில் விறகு வைக்கும் இடம் இருக்காது. பெரிய பாத்திரம் வைக்கும் அடுப்பில் இருந்து, சிறிய பாத்திரம் வைக்கும்  அடுப்புக்கு தீச்சுடர் மட்டும் செல்ல வழி இருக்கும். அந்த வெப்பத்திலேயே இரண்டு அடுப்புகளும் ஒரே நேரத்தில் செயல்படும்.

பெரிய பாத்திரம் வைக்கும் அடுப்பில் சாதமும், சிறிய அடுப்பில் சாம்பார் ரசத்துக்குத் தேவையான பருப்பையும் வேக வைப்பார்கள். அது முடிந்ததும் பெரிய பாத்திரம் வைக்கும் பகுதியில் சாம்பார், சிறிய பாத்திரம் வைக்கும் பகுதியில் ரசம் இப்படி மாறி மாறி சமைப்பார்கள்.

சமைக்கும்போது அந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயேதான் இருப்பார்கள். கொதிக்கும் சாம்பார், ரசம், வதங்கும் பொறியல் இவற்றை கண்களால் பார்த்துப் பார்த்து ரசனையுடன் செய்வார்கள். தங்களைக் கொண்டாட்டத்துடன் ரசித்துப் பார்த்துக்கொண்டே சமைப்பவர்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் கொடுக்காமல் கைமேல் பலன் கொடுக்குமாம் அன்றைய சமையல் முறை.

பிராத்தனையுடன் தொடங்கி, கொண்டாட்டத்துடன் தயாராகி, காக்கைக்கு முதல் உணவாகி பின்னரே மனிதர்கள் இலையில் பரிமாறப்படும்.

அதனால்தான் சொல்கிறேன், வெறும் அரிசி பருப்பு உப்பு புளி மட்டுமல்ல சமையல்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 11 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari