ஹலோ With காம்கேர் -154:  மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்?

ஹலோ with காம்கேர் – 154
June 2, 2020

கேள்வி:   மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்?

என்னுடைய படைப்புகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக கவனித்து வரும் வாசகர். பெரியவர். ஊர் மதுரை. ஹோமியோபதி மருத்துவர். 1992-களில் இருந்தே நான் எழுதிவரும் தொழில்நுட்பப் புத்தகங்களையும், பத்திரிகைகளில் எழுதி வரும் கட்டுரைகளையும், தொலைக்காட்சிகளில் நான் நடத்தி வரும் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளையும் உன்னிப்பாக கவனித்து வருபவர்.

அப்போதெல்லாம் மாதம் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் தபாலில் என் படைப்புகள் குறித்து தன் கருத்துக்களை விரிவாக பக்கம் பக்கமாக கடிதமாக எழுதி அனுப்புவார். எனக்கு மட்டும் அல்ல. புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளருக்கும் ஒரு காப்பி அனுப்பி வைப்பார். இதனால் என் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு என் மீது தனி மரியாதை உண்டு.

அவர் அனுப்பும் கடிதங்களில் என்னுடைய புத்தகங்கள் குறித்தும், என் எழுத்தின் நடை குறித்தும், மல்டிமீடியா புத்தகங்கள் போல் படங்களுடன் எழுதி விளக்கும் நுட்பம் குறித்தும் பாராட்டியிருப்பார். ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் குறிப்பிட்டிருப்பார்.

எங்கள் காம்கேர் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளில் களம் இறங்கிய காலகட்டம் அது. ஜெயா டிவியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை ‘இனிய இல்லம்’ பகுதியில் நடத்தி வந்தேன். டிடிஎன் தொலைக்காட்சி மூலம் வெளிநாட்டு தமிழர்களுக்காக தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருந்தேன்.

அந்த நிகழ்ச்சிகள் குறித்தும் கடிதத்தில் விமர்சனம் செய்திருப்பார்.  பதிப்பாளருக்கு நான் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்துத் தெரிந்து என்னவாகப் போகிறது என நான் நினைத்ததுண்டு. ஆனால் அவர் கொடுக்கும் இதுபோன்ற அப்டேட்டுகள் பதிப்பாளர்கள் மத்தியில் எனக்கான தனி கெளரவத்தை ஏற்படுத்தியது. பதிப்பாளர்கள் போன் செய்து ‘மேடம் உங்கள் மதுரை ஃபேன் உங்கள் லேட்டஸ்ட் புத்தகம் குறித்து கடிதம் அனுப்பி இருந்தார்’ என சொல்வது வாடிக்கையானது.

அப்போதே அவருக்கு ஐம்பது வயதிருக்கும். இப்போது 80 வயதை நெருங்கி இருப்பார்.

நடுவில் கொஞ்ச காலம் அவரிடம் இருந்து தகவல் ஏதும் இல்லை.

திடீரென நேற்று காலை போன் செய்து பேசினார். நடுவில் இத்தனை வருடங்கள் காணாமல் போனதற்குக் காரணம் கேட்டேன். பக்கவாதத்தினால் ஏழெட்டு வருடங்கள் படுத்தப் படுக்கை. ஒரு கை செயலிழப்பு. மனைவியின் இழப்பு. மகன் திருமணம் ஆகி ஆஸ்திரேலியாவில் பணி. திருமணம் ஆன மகளுடன் பேரன் பேத்திகளுடன் மதுரை வாசம்.

இதுவரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர் தன் ஹோமியோ க்ளினிக்கை கவனிக்க யாரும் இல்லாததால் மூடிவிட்டதாகச் சொன்னபோது கொஞ்சம் தடுமாறினார். வயோதிகத்தினால் குரல் நடுக்கமும் சேர்ந்துகொண்டு பேச்சு குழறியது. போனில் அவருடன் பேசியதே இல்லை. இதுவே முதல் முறை.

என் தொடர்பு எண்ணை பதிப்பாளரிடம் கேட்டு வாங்கியதாகச் சொன்னார்.

இப்படியாக பரஸ்பர நலன் விசாரிப்புக்குப் பிறகு நான் எழுதி வரும் ஃபேஸ்புக் பதிவுகள் குறித்துப் பேசினார். ஃபேஸ்புக்கில் மூன்று வருடங்களாக அக்கவுண்ட் வைத்திருப்பதாகவும், எங்கள் பிசினஸ் பக்கத்தை சப்ஸ்க்ரைப் செய்திருப்பதாகவும், அதன் மூலம் அப்டேட்டுகளை தெரிந்துகொள்வதாகவும் கூறினார். வலது கை செயலிழந்து விட்டதால் , நான் எழுதி இருந்த வாயால் பேசினாலே டைப் ஆகும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வாட்ஸ் அப், மெசேஸ் அனுப்புவதாக பெருமையாகச் சொன்னார்.

‘சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்காமே, பத்திரமா இருங்கள்…’ என்றார் கூடுதல் அக்கறையுடன்.

என் நிறுவனம் குறித்தும் அதன் வளர்ச்சிகள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். என் பெற்றோரை நலன் விசாரித்தார். இப்படியாக சென்று கொண்டிருந்த பேச்சு என் படைப்புகள் பக்கம் திரும்பியது.

‘தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, வாழ்வியலிலும் கலக்குகிறீர்கள். நான் உங்கள் தொழில்நுட்பப் புத்தகங்களைத்தான் அதிகம் வாசித்திருக்கிறேன். வாழ்வியல் புத்தகங்களை சமீபத்தில்தான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் தினந்தோறும் ஃபேஸ்புக்கில் வாழ்வியல் குறித்து நேர்மறையாக எழுதுபவை அட்டகாசமாக உள்ளது…’

நான் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் நன்றி நன்றி என பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

‘மதுரை வந்தால் வீட்டிற்கு வாருங்கள். என் மகளிடம் உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன். அவள் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே உங்களை ரோல் மாடலாக வைத்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன். இப்போது என் பேத்திக்கு சொல்கிறேன்…’ என உற்சாகத்துடன் பேசினார்.

கடைசியாக அவர் சொன்ன ஒரு கருத்தில் கண்கள் பனித்தன.

‘பெரும்பாலானோர் வாழ்வதற்காக எழுதுகிறார்கள், நீங்கள் வாழ்வதை எழுதுகிறீர்கள். அதுதான் மற்றவர்களுக்கும் உங்களுக்குமான வித்தியாசம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார். அமோகமாக இருங்கள்…’

இப்படித் தானாகவே கூப்பிட்டு ஆசி வழங்கும் பெரியவர்கள் என் நலன் விரும்பிகளாக அமையப் பெற்றது என் பாக்கியமன்றோ?

நமக்கான பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது, யாரோ ஒருவர் தூரத்தில் இருந்து ‘நன்றாக ஓடுகிறாய். பார்த்து கவனமாக ஓடு’ என உரக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினால் எப்படி இருக்கும்.

அப்படியானதொரு உத்வேகம் தொற்றிக்கொண்ட மகிழ்ச்சியில் நேற்றையப் பொழுது பாக்கியம் பெற்றது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari